Friday, 24 August 2018

பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டிக்குள் வருவதற்கு வாய்ப்பே இல்லை


பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டிக்குள் வருவதற்கு வாய்ப்பே இல்லை எனவும், மாநில அரசுகள் வருவாயை இழக்க விரும்பவில்லை எனவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, இறக்குமதி செலவு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினசரி நிர்ணயம் செய்து வருகின்றன. நாளுக்கு நாள் உச்சத்தை எட்டும் பெட்ரோல்,் டீசல் விலை கட்டுக்குள் வராதா என பொதுமக்கள் ஏங்குகின்றனர். ஆனால், விலையை கட்டுப்படுத்தும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைக்க மத்திய ்அரசு விரும்பவில்லை. தற்போது பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ₹19.48ஆகவும், டீசல் மீதான கலால் வரி ₹15.33 ஆகவும் உள்ளது. பெட்ரோல் விலையில் 45 முதல் 50 சதவீதமும், டீசல் விலையில் 35 முதல் 40 சதவீதமும் வரிகளாக உள்ளன. பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், இவற்றை ஜிஎஸ்டியில் கொண்டு வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பெட்ரோல், டீசல், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, விமான பெட்ரோல் ஆகியவை ஜிஎஸ்டியில் இல்லை. இதில் முதல் கட்டமாக விமான பெட்ரோல், இயற்கை எரிவாயு ஆகியவற்றை ஜிஎஸ்டியில் கொண்டு வர மத்திய அரசு முனைப்புடன் உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவது தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மூலம் மாநில அரசுகளுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், இயற்கை எரிவாயு ஜிஎஸ்டியில் கொண்டுவரப்படுவது பற்றி பரிசீலிக்கப்பட்டது. ஆனாலும், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர எந்த ஒரு மாநிலமும் ஆதரவு தெரிவிக்கவில்லை. கட்சி பேதமின்றி எல்லா மாநிலங்களுமே இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஜிஎஸ்டிக்கு பிறகு எந்த ஒரு சூழ்நிலையிலும், தங்கள் வருவாயை இழக்க அவை விரும்பவில்லை. எனவே, பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டிக்குள் வர சாத்தியமே இல்லை என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.