Saturday 29 September 2018

இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் (ஐஆர்டிஏஐ) இரு சக்கர வாகனங்கள், கார்களுக்கு அறிவித்த மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

நீண்ட காலத்துக்கான கட்டாய காப்பீடு மட்டுமின்றி ரப்பர், ஸ்டீல் மூலப்பொருட்கள் விலை உயர்வால் கடந்த சில மாதங்களாகவே நெருக்கடியை சந்தித்து வருவதாகவும், வாகன விற்பனை விலை கடந்த 2 ஆண்டில் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகவும் டூவீலர் உற்பத்தி துறையினர் தெரிவிக்கின்றனர். இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் (ஐஆர்டிஏஐ) இரு சக்கர வாகனங்கள், கார்களுக்கு அறிவித்த மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. மேலும் கார்களுக்கு 3 ஆண்டுகளுக்கும், இரு சக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டுகளும் இன்சூரன்ஸ் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காப்பீட்டு காலத்தை அதிகரித்ததால் அதற்கான பிரீமியம் தொகை அதிகமாகியுள்ளது. இரு சக்கர வாகனங்களுக்கு 75 சிசி மற்றும் அதற்கு குறைவான இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு வருட பாலிசி கட்டணம் 427 என்று இருந்தது. இது தற்போது 5 வருட பாலிசி என்பதால் 1,045 என்று கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதாவது, பாலிசிக்காக கூடுதலாக ரூ.618 செலுத்த வேண்டும். இதுபோல் 75 முதல் 150 சிசி டூவீலர்களுக்கு இன்சூரன்ஸ் 720ல் இருந்து 3,285 ஆகவும், 150 சிசி முதல் 350 சிசி வரை 980ல் இருந்து 5,453ஆகவும், 350 சிசிக்கு மேல் 2,323ல் இருந்து 13,034 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி டூவீலர் வாங்குபவர்கள் காப்பீட்டுக்கு என கூடுதலாக 618 முதல் 10,711வரை கூடுதலாக செலுத்த வேண்டியுள்ளது. இந்த காப்பீடு அதிகரிப்பு டூவீலர் விற்பனையில் சற்று மந்த நிலைைய ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதுமட்டுமே காரணமல்ல என்கின்றனர் வாகன உற்பத்தியாளர்கள். வாகனம் மற்றும் அதன் பாகங்கள் தயாரிப்புகளுக்கான மூலப்பொருட்களான ஸ்டீல், ரப்பர் விலை உயர்ந்துள்ளது. சில நிறுவனங்கள் டூவீலர்களை அதிகம் ஏற்றுமதி செய்கின்றன. இவற்றுக்கு மேற்கண்ட காரணங்களால் பெரிய சிக்கல் இல்லை. ஆனால், உள்நாட்டு சந்தையை மட்டுமே நம்பியுள்ள டூவீலர் உற்பத்தியாளர்கள் சற்று கலக்கம் அடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், டூ வீலர்களின் விற்பனை விலை கடந்த 2 ஆண்டுகளில் 10 சதவீதம் முதல் 25 சதவீதம் அதிகரித்துள்ளது. ஸ்டீல், ரப்பர் உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை உயர்ந்ததால் தயாரிப்பு செலவு கையை கடிக்கிறது. தற்போது காப்பீடும் சேர்ந்து விட்டது. சந்தையில் போட்டியாளர்களை சமாளித்து தக்க வைக்க அதிக லாபம் இன்றி விலை நிர்ணயம் செய்கிறோம். ஆனால், எந்த அளவுக்கு இந்த இழப்பை தாங்குவது என தெரியவில்ைல. குறிப்பாக கடந்த 7 மாதங்களாகவே பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் விலை அதிகரிப்பும் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என டூவீலர் உற்பத்தி துறையினர் தெரிவிக்கின்றனர்.இதுதவிர, ஏபிஎஸ் தொழில்நுட்பம் கட்டாயமாக இடம்பெற வேண்டும் என்ற விதி இன்னும் 6 மாதங்களில் அமலாகிறது. இதுவும் தயாரிப்பு செலவுகளை அதிகரிக்கும். மேலும் 2020 ஏப்ரல் 1 முதல் புதிய சுற்றுச்சூழல் விதிகளுக்கு ஏற்ப தொழில்நுட்ப மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. * ஏபிஎஸ் தொழில்நுட்பம் கட்டாயம் மற்றும் புதிய சுற்றுச்சூழல் விதிகளுக்கு ஏற்ப இன்ஜின் தொழில்நுட்பங்களில் மாறுதல் ஆகியவையும் உற்பத்தி செலவை அதிகரிக்கச் செய்யும்.* ஸ்டீல், ரப்பர் விலை உயர்வு காரணமாக உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ளன.* புதிய வாகன காப்பீடு விதிகளால் வாடிக்கையாளர்கள் டூவீலர்களுக்கு 618 முதல் 10,711வரை கூடுதலாக செலுத்த வேண்டியுள்ளது.

Friday 28 September 2018

வாடிக்கையாளரை கவர வரிந்து கட்டும் நிறுவனங்கள்* டிசம்பருக்கு பிறகு விலையை உயர்த்த வாய்ப்பு

ஏசி, வாஷிங்மெஷின் உள்ளிட்ட 19 பொருட்களுக்கான சுங்க வரியை மத்திய அரசு உயர்த்தியது. இதை தொடர்ந்து, பண்டிகை சீசன் விற்பனையில் வாடிக்கையாளர்களை கவர தாராள தள்ளுபடி சலுகைகளை நிறுவனங்கள் அறிவிக்க தொடங்கியுள்ளன. நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் வகையில், ஏசி, பிரிட்ஜ், 10 கிலோவுக்கு கீழ் உள்ள வாஷிங்மெஷின்கள், ஸ்பீக்கர், ரேடியல் டயர்கள், பிளாஸ்டிக் பாக்ஸ், ஹாட்பேக், சூட்கேஸ் உள்ளிட்ட 19 பொருட்களுக்கான சுங்க வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதில் குறிப்பாக, பிரிட்ஜ், ஏசி, வாஷிங்மெஷின் மீதான வரி 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. உடனடியாக இந்த வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ளது. தீபாவளி, கிறிஸ்துமஸ் என பண்டிகை சீசன்கள் எதிர்வரும் நிலையில், இந்த வரி விதிப்பு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமின்றி நிறுவனங்களுக்கும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. எனவே, பண்டிகை விற்பனையை உயர்த்தும் வகையில் பல்வேறு சலுககைளை நிறுவனங்கள் அளிக்க முடிவு செய்துள்ளன. இதுகுறித்து பிரபல வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தினர் சிலர் கூறியதாவது: பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டியை தொடர்ந்து வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை சற்று டல் அடித்தது. புதிய மாடல்கள் களம் இறக்கியபோதும், விலை உயர்வால் மக்கள் சிலர் தயக்கம் காட்டினர். ஜிஎஸ்டி அமலுக்கு முன்பு ஸ்டாக்கில் இருந்த பொருட்கள் விற்பனை அமோகமாக இருந்தது. ஜிஎஸ்டி உயர்வு வீட்டு உபயோக பொருட்களில் ஏசி விற்பனையைத்தான் பெரிய அளவில் பாதிக்கச் செய்தது. நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்த மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. எனினும், ஏற்கெனவே, ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் இறக்குமதி செலவு எகிறியுள்ளது. அதோடு வரியும் உயர்த்தப்பட்டுள்ளதால் அக்டோபர் மாதத்தில் இறக்குமதி செலவு அதிகரிக்கும். கம்ப்ரசர்கள் இறக்குமதி வரி உயர்வு பிரிட்ஜ் உற்பத்தி செலவை உயர்த்தும். இதுபோல் ஸ்பீக்கர்களில், வெளிநாடுகளில் இருந்து மிக உயர்ந்த தரத்திலான நிறுவன ஸ்பீக்கர்கள் மட்டுமின்றி, சாதாரண விலையில் விற்கப்படும் ஸ்பீக்கர் விலையும் அதிகரிக்கவே செய்யும். ஏனெனில், சீனாவில் இருந்து ஸ்பீக்கர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் அதிகமாக இறக்குமதி செய்யப்படுகின்றன. சில ஏசி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின்கள் கூட சீனாவில் இருந்து இறக்குமதியாகின்றன. பண்டிகை விற்பனையை கருத்தில் கொண்டு தள்ளுபடி சலுகைகள் அளிக்க முடிவு செய்துள்ளோம். இருப்பினும் டிசம்பர் அல்லது ஜனவரியில் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்றனர்.* ஜிஎஸ்டியை தொடர்ந்து, ரூபாய் மதிப்பு சரிவால் இறக்குமதி செலவுகள் உயர்ந்து–்ள்ளன. எனவே, வீட்டு உபயோக பொருட்கள் மீதான வரியை இரட்டிப்பாக்கியது, தொழில்துறையினருக்கு பேரிடியாக அமைந்துள்ளது.* தற்போது பண்டிகை சீசனை கருத்தில் கொண்டு தள்ளுபடி சலுகை வழங்கினாலும், டிசம்பர் அல்லது ஜனவரியில் விலை உயர்–்த்த வேண்டிய நிலை உருவாகும்.* ஸ்பீக்கர் உள்பட பல சீனாவில் இருந்து இறக்குமதியாகின்றன. எனவே இவற்றின் விலையும் அதிகரிக்கும்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பால் வங்கிகள், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கொடுத்த ஆதார் விவரங்களை நீக்கக் கோருவதற்கு வாடிக்கையாளர்களுக்கு உரிமை உள்ளது

அரசு சலுகைகள் பெறுவதற்கு ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, வங்கிக்கணக்கு துவக்குதல், சிம்கார்டு வாங்குதல், ரயில், விமான டிக்கெட்கள், இன்சூரன்ஸ் என பலவற்றுக்கும் ஆதார் கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியானது. இதை தொடர்ந்து வங்கிகள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள்ஆதார் விவரங்களை சமர்ப்பிக்க கோரின. இதை எதிர்த்து தொடரப்பட்ட 27 வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், வங்கிகள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உட்பட எந்த ஒரு தனியார் நிறுவனமும் ஆதார் விவரங்களை கட்டாயமாக சமர்ப்பிக்குமாறு வாடிக்கையாளர்களிடம் கேட்கக்கூடாது என அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: தனியார் நிறுவனம் எதுவும் ஆதார் விவரங்களை வாடிக்கையாளர்களிடம் கேட்கக் கூடாது என தெள்ளத்தெளிவாக உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, ஆதார் சமர்ப்பித்தவர்கள் அவற்றை நீக்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வங்கிகள், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் கேட்க இந்த தீர்ப்பு உரிமை வழங்கியுள்ளது என்றார்.

Thursday 27 September 2018

ஏசி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், , வாஷிங் மெஷின் உட்பட 19 பொருட்கள் மீதான சுங்க வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

: ஏசி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், , வாஷிங் மெஷின் உட்பட 19 பொருட்கள் மீதான சுங்க வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதன்மூலம், மேற்கண்ட பொருட்களின் விலை அதிகரிக்க உள்ளது. உள்நாட்டில் உற்பத்தியை தொடங்குவதை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. ஆனால் எலக்ட்ரானிக் பொருட்கள் உட்பட பல இறக்குமதியை சார்ந்தே உள்ளன. இதனால் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகமாகி வருகிறது. இதை கட்டுப்படுத்த பல்வேறு பொருட்களின் மீதான சுங்க வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதன்படி ஏசி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின் மீதான வரி 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏசி, பிரிட்ஜ் கம்ப்ரசர்கள் 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகவும், ஸ்பீக்கர்கள் 10ல் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளன. இதுபோல், ரேடியல் கார் டயர்கள் 10ல் இருந்து 15 சதவீதமாக உயர்ந்துள்ளது. வைரங்கள் மீதான வரி 5 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. இதுபோல், பிளாஸ்டிக்கால் ஆன குளியலறை உபகரணங்கள், பிளாஸ்டிக் பாக்ஸ், பாட்டில், ஹாட் பேக், அலுவலக ஸ்டேஷனரி பொருட்கள், அலங்கார ஷீட், வளையல் சூட்கேஸ் மீதான வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. ஜெட் எரிபொருள் மீது 5 சதவீத சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் ₹86,000 கோடி மதிப்பிலான பொருட்கள் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது. சீன டயர்கள் இறக்குமதியால் இந்திய டயர் உற்பத்தி நிறுவனங்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றன. இதுபோல் சீனாவில் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள் அதிகமாக இறக்குமதி செய்யப்படுகின்றன. அமெரிக்கா சீனா இடையே வர்த்தகப்போர் வலுத்து வருகிறது. இதனால் அமெரிக்காவால் தடுக்கப்பட்ட பொருட்களை இந்தியாவுக்கு சீனா அதிகமாக ஏற்றுமதி செய்ய வாய்ப்புகள் உள்ளன. இதுபோல், பிற நாடுகளுக்கும் இந்தியா முக்கிய சந்தையாக உள்ளது. இந்த சூழ்நிலையில் இறக்குமதியை தடுக்கும் வகையில் இந்தியா வரி விதித்துள்ளதால் இறக்குமதி செய்யப்படும் டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின் மற்றும் பிளாஸ்டிக், ஸ்டேஷனரி பொருட்கள் உட்பட அனைத்தும் விலை அதிகரிக்கும் எனவும், இந்திய உற்பத்தி ஊக்குவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tuesday 25 September 2018

தனிநபர்கள் வாங்கும் கடன்களில் 40 சதவீதம் தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகாவில் வாங்கப்படுவதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது.

தனிநபர்கள் வாங்கும் கடன்களில் 40 சதவீதம் தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகாவில் வாங்கப்படுவதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது.வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்வது மட்டுமின்றி அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய பெரும்பாலான மக்கள் கடனுதவியையே நாடுகின்றனர். குறிப்பாக, வாகன வசதி, வீடு, வீட்டு உபயோக பொருட்கள் போன்றவை கடனுதவி மூலமாகவே பூர்த்தி செய்யப்படுகிறது.தனிநபரின் வேலை, வருவாய், இதற்கு முன்பு கடன் பெற்றிருந்தால் அவர் முறையாக திருப்பி செலுத்தியுள்ளாரா என பல்வேறு விவரங்களை ஆராய்ந்த பிறகே கடன் வழங்கப்படுகிறது. கடன் வழங்குவதை வங்கிகள் நிதி நிறுவனங்கள் முடிவு செய்வதில் சிபில் ஸ்கோர் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில், சிபில் நிறுவனம் கடன் வழங்கல் தொடர்பான புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. இதில் கூறியிருப்பதாவது: பொருளாதார வளர்ச்சி மற்றும் நகரமயமாக்கல் காரணமாக கடன் தேவைகள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஜூன் 30ம் தேதி நிலவரத்தின்படி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மட்டும் நாட்டின் ஒட்டு மொத்த தனிநபர் கடன்களில் 40 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்திய மக்கள் தொகையில் 20 சதவீதம் மட்டுமே இந்த மாநிலங்களில் உள்ளன.கடந்த ஜூன் நிலவரப்படி மகாராஷ்டிராவில் மட்டும் அதிகபட்சமாக ₹5,50,200 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக தமிழகத்தில் ₹2,77,400 கோடி, கர்நாடகாவில் ₹2,74,900 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதுபோல் 10 பெரிய மாநிலங்களின் மொத்த தனிநபர் கடன் ₹21,27,400 கோடி. 2017 மற்றும் 2018 2ம் காலாண்டில் கடன்கள் 27 சதவீதம் உயர்ந்துள்ளது. இதுபோல் அனைத்து தனிநபர் கடன் வகையிலும் சேர்த்து தனிநபர் கடன் 43 சதவீதமும், கிரெடிட்கார்டு கடன் 42 சதவீதமும் அதிகரித்துள்ளது என கூறப்பட்டுள்ளது என சிபில் தெரிவித்துள்ளது.வீடு, வாகன கடன்கள் மட்டுமின்றி டிவி, பிரிட்ஜ் போன்ற வீட்டு உபயோக பொருட்களை வாங்குவதற்கு கூட மக்கள் கடன் உதவியை நாடுகின்றனர். இதன்மூலம்தான் காலத்துக்கு ஏற்ற வாழ்க்கைத் தரத்தை பலர் மேம்படுத்திக் கொள்கின்றனர். இதனால் கடன் வாங்குவது அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதோடு கிரெடிட் கார்டுகள் உரசுவதற்கும் மக்கள் அஞ்சுவதில்லை என்பதையும் மேற்கண்ட புள்ளி விவரம் மெய்ப்பிக்கிறது.

5.10 கோடி ஊழல் செய்த 4 பேரை கைது செய்த மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அவர்களிடமிருந்து ₹97.34 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

பெங்களூருவில் இயங்கிவரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் கர்நாடகா வங்கி ஆகியவற்றில் வங்கி அதிகாரிகளின் உதவியுடன், ₹5.10 கோடி ஊழல் செய்த 4 பேரை கைது செய்த மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அவர்களிடமிருந்து ₹97.34 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.பெங்களூருவில் இயங்கிவரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் கர்நாடக ஊரக கட்டுமான வளர்ச்சி கூட்டுறவு வங்கி ஆகியவற்றில் பணியாற்றும் அதிகாரிகளின் உதவியுடன் வெவ்வேறு வாடிக்கையாளர்களின் கணக்கில் ₹5கோடியே 10லட்சம் செலுத்தப்பட்டுள்ளது என மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் மேற்கண்ட வங்கிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது மேற்கண்ட வங்கிகளில் கணக்கு வைத்துள்ள அப்துல் சலாம், சீஜோ கே. ஜோஸ், சுனில் மோன், ஜெர்ரி பால் ஆகியோர் சாம் ட்ரேடிங், அபிஷேக் எண்டர்பிரைசஸ், தன்கா டிரேடிங் பிரைவேட் லிமிடெட், ஏஞ்சல் எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்கள் இருப்பதாக கூறி வங்கி பணத்திலிருந்து ₹5கோடியே 10லட்சம்மேற்கண்ட நிறுவனங்கள் பெயரில் செலுத்தி பின்னர் மும்பையில் உள்ள 4 பேர்களின் வங்கி கணக்குகளுக்கு செலுத்திவந்தது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக மங்களூரு, சூரத்கல் போலீசார் அப்துல் சலாம் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ₹97,39,340ஐ பறிமுதல் செய்தனர். இதில் வங்கி அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Friday 21 September 2018

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டிவிகிதத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டிவிகிதத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டிற்கான, பி.பி.எஃப்., சிறுசேமிப்பு திட்டம் உள்ளிட்டவைகள் வட்டி விகிதத்தை 0.4% அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வங்கிகளில் அதிகரித்து வரும் வைப்பு விகிதங்களுக்கு ஏற்ப. சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் காலாண்டு அடிப்படையில் அறிவிக்கப்படும்.இதன்படி, 5 ஆண்டுகள் வரையிலான மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு 8.3 சதவீதத்திற்கு பதில், 8.7 சதவீதம் வட்டி வழங்கப்பட உள்ளது. இந்த வட்டி ஒவ்வொரு காலாண்டின் போதும் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சேமிப்பு வைப்பு தொகைக்கான ஆண்டு வட்டி விகிதம் 4 சதவீதமாகவே இருக்கும்.பிபிஎப் மற்றும் தேசிய சேமிப்பு சான்றிதழுக்கான ஆண்டு வட்டிவிகிதம் 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கிஷான் விகாஸ் பத்திர வட்டிவிகிதம் 7.3 சதவீதத்தில் இருந்து 7.7 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு முறை மாற்றி அமைக்கப்படுவது வழக்கமாகும். அதன்படி 2018-2019ம் நிதியாண்டில் மூன்றாவது காலாண்டுக்கான வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரையிலான காலாண்டிற்கு மறுசீரமைக்கப்பட்ட வட்டி விகிதம் குறித்து மத்திய நிதி அமைச்சகம் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி. 5 ஆண்டு டெபாசிட், தொடர் வைப்பு தொகை, மூத்த குடிமக்கள் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 7.8, 7.3 மற்றும் 8.7 சதவீதமாக உயர்த்தப்ப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சிறுசேமிப்பு வைப்பு தொகைக்கான வட்டி சதவீதம் 4 ஆகவே நீடிக்கிறது. பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎப்), தேசிய சேமிப்பு சான்றிதழ் ஆகியவற்றுக்கான ஆண்டு வட்டி விகிதம் 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிசான் விகாஸ் பத்தரம் மீதான வட்டி 7.7 சதவீதமாக உயர்ந்துள்ளது மற்றும் 118 மாதங்களுக்கு மாறாக 112 மாதங்களில் முதிர்ச்சி அடையும். பெண் குழந்தை சேமிப்பு திட்டமான சுகன்ய சம்ரித்தி வட்டி விகிதம் 0.4 உயர்ந்து 8.5 சதவீதமாக உள்ளது. ஒன்று முதல் மூன்று ஆண்டு வரையிலான சேமிப்பு டெபாசிட்டுக்களுக்கு 0.3சதவீதம் வட்டி உயர்ந்துள்ளது.

Tuesday 18 September 2018

அசராமல் உயர்த்தும் நிறுவனங்கள்* அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்.

டீசல் விலை நேற்றும் புதிய உச்சத்துக்கு சென்றது. சென்னையில் நேற்று பெட்ரோல் ₹85.31, டீசல் ₹78க்கு விற்பனை செய்யப்பட்டது.கடந்த ஒன்றரை மாதமாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்றும் விலை உயர்ந்தது. ஒரு லிட்டர் பெட்ரோல் சென்னையில் 16காசு உயர்ந்து ₹85.31ஆக இருந்தது. டீசல் 6 காசு உயர்ந்து சென்னையில் முதல் முறையாக ₹78ஐ தொட்டது. இந்த மாதம் 1ம் தேதியில் இருந்து மட்டும் சென்னையில் பெட்ரோல் ₹3.73, டீசல் ₹3.82 உயர்ந்துள்ளது. ஒன்றரை மாதத்தில் பெட்ரோல் ₹6.05 டீசல் ₹6.38 எகிறியுள்ளது.பெட்ரோல் டெல்லியில் ₹82.06, மும்பையில் ₹89.44க்கு விற்பனையானது. டீசல் டெல்லியில் ₹73.78க்கும், மும்பையில் ₹78.33க்கும் விற்கப்பட்டது. மகராஷ்டிரா மாநிலம் பர்மானியில் கடந்த வாரமே பெட்ரோல் ₹90ஐ எட்டி விட்டது. மும்பை நகரத்தில் ₹90ஐ நெருங்கி விட்டது. வரிகள் அதிகம் என்பதால் மகாராஷ்டிரா மாநிலத்தின் 12 நகரங்களில் பெட்ரோல் விலை 90 ரூபாயை தாண்டி விட்டது. பர்பனி, நந்துர்பார், நாண்டெட், லாத்தூர், ஜால்னா, ஜல்காவ், ஹிங்கோலி, கோண்டியா புல்தானா, பீட், அவுரங்காபாத், ரத்னாகிரி ஆகிய 12 நகரங்களில் பெட்ரோல் விலை 90 ரூபாயை தாண்டியது. இதில் நாண்டெட் மாவட்டத்தில் மாநிலத்திலேயே அதிகமாக பெட்ரோல் ₹92.19 ஆகவும், டீசல் ₹82.89 ஆகவும் இருந்தது. நாட்டிலேயே இதுதான் அதிகப்பட்ச விலையாகும். இதே மாவட்டத்தின் உம்ரி தாலுகாவில் பெட்ரோல் விலை ₹91.89 ஆகவும், டீசல் விலை ₹79.49 ஆகவும் இருந்தது. புனேயில் பெட்ரோல் ₹89.31 ஆகவும் டீசல் விலை ₹77 ஆகவும் உள்ளது.கடந்த மாதம் 1ம் தேதியில் இருந்ேத பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் மிக அதிகமான கலால் வரி ஆகியவையே விலை உயர்வுக்கு மிக முக்கிய காரணங்கள் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பணவீக்கமும் ரூபாய் மதிப்பு சரிவுக்கு காரணமாக அமைந்து விட்டது. இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி டெல்லியில் பெட்ரோல் ₹69.97ஆகவும், சென்னையில் ₹72.53ஆகவும் இருந்தது. இதுபோல் டீசல் கடந்த ஜனவரி 1ம் தேதி டெல்லியில் ₹59.70 ஆகவும், சென்னையில் ₹62.90 ஆகவும் இருந்தது. இதே நிலை தொடர்ந்தால் பொது மக்கள் பலர் பொது போக்குவரத்து மாற வேண்டிய சூழ்நிலை உருவாகும். அதோடு, பெட்ரோல் விலை உயர்வு வாகன விற்பனையிலும் தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என ஆட்டோமொபைல் டீலர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். அத்தியாவசிய பொருட்கள், டாக்சி கட்டணம் போன்றவை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.கச்சா எண்ணெய் விலைகுறைந்தும் பலனில்லைசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க பிரதான காரணமாக கூறப்பட்டது. ஆனால், நேற்று ஆசிய சந்தையில் வர்த்தக தொடக்கத்தில் கச்சா எண்ணெய் விலை சரிந்து காணப்பட்டது. பிரண்ட் கச்சா எண்ணெய் பங்குகள் 0.2 சதவீதம் சரிந்து 77.93 டாலருக்கு வர்த்தகம் ஆகின. கச்சா எண்ணெய் விலை அதிகமாக குறைந்தாலும் இந்தியாவுக்கு பயன் இருக்காது. ஏனெனில் ரூபாய் மதிப்பு சரிவு இந்த பலன்களை கெடுத்து விடுகிறது. அதோடு, சர்வதேச சந்தை நிலவரங்கள் உடனடியாக பலன் அளிப்பதில்லை. இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விலை சர்வதேச நிலவரத்துடன் சற்று வேறுபட்டே உள்ளது என்று சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.அந்த நாலு பேருக்கு நன்றி...பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த அவற்றின் மீதான வரிகளை மத்திய அரசு சிறிதளவு கூட குறைக்க முன்வரவில்லை. ஒரு ரூபாய் குறைத்தால் கூட ₹13,000 கோடி இழப்பு ஏற்படும் என மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது. மாநிலங்களும் தங்கள் வருவாய் போய்விடும் என வரியை குறைக்கவும், ஜிஎஸ்டியில் சேர்க்கவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ராஜஸ்தான் மாநில அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை தலா ₹2.50 குறைத்தது. ஆந்திரா தலா 2 ரூபாய், மேற்கு வங்கள் தலா ஒரு ரூபாய் என வாட் வரியை குறைத்து பெட்ரோல், டீசல் உயர்வை தற்காலிகமாக தடுத்து வைத்துள்ளன. நான்காவதாக கர்நாடகா அரசு நேற்று பெட்ரோல், டீசல் கலால் வரியை தலா ₹2 வீதம் குறைத்துள்ளது. இதுபோல் பிற மாநிலங்களும் முன்வர வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் எதிர்பார்க்கின்றனர்.