மானிய விலையில் விற்பனை செய்யப்படும் சமையல் காஸ் விலை சிலிண்டருக்கு ரூ1.76 உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப சமையல் காஸ் விலையை நிர்ணயம் செய்கின்றன. வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இந்த சிலிண்டருக்கான மானியம், வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் 14.2 கிலோ எடை கொண்ட மானிய சிலிண்டர் விலை சென்னையில் ரூ2.42 அதிகரிக்கப்பட்டு ரூ481.84 ஆகவும், டெல்லியில் ரூ493.55 ஆகவும் இருந்தது. இதை தொடர்ந்து ஜூலை மாத சிலிண்டர் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. இதன்படி 14.2 கிலோ எடை கொண்ட மானிய சிலிண்டர் டெல்லியில் ரூ2.71 அதிகரித்து, ரூ496.26 ஆகவும் சென்னையில் ரூ2.83 அதிகரித்து ரூ484.67ஆகவும், மானிய மற்ற சிலிண்டர் ரூ58 அதிகரித்து ரூ770.50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.தொடர்ந்து இந்த மாதமும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் வெளியிட்ட அறிவிப்பில், வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ சமையல் காஸ் சிலிண்டர் டெல்லியில் ரூ1.76 உயர்த்தப்பட்டு ரூ498.02 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் விலை உயர்வு மற்றும் ரூபாய் மதிப்பு சரிவால் விலை உயர்த்தப்படுகிறது. இதற்கான மானியத்தை அரசு வழங்குகிறது. இருப்பினும், இதற்கேற்ப உயர்த்தப்பட்ட விலையில், மானியமற்ற சிலிண்டர் விலையின்படி ஜிஎஸ்டி கணக்கிடப்பட்டு மானியமற்ற சிலிண்டருக்கான விலையும் உயர்த்தப்பட்டுள்ளது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. மானியமற்ற சிலிண்டர் விலை ரூ35.50 உயர்த்தப்பட்டு ரூ789.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ரூ55.50 உயர்த்தப்பட்டது. மானிய சிலிண்டர் வாங்குவோருக்கு ரூ35.50ல் ரூ1.76 போக ரூ33.74 கூடுதலாக வங்கி கணக்கில் செலுத்தப்படும். இதன்படி டெல்லியில் சிலிண்டர் ஒன்றுக்கு மானியமாக ரூ291.48 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.