Tuesday 25 June 2019

உலகின் நம்பர் ஒன் வீராங்கனை ஆனார் ஆஸி.யின் ஆஷ்லி பர்டி

உலகின் நம்பர் ஒன் வீராங்கனை ஆனார் ஆஸி.யின் ஆஷ்லி பர்டி


DIN | Published: 25th June 2019 01:02 AM


 


நம்பர் ஒன் வீராங்கனை அந்தஸ்தைப் பெற்ற ஆஷ்லி பர்டி.

பர்மிங்ஹாம் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்றதின் மூலம் முதன்முறையாக உலகின் நம்பர் ஒன் வீராங்கனை அந்தஸ்தை கைப்பற்றியுள்ளார் ஆஸி. வீராங்கனை ஆஷ்லி பர்டி.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஜூலியா ஜார்ஜஸை 6-3, 7-5 என நேர்செட்களில் வென்றார் ஆஷ்லி. 
23 வயதான ஆஷ்லி பர்டி, கடந்த மே மாதம் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். தற்போது பர்மிங்ஹாம் போட்டியில் பட்டம் வென்றதின் மூலம் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒஸாகாவை பின்னுக்கு தள்ளி, நம்பர் ஒன் வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார்.
கடந்த 1976-இல் ஆஸி. வீராங்கனை எவோன் கூலாங் காவ்லி 2 வாரங்கள் முதலிடத்தை வகித்து இருந்தார்.
ஆடவர் பிரிவில் ஜான் நியூகோம்ப், பேட் ராப்டர், லெய்டன் ஹெவிட் ஆகியோர் முதலிடத்தை வகித்துள்ளனர்.
நம்பர் ஒன் இடத்தைப் பெற்ற ஆஷ்லிக்கு டென்னிஸ் ஆஸ்திரேலியா தலைவர் கிரெய்க் டைலி பாராட்டியுள்ளார்.
ஆஸி. நாட்டு பத்திரிகைகளும் அவரை டென்னிஸ் உலகின் புதிய ராணி என பாராட்டியுள்ளன.
ஆஷ்லி பார்ட்டி ஆஸ்திரேலிய பூர்வக் குடியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மறைவு

பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மறைவு


DIN | Published: 25th June 2019 12:59 AM


பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் சதார் காலமானார். அவருக்கு வயது 88.

பாகிஸ்தான் அதிபரான முஷாரப் பதவி வகித்த காலத்தில், இந்தியாவின் ஆக்ரா நகரில் இருநாடுகளிடையேயான உச்சி மாநாடு நடைபெற்றது. அப்போது முஷாரப்புடன் அப்துல் சதாரும் ஆக்ரா வந்திருந்தார். பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சராக இருமுறை அவர் பதவி வகித்துள்ளார்.
இந்தியா, ஆஸ்திரியா, முன்னாள் சோவியத் யூனியன் குடியரசு ஆகிய நாடுகளுக்கான பாகிஸ்தான் தூதராகவும் அவர் இருந்துள்ளார். 1986ஆம் ஆண்டு முதல் 1988ஆம் ஆண்டு வரையிலும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலராகவும் பதவி வகித்துள்ளார். எழுத்தாளராகவும் விளங்கிய சதார், பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக  புத்தகமும் எழுதியுள்ளார்.
அவரின் மறைவுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் இரங்கல் தெரிவித்துள்ளது. அப்துல் சதாரின் மறைவுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
 - Dinamani 25/06/19

Friday 21 June 2019

10 அவசர சட்ட நகல்கள் பார்லிமென்டில் தாக்கல்

பிரதமர் மோடியின் முந்தைய அரசின் கடைசி சில மாதங்களில், அவசர சட்டங்கள் சில பிறப்பிக்கப்பட்டன. அவற்றை, சட்ட மசோதாக்களாக மாற்ற, மத்திய அமைச்சரவை, சமீபத்தில் ஒப்புதல் அளித்திருந்தது. அதன்படி, அவற்றை சட்டமாக மாற்ற, அவசர சட்டத்தின் நகல்கள் நேற்று(ஜூன் 20), பார்லிமென்டின், இரு சபைகளிலும் தாக்கல் செய்யப்பட்டன. பார்லிமென்ட் விவகாரத் துறை இணையமைச்சர்கள், அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் வீ.முரளீதரன் அவற்றை தாக்கல் செய்தனர்.

நடப்பு கூட்டத்தொடரில், 45 நாட்களுக்குள் அவை, சபைகளில் தாக்கல் செய்யப்பட்டு, சட்டமாக நிறைவேற்றப்பட வேண்டும்; இல்லையேல் காலாவதியாகி விடும். நேற்று தாக்கல் செய்யப்பட்ட, அவசர சட்டங்களின் நகல்களில் முக்கியமானவை
வாகரத்து செய்ய, மூன்று முறை, 'தலாக்' என்ற வார்த்தையை சொல்வது சட்ட விரோதம் என்பதை வலியுறுத்தும், முத்தலாக் அவசர சட்டம்
* இந்திய மருத்துவ கவுன்சில் அவசர சட்டம்
* கம்பெனிகள் அவசர சட்டம்
* ஒழுங்கற்ற முதலீட்டு திட்டங்கள் அவசர சட்டம்
* ஜம்மு மற்றும் காஷ்மீர் இட ஒதுக்கீடு அவசர சட்டம்
* ஆதார் மற்றும் பிற அவசர சட்டங்கள்
* சிறப்பு பொருளாதார மண்டல அவசர சட்டம்
* மத்திய கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்கள் இட ஒதுக்கீடு அவசர சட்டம் மற்றும் சில.