Tuesday 28 August 2018

யூபிஐ (UPI)என்றால் என்ன? எப்படி செயல் பட்டு வருகிறது?

ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போது நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்ற கட்டண வழிமுறைகள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இந்நாட்களில் பெரும்பாலான ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் யூபிஐ (UPI) வாயிலான கட்டணச் சேவைகளை வழங்குகின்றன. அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களும் இதில் அடங்கும். பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகளவு மேற்கொள்ளும்படி அரசு தரப்பிலிருந்தும் அதிகமாக ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. யூபிஐ என்பது வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட ஒரு கட்டணச் சேவை. இதன் வாயிலாக இரு வங்கிக் கணக்குகளிடையே பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். உங்களிடம் ஒரு வங்கிக் கணக்கும், ஸ்மார்ட்போனும் இருந்தால், நீங்கள் உடனடியாக யூபிஐ சேவைகளைப் பயன்படுத்த முடியும். அதற்கு நீங்கள் ஏதேனும் ஒரு யூபிஐ செயலியைத் தரவிறக்கம் (download) செய்துகொண்டால் போதுமானது. நீங்கள் மற்றொரு யூபிஐ பயனாளிக்குப் பணம் அனுப்ப வேண்டுமென்றால், IMPS, NEFT சேவைகளை விட, யூபிஐ வழியாக அதிவேகத்தில் பணத்தை அனுப்பிவிட முடியும். NEFT கட்டண முறையில், நீங்கள் யாருக்குப் பணம் அனுப்ப வேண்டுமோ, அவரது வங்கிக் கணக்கு எண், IFSC உள்ளிட்ட விவரங்கள் தேவை. ஆனால், யூபிஐ தளத்தில் அதுபோன்ற விவரங்கள் தேவையில்லை. தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக யூபிஐ வாயிலான கட்டணச் சேவைகள் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. அண்மையில் அறிமுகமான கூகுளின் டெஸ் (Tez) செயலி யூபிஐ கட்டணச் சேவைகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. அறிமுகமான நாள் முதல் பல்வேறு சலுகைகளையும் டெஸ் வழங்கி வருகிறது. இதன் விளைவாகப் பலரும் டெஸ் செயலியைப் பயன்படுத்தத் தொடங்கினர். பல தொழில் நிறுவனங்களிலும், கடைகளிலும் கூட டெஸ் வாயிலான கட்டணங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. யூபிஐ தளம் தேசியக் கொடுப்பனவுக் கழகத்தால், ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்தின் துணையுடன் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். ரூபே கட்டணச் சேவையையும் தேசியக் கொடுப்பனவுக் கழகம் இயக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. IMPS கட்டணத் தளத்தையும் தேசிய கொடுப்பனவுக் கழகம்தான் இயக்கி வருகிறது. எனினும், IMPS தளத்தை விட யூபிஐ தளம் மேம்படுத்தப்பட்டதாகும். ஏன் யூபிஐ வசதியைப் பயன்படுத்த வேண்டும்? ஆன்லைன் வாயிலாக வங்கிப் பரிவர்த்தனையை மேற்கொள்ள வேண்டுமானால் வங்கிக் கணக்கு எண், கணக்கு ரகம், வங்கியின் பெயர், IFSC உள்ளிட்ட தகவல்கள் தேவைப்படும். இந்தத் தகவல்கள் அனைத்தும் உங்களிடம் இருந்தாலும்கூட, அவற்றை ஒவ்வொன்றாக உங்கள் மொபைலில் டைப் செய்வது மிகக் கொடுமையான வேலை. புதிதாக ஒரு நபரை இணைப்பதற்கு பெரும்பாலான வங்கிகள் 12 மணி நேரம் எடுத்துக் கொள்கின்றன. அந்த நபரை இணைத்த பிறகே உங்களால் பணத்தை அனுப்ப முடியும். அவசரமாக ஒருவருக்குப் பணம் அனுப்ப வேண்டுமென்றால் அது சாத்தியமில்லை. மேற்கண்ட பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்காகத்தான் யூபிஐ தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. யூபிஐ வாயிலாக வங்கிக் கணக்கு எண், மொபைல் எண், ஆதார் எண் அல்லது யூபிஐ ஐடி மட்டும் கொண்டு ஒருவருக்கு உடனடியாகப் பணத்தை அனுப்பிவிட முடியும். இதற்கு IFSC போன்ற தகவல்கள் தேவையில்லை. யூபிஐ தளத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், இச்சேவையை 24 மணி நேரமும் பயன்படுத்த முடியும். ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், கடைகள், ஸ்விகி போன்ற சேவைகளுக்கு மட்டுமல்லாமல், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் உடனடியாக பணம் அனுப்ப முடியும். நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை உபயோகிப்பவராக இருக்கலாம். ஒவ்வொரு வங்கிக்கும் ஒரு செயலியைப் பயன்படுத்தி, அதன் விளைவாக எரிச்சலுக்கு ஆளாகியிருக்கலாம். இதிலிருந்து யூபிஐ செயலிகள் உங்களுக்கு விடுதலை அளிக்கின்றன. ஒரு யூபிஐ செயலியில் பல வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களது வங்கிக் கணக்குகளுக்குள்ளேயே நீங்கள் பணத்தை மாற்றிக்கொள்ளலாம். மிகவும் பாதுகாப்பாகவும், எளிமையாகவும் இருக்கும். உங்கள் மொபைலில் பல செயலிகள் இடத்தை அடைத்துக்கொண்டு இருக்காது. உங்களது வசதிக்காகக் கூகுள் பிளே ஸ்டோரில் பல்வேறு யூபிஐ செயலிகள் உள்ளன. நீங்கள் எந்த வங்கியின் செயலியை வேண்டுமென்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் எஸ்பிஐ வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி வந்தாலும், ஹெச்டிஎஃப்சி வங்கியின் யூபிஐ செயலியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சிறு நகரங்களில் ஸ்வைப்பிங் மெஷின் வாயிலாக பணம் செலுத்துவது எளிதான வேலையல்ல. பெரும்பாலான வர்த்தகர்களிடம் ஸ்வைப்பிங் மெஷின்களே இருப்பதில்லை. இந்த மெஷின்கள் பிஓஎஸ் (பாயின்ட் ஆஃப் சேல்) மெஷின் எனப்படுகின்றன. இந்தக் கருவிகள் விலையுயர்வாக இருப்பதால் சிறு வணிகர்கள் அவற்றை வாங்கி வைப்பதில்லை. ஸ்வைப்பிங் மெஷினுக்கு ஆகும் செலவுடன், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் அவர்கள் சேவைக் கட்டணமும் செலுத்த வேண்டியுள்ளது. பரிவர்த்தனையின் மதிப்புக்கு ஏற்ப 1.25 விழுக்காடு முதல் 2.5 விழுக்காடு வரை சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உண்மையைச் சொன்னால், ஸ்வைப்பிங் மெஷின்களால் சிறு வணிகர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. இதற்கு நல்ல மாற்று வழியாக யூபிஐ தளம் உதவிபுரிகிறது. ஸ்வைப்பிங் மெஷின் செய்யக்கூடிய அதே வேலையை யூபிஐ தளம் மிகக் குறைவான கட்டணத்தில் செய்து முடிக்கிறது. மேலும், யூபிஐ தளம் ஸ்மார்ட்போன்களில் இயங்குவதால், ஸ்வைப்பிங் மெஷின் வாங்குவதற்கான செலவு அவசியமற்றுப் போகிறது. இணையதளங்களில் கட்டணங்களைச் செலுத்தும்போது, டெபிட் கார்டு / கிரெடிட் கார்டு எண், சிவிவி எண் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டியுள்ளது. இது பெரும்பாலானோருக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும். ஏனெனில், நமது தகவல்களை இணையதளங்கள் திருடிவிட்டால் என்ன செய்வது? இந்த அச்சத்தையும் போக்கும் விதமாகத்தான் யூபிஐ தளம் செயல்படுகிறது. யூபிஐ ஐடியை மட்டும் கொடுத்தால் மட்டும் போதும், கட்டணம் மிக எளிதாகச் செலுத்தப்பட்டுவிடும். இது மிகவும் பாதுகாப்பானதும் கூட.

Friday 24 August 2018

எல்ஐசி கேன்சர் கவர் பாலிசி விற்பனை குறித்து, எல்ஐசி (ஹெல்த் இன்சூரன்ஸ்) பிராந்திய மேலாளர் டி.ராஜலெட்சுமி கூறியதாவது:

எல்ஐசி தென்மண்டலம் 14.11.17ல் கேன்சர் கவர் பாலிசி தொடங்கியது. இதுவரை 1.31 லட்சத்துக்கும் மேற்பட்ட பாலிசிகள் விற்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரியை உள்ளடக்கிய தென்மண்டலம் 39,190 கேன்சர் கவர் பாலிசி விற்று இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளது. இதில், திருச்சூர், எர்ணாகுளம், திருவனந்தபுரம், கோட்டயம், கோழிக்கோடு கோட்டங்கள் முதல் 5 இடங்களை பிடித்தன. 2017-18 நிதியாண்டில் 23,843 ஹெல்த் பாலிசி உரிமங்களை தீர்வு செய்து ரூ.32.31 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 25 லட்சம் பேர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேன்சர் பாதிக்கப்பட்ட 70% பேருக்கு சிகிச்சை செலவுக்கான பொருளாதார வசதி இல்லை. சிகிச்சை செலவு ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வர உள்ளது. எனவே 20 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் கேன்சர் கவர் பாலிசியில் சேரலாம். இதுபோல் ஜீவன் ஆரோக்யா பாலிசியில் 140 பெரிய அறுவை சிகிச்சைகள் மற்றும் 140 பகல்நேர அறுவை சிகிச்சைகள் தவிர பிற அறுவை சிகிச்சைகளுக்கும் குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு எல்ஐசி கிளை, முகவர் அல்லது www.licindia.in அணுகலாம் என்றார்.

பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டிக்குள் வருவதற்கு வாய்ப்பே இல்லை


பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டிக்குள் வருவதற்கு வாய்ப்பே இல்லை எனவும், மாநில அரசுகள் வருவாயை இழக்க விரும்பவில்லை எனவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, இறக்குமதி செலவு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினசரி நிர்ணயம் செய்து வருகின்றன. நாளுக்கு நாள் உச்சத்தை எட்டும் பெட்ரோல்,் டீசல் விலை கட்டுக்குள் வராதா என பொதுமக்கள் ஏங்குகின்றனர். ஆனால், விலையை கட்டுப்படுத்தும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைக்க மத்திய ்அரசு விரும்பவில்லை. தற்போது பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ₹19.48ஆகவும், டீசல் மீதான கலால் வரி ₹15.33 ஆகவும் உள்ளது. பெட்ரோல் விலையில் 45 முதல் 50 சதவீதமும், டீசல் விலையில் 35 முதல் 40 சதவீதமும் வரிகளாக உள்ளன. பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், இவற்றை ஜிஎஸ்டியில் கொண்டு வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பெட்ரோல், டீசல், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, விமான பெட்ரோல் ஆகியவை ஜிஎஸ்டியில் இல்லை. இதில் முதல் கட்டமாக விமான பெட்ரோல், இயற்கை எரிவாயு ஆகியவற்றை ஜிஎஸ்டியில் கொண்டு வர மத்திய அரசு முனைப்புடன் உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவது தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மூலம் மாநில அரசுகளுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், இயற்கை எரிவாயு ஜிஎஸ்டியில் கொண்டுவரப்படுவது பற்றி பரிசீலிக்கப்பட்டது. ஆனாலும், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர எந்த ஒரு மாநிலமும் ஆதரவு தெரிவிக்கவில்லை. கட்சி பேதமின்றி எல்லா மாநிலங்களுமே இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஜிஎஸ்டிக்கு பிறகு எந்த ஒரு சூழ்நிலையிலும், தங்கள் வருவாயை இழக்க அவை விரும்பவில்லை. எனவே, பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டிக்குள் வர சாத்தியமே இல்லை என்றார்.

Wednesday 22 August 2018

வெள்ள நிவாரண வியாபாரம் அமோகமாக நடைபெற்றது.

: ஈரோடு ஜவுளி சந்தையில் ஓணம் பண்டிகை வியாபாரம் அடியோடு பாதிக்கப்பட்ட நிலையில் வெள்ள நிவாரண வியாபாரம் அமோகமாக நடைபெற்றது. கேரளா மக்களால் விமரிசையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகைக்காக ஈரோடு ஜவுளி சந்தையில் இருந்து மொத்த வியாபாரிகள் அதிக அளவில் ஜவுளிகளை கொள்முதல் செய்வது வழக்கம். பண்டிகைக்கு ஒரு மாதகாலத்திற்கு முன்பாகவே ஈரோடு ஜவுளி சந்தையில் கேரள வியாபாரிகளின் வருகை தொடங்கிவிடும். இந்தாண்டு ஓணம் பண்டிகை வருகிற 25ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் கேரள மாநிலத்தை புரட்டி போட்ட மழை வெள்ள பாதிப்பால் ஜவுளி கொள்முதல் செய்ய ஈரோடு ஜவுளி சந்தைக்கு கேரள மாநில மொத்த வியாபாரிகள் யாரும் வராததால் நேற்று நடைபெற்ற ஜவுளி சந்தையில் ஓணம் வியாபாரம் அடியோடு பாதிக்கப்பட்டது. ஆனால் அதே வேளையில் வெள்ள நிவாரணத்திற்கு கேரளாவுக்கு உடைமைகள் அனுப்பி வைப்பதற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுநல அமைப்புகள் அதிக அளவில் ஜவுளி சந்தையில் ஜவுளிகளை கொள்முதல் செய்தனர். குறிப்பாக பெட்ஷீட், சட்டை, சேலை, லுங்கி, நைட்டி, உள்ளாடைகள் உள்ளிட்டவைகளை அதிக அளவில் கொள்முதல் செய்தனர். இது குறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் தரப்பில் கூறியதாவது, லாரி ஸ்டிரைக் காரணமாக ஆடிப்பண்டிகை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஓணம் பண்டிகை கை கொடுக்கும் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால் கேரளாவில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் அம்மாநில மொத்த வியாபாரிகள் ஜவுளிகளை கொள்முதல் செய்ய யாரும் வரவில்லை. ஏற்கனவே ஆர்டர் கொடுத்திருந்த கேரள வியாபாரிகளும் அங்கு வெள்ளம் வடியாததால் தற்போது ரத்து செய்து விட்டனர்.இந்நிலையில் கேரளா மக்களுக்கு தமிழகத்தில் இருந்து நிவாரண பொருட்களை அனுப்பி வைப்பதற்காக ஜவுளி சந்தையில் இருந்து பெட்ஷீட், லுங்கி, நைட்டி, சேலைகள் மற்றும் குழந்தைகளுக்கான ரெடிமேடு ரகங்கள், உள்ளாடைகள் உள்ளிட்டவைகள் அதிக அளவில் தன்னார்வ அமைப்புகள் சார்பில் கொள்முதல் செய்துள்ளனர். மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்ட போதிலும் ஜவுளி சந்தையில் வழக்கத்தைவிட சில்லரை விற்பனை இருமடங்கு அதிகரித்திருந்தது. இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

Monday 20 August 2018

திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு ரூ.8,757 கோடி மதிப்புள்ள ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் ஜூலை மாதம் வரை திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு ரூ.8,757 கோடி மதிப்புள்ள ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஏற்றுமதி செய்ததைவிட 5.98 சதவீதம் அதிகம். இதனால், ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் இருந்து பல நாடுகளுக்கு குளிர்காலம், கோடை கால ஆடைகள் தயாரித்து அனுப்பப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட நிர்வாக சீர்திருத்தங்களான பணம் மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, இ-வே பில் உட்பட பல்வேறு காரணங்களால் உள்நாடு, வெளிநாட்டு வர்த்தகத்தில் சற்று பின்னடைவு ஏற்பட்டது. 9 மாதங்களாக தொடர்ந்து சரிந்து வந்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தக மதிப்பு கடந்த ஜூலையில் சற்று வளர்ச்சி பெற்றது.2017ல், 8,262.94 கோடி ரூபாயாக இருந்த ஏற்றுமதி மதிப்பு, நடப்பாண்டு ஜூலையில், 8,757.23 ரூபாயாக, 5.98 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால், ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார் கூறியதாவது:திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு மூலப்பொருட்கள் விலை உயர்வு, உற்பத்தி செலவு அதிகரிப்பால் நெருக்கடிக்கு ஆளாகினர். ஆடைகளின் விலையை அதிகரிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 9 மாதங்களாக தொடர்ந்து சரிந்து வந்த நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தக மதிப்பு, கடந்த ஜூலை மாதம், ரூபாய் மதிப்பு அடிப்படையில் கணக்கிடும்போது, 5.98 சதவீதம் ஏற்றுமதி மதிப்பு அதிகரித்துள்ளது. ஆனால், டாலர் மதிப்பில் கணக்கிடும் போது, வர்த்தகம் சரிந்துள்ளது.கடந்த 2017 ஜூலை மாதம், 1274.83 மில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதி, நடப்பாண்டு ஜூலை மாதம், 0.56 சதவீதம் குறைந்துள்ளது.66 ரூபாயாக இருந்த டாலர் மதிப்பு, 70 ரூபாயாக உயர்ந்துள்ளது. டாலர் மதிப்பு அதிகரிப்பது தான், ஏற்றுமதி வர்த்தக உயர்வுக்கு காரணம். ரூபாய் மதிப்பு அடிப்படையில், ஏற்றுமதி வர்த்தக மதிப்பு உயர்ந்துள்ளது சற்று நிம்மதி அளிக்கிறது. டாலர் மதிப்பு மேலும் உயரும் என்பதால், ஏற்றுமதிக்கு சாதகமான சூழல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக நம்புகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவில் உள்ள 15 ஆயிரம் பேருக்கு செயற்கை நுண்ணறிவுத்திறன் பயிற்சி

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மாணவர்கள், பேராசிரியர்கள் உள்பட 99 ஆயிரம் பேருக்கு அமெரிக்காவைச் சேர்ந்த இன்டெல் இந்தியா கம்ப்யூட்டர் நிறுவனம் செயற்கை நுண்ணறிவுத்திறன் பயிற்சி அளித்துள்ளது.இந்தியாவில் உள்ள 15 ஆயிரம் பேருக்கு செயற்கை நுண்ணறிவுத்திறன் பயிற்சி அளிக்க முடிவு செய்து இன்டெல் இந்தியா கம்ப்யூட்டர் நிறுவனம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த திட்டத்தை தொடங்கியது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் 15 ஆயிரம் பேருக்கு இந்த பயிற்சியை அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதற்காக, நாடெங்கிலும் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களான ஐஐடி டெல்லி, மும்பை, கோரக்பூர், கான்பூர், சென்னை மற்றும் ஐஐடி பெங்களூரு, சிடிஏசி மற்றும் ஷெல், டிசிஎஸ் நிறுவனங்களுடன் கைகோர்த்தது. இதுதொடர்பாக இன்டெல் இந்தியா கம்ப்யூட்டர் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தை நிர்வாக இயக்குநர் பிரகாஷ் மல்லையா கூறியதாவது:மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் டெவலப்பர்கள் உள்பட 15 ஆயிரம் பேருக்கு கடந்த ஏப்ரல் மாதம் வரையிலான ஒரு ஆண்டில் பயிற்சி பட்டறைகள் மூலம் பயிற்சி அளிக்க நாங்கள் இலக்கு நிர்ணயித்தோம். எனினும், 100 நிறுவனங்களுடன் கைகோர்த்து செயல்பட்டதால், 99 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலக்கை விட 7 மடங்கு அதிகமாக நாங்கள் பயிற்சி அளித்துள்ளோம். மேலும், இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு பிரகாஷ் மல்லையா கூறினார்.இதனிடையே, தன்னுடைய முதலாவது செயற்கை நுண்ணறிவு டெவலப்பர்கள் மாநாட்டை கடந்த வாரம் பெங்களூருவில் இன்டெல் நிறுவனம் நடத்தியது. இதில் 500க்கும் மேற்பட்ட டெவலப்பர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த திட்டத்தில் பிலிப்ஸ் இந்தியா மற்றும் எம்பசிஸ் நிறுவனங்களுடனும் கைகோர்க்க இன்டெல் இந்தியா திட்டமிட்டுள்ளது.

Saturday 18 August 2018

SBI ATM Card உபயோகிப்பாளர்களுக்கு புதிய அறிவிப்பு

SBI வங்கி தனது வாடிக்கையாள்களின் magstripe debit cardsகளை   EMV chip debit cardsகளாக இந்தாண்டு இறுதிக்குள் மாற்றிக்கொள்ளுமாறு அறிவிதுள்ளது.

ஆன்லைன் நெட்பேங்கிங் மூலமோ அல்லது  கிளை அலுவலகங்கள் மூலமோ வாடிக்கையாளர்கள் விண்ணப்பித்து புதிய அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம்.

Click Here:
For latest commerce related news  videos subscribe this YouTube channel and follow this website

வருமான வரி ₹10.03 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக, மத்திய நேரடி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

ி: கடந்த நிதியாண்டில் வருமான வரி ₹10.03 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக, மத்திய நேரடி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. வருமான வரித்துறை சார்பில் கவுஹாத்தியில் நடந்த கருத்தரங்கில், மத்திய நேரடி வரிகள் ஆணைய உறுப்பினர் ஷாப்ரி பட்டசாலி பேசுகையில், ‘‘ கடந்த 2017-18 நிதியாண்டில் 6.92 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. ₹10.03 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் புதிதாக 1.06 கோடி பேரை வரி வரம்புக்குள் கொண்டு வந்து வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வைத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் மேலும் 1.25 கோடி பேரை வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’’ என்றார். வருமானவரித்துறையின் வடகிழக்கு மண்டல முதன்மை ஆணையர் எல்.சி.ஜோஷி ராணி கூறுகையில், ‘‘வடகிழக்கு மண்டலத்தில் மட்டும் ₹7,097 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. வருமான வரித்துறை வருமான வரி வசூல் இலக்கை எட்ட உறுதி பூண்டுள்ளது. இதற்காக ஆயகர் சேவை மையங்கள் நாடு முழுவதும் திறக்கப்பட்டு வருகின்றன. இது வருமான வரி செலுத்துவோருக்கு சேவை அளிக்கவும் உதவும் என்றார்.

Wednesday 15 August 2018

அமராவதி தலைநகருக்காக நிதி

அமராவதி தலைநகருக்காக நிதி திரட்ட மும்பை ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் ஆந்திர மாநில அரசு அதிரடியாக பாண்டு விற்பனை செய்யப்பட்டதில், ஒரே நாளில் ₹2 ஆயிரம் கோடி திரண்டப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆந்திர மாநில தலைநகர் அமைக்க மாநில பிரிவினையின்போது கூறியபடி மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால் மத்திய அரசிடம் இருந்து நிதி பெறுவதற்காக ஆந்திர மாநில அரசு தொடர்ந்து போராடி வருகிறது. மத்திய அரசிடம் நிதி கேட்டும் வழங்காத நிலையில் பொது மக்களிடம் இருந்து நிதி திரட்ட அரசு முடிவு செய்தது. இதற்காக ஆந்திர அரசு மும்பை ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மூலம் ₹10 ஆயிரம் கோடி மதிப்புள்ள பாண்டுகளை விற்பனை செய்ய முடிவு செய்தது. அதன்படி நேற்று ₹1300 கோடி மதிப்புள்ள பாண்டுகளை மும்பை ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மூலம் ஆந்திர அரசு விற்பனைக்கு வைத்தது. விற்பனைக்கு வைத்த ஒரு மணி நேரத்திலேயே அனைத்து பாண்டுகளும் விற்றுத்தீர்ந்தது. தொடர்ந்து, மேலும் ₹700 கோடி மதிப்புள்ள பாண்டு விற்பனைக்கு வைத்தது. இவையும் விற்பனை ஆனது. இதுகுறித்து ஆந்திர சிஆர்டிஏ கமிஷனர் தர் நிருபர்களிடம் கூறியதாவது: ஆந்திர மாநில அரசு அமராவதி தலைநகர் அமைக்க 60 நாட்களில் 90 சதவீதம் நிலங்களை சேகரித்தது. 36 மாதத்தில் நிலத்துக்கு தேவையான உள்கட்டமைப்பு திட்ட வடிவமைப்பு, இன்ஜினியரிங் டிசைன்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும், 20 ஆயிரம் பணியாளர்கள், 10 ஆயிரம் லாரிகள் மூலமாக தலைநகருக்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. தலைநகர் அமைக்க நிதி சேகரிப்பதற்காக ₹1300 கோடிக்கு பாண்டு வெளியிட முடிவு செய்து வெளியிடப்பட்டது. முதல்வர் மீதுள்ள நம்பிக்கையால் ₹1300 கோடிக்கு பாண்டு வெளியிடப்பட்டது. ஆனால் பாண்டு வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே கூடுதலாக ₹700 கோடிக்கு வாங்க முதலீட்டாளர்கள் முன்வந்தனர்.நாளை முதலீட்டாளர்கள் சிஆர்டிஏ வங்கி கணக்குக்கு பணம் செலுத்த உள்ளனர். கூடுதலாக நிதி தேவைப்பட்டால் ₹700 கோடி பயன்படுத்திக்கொள்ளப்படும். 10 ஆண்டுக்கு வெளியிடப்பட்ட பாண்டு மூலம் முதல் 5 ஆண்டுகளுக்கு வட்டி மட்டும் செலுத்தப்படும். அதன்பிறகு வரும் 5 ஆண்டுகளுக்கு முதலீட்டுக்கான தொகை வழங்கப்படும். இதேபோன்று லண்டன், சிங்கப்பூர், நியூயார்க் ஸ்டாக் மார்க்கெட் மூலம் நிதி திரட்டவும், ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் உலகளவில் அமராவதி குறித்த பிரசாரமாகவும் முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும். ஆந்திர மாநில அரசு தொழிற்சாலைகள் தொடங்க ஏற்ற மாநிலங்களில் முதலிடத்திலும் பாதுகாப்பாக வாழும் நகரங்களில் 2 இடங்களையும் பிடித்துள்ளதால் முதலீட்டாளர்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. முதல் முறையாக ஒரு தலைநகர் அமைக்க ஷேர் பாண்டு வெளியிடப்பட்டு, நிதி திரட்டப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும். இவ்வாறு அவர் கூறினார்.