Friday 18 May 2018

கைவிடப்படும் ஜிஎஸ்டி!

இந்தியாவுக்கு முன் கடைசியாக ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை அமல்படுத்திய நாடு மலேசியா. அந்நாட்டில் வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி முறையை ரத்து செய்ய அந்நாட்டில் புதிதாகப் பதவியேற்றுள்ள அரசு முடிவு செய்துள்ளது.

புதிய ஜிஎஸ்டி வரி முறையால் ஏராளமான பலன்கள் கிடைக்கும் என்று ஆர்வத்துடன் இந்திய அரசு பிரச்சாரம் செய்துகொண்டிருக்கும் வேளையில், மலேசியாவில் புதிதாகப் பதவியேற்றுள்ள அரசு ஜிஎஸ்டியை ஜூன் 1ஆம் தேதி முதல் கைவிடுவதாக மே 16ஆம் தேதியன்று அறிவித்துள்ளது. ஜிஎஸ்டி வரியைப் பூஜ்யம் விழுக்காடாகக் குறைக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளதால் செலவினங்கள் குறையும் என்றாலும்கூட, அந்நாட்டின் நிதி நிலையில் நெருக்கடி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2015ஆம் ஆண்டில் மலேசியாவில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. அனைத்துப் பொருள்களுக்கும் 6 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருந்தது. மலேசியாவில் அதிகரித்துவரும் செலவினங்களை சரிசெய்வதற்காக ஜிஎஸ்டி வரி முறை ரத்து செய்யப்படும் என்று தற்போது ஆட்சியில் உள்ள பிரதமர் மஹதிர் முகமது தேர்தல் பிரச்சாரத்தின்போது வாக்குறுதி அளித்திருந்தார்.

இந்தியாவில் 0%, 5%, 12%, 18%, 28% என்று ஐந்து விகிதாச்சாரங்களில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. ஆனால், மலேசியாவிலோ அனைத்துச் சரக்குகளுக்கும், சேவைகளுக்கு ஒரே விகிதாச்சாரமாக 6 விழுக்காடு வரி விதிக்கப்படுகிறது. மலேசியாவில் ஜூன் 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி பூஜ்யம் விழுக்காடாக மாறும் என்று மலேசிய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி கைவிடப்படுவதால் மலேசியாவின் வருவாய் கணிசமாகச் சரியும் என்றும், நிதிப் பற்றாக்குறை விரிவடையும் என்றும் மூடீஸ் நிறுவனம் கருத்துத் தெரிவித்துள்ளது.