Monday, 20 August 2018

திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு ரூ.8,757 கோடி மதிப்புள்ள ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் ஜூலை மாதம் வரை திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு ரூ.8,757 கோடி மதிப்புள்ள ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஏற்றுமதி செய்ததைவிட 5.98 சதவீதம் அதிகம். இதனால், ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் இருந்து பல நாடுகளுக்கு குளிர்காலம், கோடை கால ஆடைகள் தயாரித்து அனுப்பப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட நிர்வாக சீர்திருத்தங்களான பணம் மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, இ-வே பில் உட்பட பல்வேறு காரணங்களால் உள்நாடு, வெளிநாட்டு வர்த்தகத்தில் சற்று பின்னடைவு ஏற்பட்டது. 9 மாதங்களாக தொடர்ந்து சரிந்து வந்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தக மதிப்பு கடந்த ஜூலையில் சற்று வளர்ச்சி பெற்றது.2017ல், 8,262.94 கோடி ரூபாயாக இருந்த ஏற்றுமதி மதிப்பு, நடப்பாண்டு ஜூலையில், 8,757.23 ரூபாயாக, 5.98 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால், ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார் கூறியதாவது:திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு மூலப்பொருட்கள் விலை உயர்வு, உற்பத்தி செலவு அதிகரிப்பால் நெருக்கடிக்கு ஆளாகினர். ஆடைகளின் விலையை அதிகரிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 9 மாதங்களாக தொடர்ந்து சரிந்து வந்த நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தக மதிப்பு, கடந்த ஜூலை மாதம், ரூபாய் மதிப்பு அடிப்படையில் கணக்கிடும்போது, 5.98 சதவீதம் ஏற்றுமதி மதிப்பு அதிகரித்துள்ளது. ஆனால், டாலர் மதிப்பில் கணக்கிடும் போது, வர்த்தகம் சரிந்துள்ளது.கடந்த 2017 ஜூலை மாதம், 1274.83 மில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதி, நடப்பாண்டு ஜூலை மாதம், 0.56 சதவீதம் குறைந்துள்ளது.66 ரூபாயாக இருந்த டாலர் மதிப்பு, 70 ரூபாயாக உயர்ந்துள்ளது. டாலர் மதிப்பு அதிகரிப்பது தான், ஏற்றுமதி வர்த்தக உயர்வுக்கு காரணம். ரூபாய் மதிப்பு அடிப்படையில், ஏற்றுமதி வர்த்தக மதிப்பு உயர்ந்துள்ளது சற்று நிம்மதி அளிக்கிறது. டாலர் மதிப்பு மேலும் உயரும் என்பதால், ஏற்றுமதிக்கு சாதகமான சூழல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக நம்புகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.