Sunday, 5 August 2018

மூலப்பொருட்கள் விலை உயர்வு, ஜிஎஸ்டி காரணமாக பட்டாசு விலை நடப்பாண்டில் 15 சதவீதம் உயர வாய்ப்புகள்...

மூலப்பொருட்கள் விலை உயர்வு, ஜிஎஸ்டி காரணமாக பட்டாசு விலை நடப்பாண்டில் 15 சதவீதம் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 850க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் உள்ளன. தீபாவளி முடிந்த ஒரு சில வாரங்களிலேயே கிறிஸ்துமஸ், புதுவருட பிறப்பை முன்னிட்டு ஆலைகளில் உற்பத்தி பணிகள் தீவிரமடைந்து விடும். பொதுவாக, மார்ச் முதல் மே வரை பட்டாசு ஆலை பிரதிநிதிகள், ஏஜெண்டுகள் மஹாராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் போன்ற வெளிமாநிலங்களுக்கு சென்று தீபாவளி பண்டிகைக்கான ஆப் சீசன் ஆர்டர்களை புக் செய்கின்றனர். பட்டாசு ஆலைகளில் ஜூலை மாதம் வரை உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள் 70 சதவீதம் வரை வடமாநில ஆர்டர்களுக்கே அனுப்பி வைக்கப்படும். இதன் பின்னர் உற்பத்தி செய்யபடும் பட்டாசுகள் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு அதிகளவில் அனுப்பப்படும். சிவகாசியில் சாத்தூர் ரோடு, பஸ்நிலையம், விருதுநகர் ரோடு, வெம்பக்கோட்டை ரோடு, திருவில்லிபுத்தூர் ரோடு ஆகிய இடங்களில் 900க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் உள்ளன. இந்த கடைகளில் செப்டம்பர் முதல் விற்பனை சூடு பிடிக்க துவங்கிவிடும். இதற்காக பட்டாசு கடை உரிமையாளர்கள் ஆண்டுதோறும் ஆடி பெருக்கு தினத்தன்று கடைகளில் சிறப்பு பூஜைகள் நடத்தி விற்பனையை துவக்குவது வழக்கம். ஆடி பெருக்கை முன்னிட்டு நேற்று சிவகாசியில் ஏராளமான பட்டாசு கடை உரிமையாளர்கள் கடையை திறந்து சிறப்பு பூஜை நடத்தி பட்டாசு விற்பனையை துவக்கினர். ஆனால் இந்த ஆண்டு பட்டாசுகளுக்கு ஜிஎஸ்டி 18 சதவீதம் வரை விதிக்கப்பட்டுள்ளதால் விற்பனையில் பாதிப்பு ஏற்படும் என வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து பட்டாசு வியாபாரி குமரேசன் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு சிவகாசியில் உள்ள பட்டாசு கடைகளில் விற்பனை அமோகமாக இருந்தது. கடைசி நேரத்தில் பட்டாசுகளுக்கு 10 முதல் 15 சதவீதம் வரை மட்டுமே தள்ளுபடி வழங்கப்பட்டது. ஜிஎஸ்டி, உச்சநீதிமன்றத்தில் பட்டாசு விற்பனைக்கு தடை கோரிய வழக்கு விசாரணை உள்ளிட்ட காரணங்களால், நடப்பாண்டு வெளிமாநிலங்களில் போதிய ஆர்டர்கள் இல்லாமல் பட்டாசு விற்பனை குறைந்துள்ளது. ஆலைகளில் அதிகளவு இருப்பு வைத்துள்ளனர். எனவே இந்த ஆண்டு பட்டாசுகளுக்கு கிராக்கி ஏற்பட வாய்ப்பில்லை. மூலப்பொருட்கள் விலை உயர்வு, ஜிஎஸ்டி காரணமாக இந்த ஆண்டு பட்டாசுகளின் விலை 10 முதல் 15 சதவீதம் வரை உயரக்கூடும் என்பதால் விற்பனையில் பாதிப்பு இருக்குமோ என்ற அச்சம் உள்ளது,’’ என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.