Friday, 3 August 2018

கைத்தறிகளுக்கு ஐந்து சதவீத ஜி.எஸ்.டி. விரைவில் ரத்து செய்யப்படும்

கைத்தறிகளுக்கு ஐந்து சதவீத ஜி.எஸ்.டி. விரைவில் ரத்து செய்யப்படும் என கைத்தறி துறை அமைச்சர் ஒ.எஸ்.மணியன் கூறினார். தமிழக அரசு சார்பில், பன்னாட்டு ஜவுளி கண்காட்சி கோவை கொடிசியா வளாகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.2 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. கண்காட்சி அமைப்பது தொடர்பாக ஏற்றுமதியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் கோவை ரேஸ்கோர்சில் உள்ள தென்னிந்திய மில்கள் சங்கம் வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், தமிழக கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டார். கூட்டத்தின் முடிவில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவை கொடிசியா அரங்கில் பன்னாட்டு ஜவுளி கண்காட்சி நடத்தப்பட உள்ளது. தமிழக மக்களிடம் வாங்கும் திறன் குறைந்திருப்பது என பொதுவாக சொல்வது சரியானது அல்ல. உற்பத்தியை போல நுகர்வோரும் மிகுதியாக இருப்பதால், ஜி.எஸ்.டி.,யினால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. கைத்தறிக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என மத்திய அரசிடம், தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. இது, விரைவில் நிறைவேறும். கைத்தறி உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விசைத்தறி உரிமையாளர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்யும் பணியில் அந்தந்த மாவட்ட கலெக்டர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தாமதம் ஆகிறது என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.