சாதாரண போன்கள் கூட இரட்டை சிம்களுடன் வருகின்றன. ஸ்மார்ட் போன்களிலும் இரட்டை சிம் வசதி உள்ளது. மொபைல் போன் வைத்துள்ள பெரும்பாலானோர் இரண்டு சிம்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே இத்தகைய மாடல்களுக்கு பெரும் வரவேற்பு உண்டு. ஆனால், ஐபோன்களை பொறுத்தவரை ஒரு சிம் வசதியுடன்தான் வருகின்றன. மற்ற நாடுகளை விட ஆசிய நாடுகளில், குறிப்பாக இந்தியாவில் இரட்டை சிம் வசதி போன்களே வாடிக்கையாளர்களின் முதன்மை தேர்வாக இருக்கிறது.இதை கருத்தில் கொண்டு ஆசிய சந்தைக்கென பிரத்யேகமாக இரட்டை சிம் போன்களை தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஐஓஎஸ் 12 பீட்டா பதிப்பு சோதனை முறையில் உள்ளது. இது இரட்டை சிம்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் இது குறித்த ஆய்வறிக்கையில் இரண்டாவது சிம் டிரே பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. எனவே இது ஆப்பிள் நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கும் ஐபோன்களில் இரட்டை சிம் வசதி இடம்பெறும் என்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளன. சீனா உட்பட சர்வதேச சந்தையில் கோலோச்சி வந்த ஆப்பிள் நிறுவனம், விற்பைனயில் பெரும் சரிவை சந்தித்தது. அப்போது கூட இந்திய சந்தைதான் இதற்கு கைகொடுத்தது. இதனால், இந்திய சந்தையின் மீது ஆப்பிள் நிறுவனம் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. இருப்பினும், உயர் ரக ஆன்டிராய்டு போன்கள் ஆப்பிள் நிறுவன போன் விற்பனைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. எனவேதான் இரட்டை சிம் போன்களை களம் இறக்க ஐபோன் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த ஆண்டு ஹோம்பாட் பிர்ம்வேர் தகவல்களில் ஐபோன் எக்ஸ் பற்றிய விவரங்கள் வெளியாகின. இதே தோற்றம் மற்றும் வசதிகளுடன்தான் ஐபோன் எக்ஸ் சந்தைப்படுத்தப்பட்டது. எனவே, இரட்டை சிம்களுடன் ஐபோன் வருவது உறுதிதான் என்று சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.