கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மாணவர்கள், பேராசிரியர்கள் உள்பட 99 ஆயிரம் பேருக்கு அமெரிக்காவைச் சேர்ந்த இன்டெல் இந்தியா கம்ப்யூட்டர் நிறுவனம் செயற்கை நுண்ணறிவுத்திறன் பயிற்சி அளித்துள்ளது.இந்தியாவில் உள்ள 15 ஆயிரம் பேருக்கு செயற்கை நுண்ணறிவுத்திறன் பயிற்சி அளிக்க முடிவு செய்து இன்டெல் இந்தியா கம்ப்யூட்டர் நிறுவனம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த திட்டத்தை தொடங்கியது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் 15 ஆயிரம் பேருக்கு இந்த பயிற்சியை அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதற்காக, நாடெங்கிலும் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களான ஐஐடி டெல்லி, மும்பை, கோரக்பூர், கான்பூர், சென்னை மற்றும் ஐஐடி பெங்களூரு, சிடிஏசி மற்றும் ஷெல், டிசிஎஸ் நிறுவனங்களுடன் கைகோர்த்தது. இதுதொடர்பாக இன்டெல் இந்தியா கம்ப்யூட்டர் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தை நிர்வாக இயக்குநர் பிரகாஷ் மல்லையா கூறியதாவது:மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் டெவலப்பர்கள் உள்பட 15 ஆயிரம் பேருக்கு கடந்த ஏப்ரல் மாதம் வரையிலான ஒரு ஆண்டில் பயிற்சி பட்டறைகள் மூலம் பயிற்சி அளிக்க நாங்கள் இலக்கு நிர்ணயித்தோம். எனினும், 100 நிறுவனங்களுடன் கைகோர்த்து செயல்பட்டதால், 99 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலக்கை விட 7 மடங்கு அதிகமாக நாங்கள் பயிற்சி அளித்துள்ளோம். மேலும், இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு பிரகாஷ் மல்லையா கூறினார்.இதனிடையே, தன்னுடைய முதலாவது செயற்கை நுண்ணறிவு டெவலப்பர்கள் மாநாட்டை கடந்த வாரம் பெங்களூருவில் இன்டெல் நிறுவனம் நடத்தியது. இதில் 500க்கும் மேற்பட்ட டெவலப்பர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த திட்டத்தில் பிலிப்ஸ் இந்தியா மற்றும் எம்பசிஸ் நிறுவனங்களுடனும் கைகோர்க்க இன்டெல் இந்தியா திட்டமிட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.