டிஜி லாக்கர், எம் பரிவாகனில் இணைக்கப்பட்ட டிஜிட்டல் டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புத்தகம் ஆகியவற்றை ஏற்க வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிக்கை அனுப்பியுள்ளது. தமிழகம் உட்பட சில மாநிலங்களில் வாகனம் ஓட்டுபவர்கள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மாநிலங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதில், வாகன இன்சூரன்ஸ், டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை டிஜி லாக்கரில் இணைத்து வைத்திருந்தால் ஏற்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. டிஜிட்டல் மயமாக்கலின் ஒரு பகுதியாக, டிஜி லாக்கர் என்ற இணையதளம் ஏற்படுத்தப்பட்டது. இதுபோல் எம் பரிவாகன் என்ற இணையதளமும் உள்ளது. இவற்றுக்கான மொபைல் ஆப்ஸ்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஸ்மார்ட்போன்களில் இவற்றை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புத்தகம், கல்வி சான்றிதழ்கள், வருமான வரி தொடர்பான ஆவணங்கள் உட்பட பலவற்றையும் இதில் சேமித்து வைக்க முடியும். இவற்றில் குறிப்பாக, ஆர்சி புத்தகம், லைசென்ஸ் விவரங்களை உள்ளீடு செய்தால் தானாகவே இதில் இவை பதிவிறக்கம் செய்யப்பட்டு விடும். இவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் காண்பிக்கும்போது, ஒரிஜினலாக கருதி இவற்றை ஏற்றுக்கொள்ளலாம். தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000ன் படி இது சட்டப்பூர்வமாக ஏற்கத்தக்கது. இந்த சட்ட விதி உடனடியாக நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. டிஜி லாக்கர் அல்லது எம்-பரிவாகன் ஆப்சில் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யப்பட்டவை ஏற்கப்பட மாட்டாது. ஆவண விவரங்களை உள்ளீடு செய்து டிஜி லாக்கர் அல்லது எம்-பரிவாகனில் இணையதளம் மூலம் நேரடியாக பதிவிறக்கம் ஆகும் ஆவணங்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.டிஜி லாக்கரில் இணைக்கப்பட்ட ஆவணங்களை முதன் முதலாக பீகார், மத்திய பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளன. இதுபோல், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் இந்த ஆவணங்களை சட்டப்பூர்வமாக ஏற்க வேண்டும் என சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோல், ஏதோ ஒரு காரணத்துக்காக வாகனம் பறிமுதல் செய்யப்பட்டால், அதிகாரிகள் வாகன் அல்லது சாரதி இணையதளத்தில் இருந்து இ-சலான் முறையில் பெற்றுக்கொள்ளலாம். என சாலை போக்குவரத்து அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. தமிழகம் உட்பட சில மாநிலங்களில் டிஜிட்டல் வடிவிலான ஆவணங்கள் ஏற்கப்படுவது கிடையாது. இதுதொடர்பாக வந்த கோரிக்கைகள், ஆர்டிஐ மனு தாக்கல்கள் ஆகியவற்றை தொடர்ந்து மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.டிஜிட்டல் ஆவணம் பெறுவதில் சிக்கல்ஒரிஜினல் டிரைவிங் லைசென்சை டிஜி லாக்கர் அல்லது எம் பரிவாகனில் இணைக்க, லைசென்ஸ் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். ஆர்டிஓ எண் லைசென்ஸ் பெற்ற ஆண்டு, லைசென்ஸ் எண் என்ற வரிசையில் இருக்க வேண்டும். உதாரணமாக, TN02 2001 XXXXXX என உள்ளீடு செய்ய வேண்டும். பழைய லைசென்சுகளில் இந்த வரிசை முறை மாறியிருக்கும். அதாவது ஆண்டு கடைசியாக இடம்பெற்றிருக்கும். ஆனால், எந்த வரிசையில் உள்ளீடு செய்தாலும் 10 அல்லது 15 ஆண்டுக்கு முன்பு வாங்கிய லைசென்ஸ்கள் பதிவிறக்கம் ஆவதில்லை. இதில் உள்ள குளறுபடிகள் நீக்கப்பட வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.