ஜிஎஸ்டியில் வட மாநிலத்தில் உற்பத்தியாகும் ஆட்டா சக்கி கிரைண்டருக்கு 5 சதவீதமும், கோவையில் உற்பத்தியாகும் வெட் கிரைண்டருக்கு 12 சதவீதம் விதிக்கப்பட்டுள்ள பாரபட்சத்தால், கோவை வெட்கிரைண்டர் உற்பத்தி மற்றும் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. கோவையில் 1,200 வெட்கிரைண்டர் மற்றும் உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்களும், அதனை நம்பி 40 ஆயிரம் தொழிலாளர் உள்ளனர். கோவையில் இருந்து வெட்கிரைண்டர்கள் தமிழர்கள் வாழும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கும், வட மாநில நகரங்களுக்கும், சிங்கப்பூர், மலேஷியா, இலங்கை மற்றும் வளைகுடா நாடுகளுக்கும் செல்கிறது. ஜிஎஸ்டிக்கு முன் வெட் கிரைண்டர்களுக்கு 5 சதவீத வாட் வரி விதிக்கப்பட்டிருந்தது. ஜிஎஸ்டி அமலாக்கத்தின் போது வெட் கிரைண்டர்களுக்கான வரி 28 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. இதனால் ரூ.4 ஆயிரம் மதிப்பிலான கிரைண்டர் ஒன்றிற்கு ரூ.ஆயிரம் வரை விலை உயர்ந்ததால் விற்பனை பாதிக்கப்பட்டது. பின்னர், வரியை குறைக்க வேண்டும் என்று முறையிட்டதின் பலனாக 28 சதவீதம் 12 சதவீதமாக மாற்றப்பட்டது. அதன் காரணமாக, விலை குறைந்து, விற்பனை மீண்டும் உயர்ந்தது. இந்நிலையில், வட மாநிலத்தில் கோதுமை அரைக்க பயன்படுத்தும் ஆட்டா சக்கி கிரைண்டருக்கு ஜிஎஸ்டியில் விதிக்கப்பட்ட 28 சதவீதம் 5 சதவீதமாக மாற்றப்பட்டது. ஆட்டா சக்கி கிரைண்டருக்கும், வெட் கிரைண்டர்களுக்கும் வித்தியாசம் இல்லை. ஆட்டா சக்கி கிரைண்டர் மூலம் இட்லி, தோசைக்கான மாவு அரைக்க முடியும். இதனால் ஜிஎஸ்டி வரி குறைப்பை தங்களுக்கு சாதகமாக எடுத்து கொண்ட வட மாநில விற்பனையாளர்கள், ஆட்டா சக்கி கிரைண்டரை தமிழகத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இதனால் கோவை வெட்கிரைண்டர்கள் விற்பனையும், உற்பத்தியும் 10 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே வெட் கிரைண்டர்களுக்கு ஆட்டா சக்கி கிரைண்டர்களுக்கு நிர்ணயித்தது போல் 5 சதவீதம் நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். பலனில்லாததால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து கோவை வெட்கிரைண்டர்கள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் சாஸ்தா ராஜா கூறுகையில், ஜிஎஸ்டி கவுன்சில் குழுவில் தமிழக அரசின் பிரதிநிதியாக அமைச்சர் ஜெயக்குமார் இடம்பெற்றுள்ளார். அவர் மூலம் வெட்கிரைண்டருக்கு வரியை 5 சதவீதமாக மாற்ற நடவடிக்கை எடுக்கும்படி கோரியுள்ளோம். அவரும் கடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பரிந்துரை செய்துள்ளார். இதனால் வரும் 5ம் தேதி நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வெட்கிரைண்டருக்கு வரி குறையும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.