Tuesday, 28 August 2018

யூபிஐ (UPI)என்றால் என்ன? எப்படி செயல் பட்டு வருகிறது?

ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போது நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்ற கட்டண வழிமுறைகள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இந்நாட்களில் பெரும்பாலான ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் யூபிஐ (UPI) வாயிலான கட்டணச் சேவைகளை வழங்குகின்றன. அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களும் இதில் அடங்கும். பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகளவு மேற்கொள்ளும்படி அரசு தரப்பிலிருந்தும் அதிகமாக ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. யூபிஐ என்பது வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட ஒரு கட்டணச் சேவை. இதன் வாயிலாக இரு வங்கிக் கணக்குகளிடையே பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். உங்களிடம் ஒரு வங்கிக் கணக்கும், ஸ்மார்ட்போனும் இருந்தால், நீங்கள் உடனடியாக யூபிஐ சேவைகளைப் பயன்படுத்த முடியும். அதற்கு நீங்கள் ஏதேனும் ஒரு யூபிஐ செயலியைத் தரவிறக்கம் (download) செய்துகொண்டால் போதுமானது. நீங்கள் மற்றொரு யூபிஐ பயனாளிக்குப் பணம் அனுப்ப வேண்டுமென்றால், IMPS, NEFT சேவைகளை விட, யூபிஐ வழியாக அதிவேகத்தில் பணத்தை அனுப்பிவிட முடியும். NEFT கட்டண முறையில், நீங்கள் யாருக்குப் பணம் அனுப்ப வேண்டுமோ, அவரது வங்கிக் கணக்கு எண், IFSC உள்ளிட்ட விவரங்கள் தேவை. ஆனால், யூபிஐ தளத்தில் அதுபோன்ற விவரங்கள் தேவையில்லை. தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக யூபிஐ வாயிலான கட்டணச் சேவைகள் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. அண்மையில் அறிமுகமான கூகுளின் டெஸ் (Tez) செயலி யூபிஐ கட்டணச் சேவைகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. அறிமுகமான நாள் முதல் பல்வேறு சலுகைகளையும் டெஸ் வழங்கி வருகிறது. இதன் விளைவாகப் பலரும் டெஸ் செயலியைப் பயன்படுத்தத் தொடங்கினர். பல தொழில் நிறுவனங்களிலும், கடைகளிலும் கூட டெஸ் வாயிலான கட்டணங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. யூபிஐ தளம் தேசியக் கொடுப்பனவுக் கழகத்தால், ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்தின் துணையுடன் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். ரூபே கட்டணச் சேவையையும் தேசியக் கொடுப்பனவுக் கழகம் இயக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. IMPS கட்டணத் தளத்தையும் தேசிய கொடுப்பனவுக் கழகம்தான் இயக்கி வருகிறது. எனினும், IMPS தளத்தை விட யூபிஐ தளம் மேம்படுத்தப்பட்டதாகும். ஏன் யூபிஐ வசதியைப் பயன்படுத்த வேண்டும்? ஆன்லைன் வாயிலாக வங்கிப் பரிவர்த்தனையை மேற்கொள்ள வேண்டுமானால் வங்கிக் கணக்கு எண், கணக்கு ரகம், வங்கியின் பெயர், IFSC உள்ளிட்ட தகவல்கள் தேவைப்படும். இந்தத் தகவல்கள் அனைத்தும் உங்களிடம் இருந்தாலும்கூட, அவற்றை ஒவ்வொன்றாக உங்கள் மொபைலில் டைப் செய்வது மிகக் கொடுமையான வேலை. புதிதாக ஒரு நபரை இணைப்பதற்கு பெரும்பாலான வங்கிகள் 12 மணி நேரம் எடுத்துக் கொள்கின்றன. அந்த நபரை இணைத்த பிறகே உங்களால் பணத்தை அனுப்ப முடியும். அவசரமாக ஒருவருக்குப் பணம் அனுப்ப வேண்டுமென்றால் அது சாத்தியமில்லை. மேற்கண்ட பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்காகத்தான் யூபிஐ தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. யூபிஐ வாயிலாக வங்கிக் கணக்கு எண், மொபைல் எண், ஆதார் எண் அல்லது யூபிஐ ஐடி மட்டும் கொண்டு ஒருவருக்கு உடனடியாகப் பணத்தை அனுப்பிவிட முடியும். இதற்கு IFSC போன்ற தகவல்கள் தேவையில்லை. யூபிஐ தளத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், இச்சேவையை 24 மணி நேரமும் பயன்படுத்த முடியும். ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், கடைகள், ஸ்விகி போன்ற சேவைகளுக்கு மட்டுமல்லாமல், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் உடனடியாக பணம் அனுப்ப முடியும். நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை உபயோகிப்பவராக இருக்கலாம். ஒவ்வொரு வங்கிக்கும் ஒரு செயலியைப் பயன்படுத்தி, அதன் விளைவாக எரிச்சலுக்கு ஆளாகியிருக்கலாம். இதிலிருந்து யூபிஐ செயலிகள் உங்களுக்கு விடுதலை அளிக்கின்றன. ஒரு யூபிஐ செயலியில் பல வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களது வங்கிக் கணக்குகளுக்குள்ளேயே நீங்கள் பணத்தை மாற்றிக்கொள்ளலாம். மிகவும் பாதுகாப்பாகவும், எளிமையாகவும் இருக்கும். உங்கள் மொபைலில் பல செயலிகள் இடத்தை அடைத்துக்கொண்டு இருக்காது. உங்களது வசதிக்காகக் கூகுள் பிளே ஸ்டோரில் பல்வேறு யூபிஐ செயலிகள் உள்ளன. நீங்கள் எந்த வங்கியின் செயலியை வேண்டுமென்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் எஸ்பிஐ வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி வந்தாலும், ஹெச்டிஎஃப்சி வங்கியின் யூபிஐ செயலியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சிறு நகரங்களில் ஸ்வைப்பிங் மெஷின் வாயிலாக பணம் செலுத்துவது எளிதான வேலையல்ல. பெரும்பாலான வர்த்தகர்களிடம் ஸ்வைப்பிங் மெஷின்களே இருப்பதில்லை. இந்த மெஷின்கள் பிஓஎஸ் (பாயின்ட் ஆஃப் சேல்) மெஷின் எனப்படுகின்றன. இந்தக் கருவிகள் விலையுயர்வாக இருப்பதால் சிறு வணிகர்கள் அவற்றை வாங்கி வைப்பதில்லை. ஸ்வைப்பிங் மெஷினுக்கு ஆகும் செலவுடன், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் அவர்கள் சேவைக் கட்டணமும் செலுத்த வேண்டியுள்ளது. பரிவர்த்தனையின் மதிப்புக்கு ஏற்ப 1.25 விழுக்காடு முதல் 2.5 விழுக்காடு வரை சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உண்மையைச் சொன்னால், ஸ்வைப்பிங் மெஷின்களால் சிறு வணிகர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. இதற்கு நல்ல மாற்று வழியாக யூபிஐ தளம் உதவிபுரிகிறது. ஸ்வைப்பிங் மெஷின் செய்யக்கூடிய அதே வேலையை யூபிஐ தளம் மிகக் குறைவான கட்டணத்தில் செய்து முடிக்கிறது. மேலும், யூபிஐ தளம் ஸ்மார்ட்போன்களில் இயங்குவதால், ஸ்வைப்பிங் மெஷின் வாங்குவதற்கான செலவு அவசியமற்றுப் போகிறது. இணையதளங்களில் கட்டணங்களைச் செலுத்தும்போது, டெபிட் கார்டு / கிரெடிட் கார்டு எண், சிவிவி எண் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டியுள்ளது. இது பெரும்பாலானோருக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும். ஏனெனில், நமது தகவல்களை இணையதளங்கள் திருடிவிட்டால் என்ன செய்வது? இந்த அச்சத்தையும் போக்கும் விதமாகத்தான் யூபிஐ தளம் செயல்படுகிறது. யூபிஐ ஐடியை மட்டும் கொடுத்தால் மட்டும் போதும், கட்டணம் மிக எளிதாகச் செலுத்தப்பட்டுவிடும். இது மிகவும் பாதுகாப்பானதும் கூட.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.