அமராவதி தலைநகருக்காக நிதி திரட்ட மும்பை ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் ஆந்திர மாநில அரசு அதிரடியாக பாண்டு விற்பனை செய்யப்பட்டதில், ஒரே நாளில் ₹2 ஆயிரம் கோடி திரண்டப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆந்திர மாநில தலைநகர் அமைக்க மாநில பிரிவினையின்போது கூறியபடி மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால் மத்திய அரசிடம் இருந்து நிதி பெறுவதற்காக ஆந்திர மாநில அரசு தொடர்ந்து போராடி வருகிறது. மத்திய அரசிடம் நிதி கேட்டும் வழங்காத நிலையில் பொது மக்களிடம் இருந்து நிதி திரட்ட அரசு முடிவு செய்தது. இதற்காக ஆந்திர அரசு மும்பை ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மூலம் ₹10 ஆயிரம் கோடி மதிப்புள்ள பாண்டுகளை விற்பனை செய்ய முடிவு செய்தது. அதன்படி நேற்று ₹1300 கோடி மதிப்புள்ள பாண்டுகளை மும்பை ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மூலம் ஆந்திர அரசு விற்பனைக்கு வைத்தது. விற்பனைக்கு வைத்த ஒரு மணி நேரத்திலேயே அனைத்து பாண்டுகளும் விற்றுத்தீர்ந்தது. தொடர்ந்து, மேலும் ₹700 கோடி மதிப்புள்ள பாண்டு விற்பனைக்கு வைத்தது. இவையும் விற்பனை ஆனது. இதுகுறித்து ஆந்திர சிஆர்டிஏ கமிஷனர் தர் நிருபர்களிடம் கூறியதாவது: ஆந்திர மாநில அரசு அமராவதி தலைநகர் அமைக்க 60 நாட்களில் 90 சதவீதம் நிலங்களை சேகரித்தது. 36 மாதத்தில் நிலத்துக்கு தேவையான உள்கட்டமைப்பு திட்ட வடிவமைப்பு, இன்ஜினியரிங் டிசைன்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும், 20 ஆயிரம் பணியாளர்கள், 10 ஆயிரம் லாரிகள் மூலமாக தலைநகருக்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. தலைநகர் அமைக்க நிதி சேகரிப்பதற்காக ₹1300 கோடிக்கு பாண்டு வெளியிட முடிவு செய்து வெளியிடப்பட்டது. முதல்வர் மீதுள்ள நம்பிக்கையால் ₹1300 கோடிக்கு பாண்டு வெளியிடப்பட்டது. ஆனால் பாண்டு வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே கூடுதலாக ₹700 கோடிக்கு வாங்க முதலீட்டாளர்கள் முன்வந்தனர்.நாளை முதலீட்டாளர்கள் சிஆர்டிஏ வங்கி கணக்குக்கு பணம் செலுத்த உள்ளனர். கூடுதலாக நிதி தேவைப்பட்டால் ₹700 கோடி பயன்படுத்திக்கொள்ளப்படும். 10 ஆண்டுக்கு வெளியிடப்பட்ட பாண்டு மூலம் முதல் 5 ஆண்டுகளுக்கு வட்டி மட்டும் செலுத்தப்படும். அதன்பிறகு வரும் 5 ஆண்டுகளுக்கு முதலீட்டுக்கான தொகை வழங்கப்படும். இதேபோன்று லண்டன், சிங்கப்பூர், நியூயார்க் ஸ்டாக் மார்க்கெட் மூலம் நிதி திரட்டவும், ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் உலகளவில் அமராவதி குறித்த பிரசாரமாகவும் முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும். ஆந்திர மாநில அரசு தொழிற்சாலைகள் தொடங்க ஏற்ற மாநிலங்களில் முதலிடத்திலும் பாதுகாப்பாக வாழும் நகரங்களில் 2 இடங்களையும் பிடித்துள்ளதால் முதலீட்டாளர்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. முதல் முறையாக ஒரு தலைநகர் அமைக்க ஷேர் பாண்டு வெளியிடப்பட்டு, நிதி திரட்டப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.