Sunday 29 July 2018

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜூன் காலாண்டில் மட்டும் சுமார் 9,459 கோடி ரூபாய் லாபத்தை அடைந்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமம் ஆன ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜூன் காலாண்டில் மட்டும் சுமார் 9,459 கோடி ரூபாய் லாபத்தை அடைந்துள்ளது. இது மார்ச் காலாண்டு விடவும் 17.9 சதவீதம் அதிகமாகும்.  வருவாய் அதேபோல் ஜூன் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் மொத்த வருவாய் 1,41,699 கோடி ரூபாயாக உயர்ந்து அசத்தியுள்ளது. இது கடந்த காலாண்டை விடவும் 9.7 சதவீதமும், கடந்த நிதியாண்டை விடவும் 56.5 சதவீதமும் அதிகமாகும்.  சுத்திகரிப்பு இக்காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் பிரிவில் அதிகளவிலான வருவாய் மற்றும் வர்த்தகத்தைப் பெற்றுள்ளது. அதேபோல் நுகர்வோர் சந்தையிலும் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளதால் கடந்த நிதியாண்டை விடவும் 56.5 சதவீத அதிக வருவாயை அடைந்துள்ளது.  ஒரு பங்கு வருமானம் இதன் மூலம் ஜூன் காலாண்டில் ஒரு பங்கிற்கான வருமானம் கடந்த நிதியாண்டின் 13.5 ரூபாய் என்ற நிலையை விட 16 ரூபாய் என்ற அதிக வருமானத்தை அளித்துள்ளது.  ரீடெயில் ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் மூலம் சுமார் 25,890 கோடி ரூபாய் வருவாயைப் பெற்றுள்ள இது கடந்த நிதியாண்டை விடவும் 124 சதவீதம் அதிகமாகும். இதேபோல் டிஜிட்டல் சர்வீச் வர்த்தகத்தின் மூலம் 9,653 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளது.

Saturday 28 July 2018

மதுரை மல்லிக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

புவிசார் குறியீடு கிடைத்தும் மதுரை மல்லிக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அரசு சென்ட் ஆலை, குளிரூட்டும் குடோன் உள்ளிட்ட திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற கோரிக்கை விடுத்துள்ளனர். பூக்களில் மல்லிகையின் நறுமணம் தனி சிறப்புடையது. அதிலும் மதுரை மல்லிகைக்கு மவுசு அதிகம். மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி தாலுகா பகுதிகளில் சுமார் 1,250 ஹெக்டேர் பரப்பில் மல்லிகை பூ உற்பத்தியாகிறது. மதுரை விவசாயிகள் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் மல்லிகை பூச்செடிக்கு பதியம் பெற்று, நவம்பரில் நடவு செய்வார்கள். மார்ச் முதல் அக்டோபர் வரை மகசூல் செய்வார்கள். ஏப்ரல், ஜூன், ஜூலையில் பூத்துக்குலுங்கும் என்பதால் விலை பயங்கரமாக வீழ்ச்சியாகும். விவசாயிகளுக்கு கட்டுப்படியாகாது. பனி சீசனில் பூக்கள் உதிர்வதால் உற்பத்தி குறையும். ஆனால் விலை ஏற்றம் இருக்கும். இந்த சூழலில் சில ஆண்டுகளுக்கு முன் மதுரை மல்லிகை பூவுக்கு புவிசார் குறியீடு கிடைத்தது. இதன் மூலம் மதுரை மல்லிகை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் கூடுதல் விலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, “மதுரையில் மல்லிகை பூ சென்ட் ஆலை அமைக்கும் திட்டம், விலை வீழ்ச்சி அடைந்தால் வாடாமல் சேமித்து வைத்து, விலை ஏறும்போது விற்பனை செய்ய குளிரூட்டப்பட்ட குடோன்கள் அமைக்கும் திட்டம் என அரசின் அறிவிப்புகள் காற்றில் பறந்து விட்டன. மல்லிகையில் நறுமண சோப்பு, ஆயில், ஷாம்பு தயாரிப்பு திட்டங்கள் நிறைவேறினால் மல்லிகை விவசாயிகள் வாழ்வில் மணம் வீசும்’’ என்றனர். வியாபாரிகள் கூறுகையில், ‘‘மல்லிகைப்பூவை பொறுத்தவரை டல் சீசனில் கிலோ அதிகபட்சமாக ரூ4 ஆயிரம் வரை சென்றுள்ளது. தற்போது வரத்து அதிகரித்தும், ஆடி மாதம் விசேஷங்கள் இல்லாததால் கிலோ ரூ500 - 600 வரை விற்கிறது. நிலையில்லாத விலையால் எங்களுக்கும் பெரிய லாபமில்லை’’ என்றனர்.'மனசு வைக்குமா அரசு?மல்லிகை பூ சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு ரூ25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் செலவாகிறது. பூ பறிக்க கிலோவுக்கு ரூ40 முதல் 50 வரை கூலியாகிறது. ஜிஎஸ்டி, பூக்களை தோட்டங்களில் இருந்து மார்க்கெட்டுக்கு கொண்டு வர போக்குவரத்து கட்டணம். இப்படி பல்வேறு வகையில் உச்சத்திற்கு சென்று விடுகிறது. ஆனால் திருமண சீசன், கோயில் திருவிழா காலங்களில் மட்டும் கிலோ ரூ1,000 முதல் 3000 வரை விற்பனையாகிறது. சாதாரண நாட்களில் அடிமாட்டு விலைக்கு செல்கிறது. இது வியாபாரிகள் நிர்ணயிக்கும் விலையாகும். விவசாயிகளுக்கு இந்த விலை கூட கிடைக்காமல் விரக்தி அடைகின்றனர். எனவே விவசாயிகளுக்கு விலை கிடைக்க நெல், கரும்புக்கு அரசு விலை நிர்ணயிப்பது போல் மல்லிகை பூவிற்கும் நிர்ணயித்து, கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

சீசன் துவக்கத்திலேயே உற்பத்தியும், ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் பெய்து வரும் மழை மற்றும் மேகமூட்டத்தால் இந்த மாதத்தில் துவங்க வேண்டிய தென்னை நார் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சீசன் துவங்கவில்லை. இதனால் கடந்த 3 வாரத்தில் கோவை உட்பட தமிழகத்தில் ரூ200 கோடி ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. தென்னை நார் மற்றும் சார்பு பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் கோவை மாவட்டத்தில் 400 உட்பட தமிழகத்தில் 1,700 உள்ளன. இவை தென்னை மட்டையை மூலப்பொருளாக கொண்டு தென்னை நார் மற்றும் தென்னை நார் தூள் தயாரித்து வருகின்றன. ஒவ்வொரு தொழிற்சாலையிலும் ஒரு நாளைக்கு 4 டன் தென்னை நார் மற்றும் 5 டன் தென்னை நார் தூள் தயாரிக்கப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் தென்னை நார் மற்றும் தென்னை நார் தூள்களில் 80 சதவீதம் சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டாக தென்னை மட்டையின் வரத்து குறைவு காரணமாக 25 சதவீத உற்பத்தியும், ஏற்றுமதியும் குறைந்தது. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அவ்வப்போது பெய்து வரும் மழையால் தென்னை நார் பொருட்களை உலர்த்த முடியாமல் உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோயம்புத்தூர் தென்னை நார் மற்றும் சார்பு பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கவுதமன் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் தினசரி ரூ5 கோடி மதிப்பிலான தென்னை நார் மற்றும் தென்னை நார் துகள் உற்பத்தியாகிறது. தென்னை நார் தொடர்ந்து ஒரு நாள் வெயிலில் காய வேண்டும், அதே போல் தென்னை நார் துகள் தொடர்ந்து 5 நாள் வெயிலில் காய வேண்டும். கோவை மாவட்டத்தில் கடந்த 3 வாரமாக நிலவும் மழை மற்றும் மேகமூட்டத்தால் உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 20 நாளில் கோவை மாவட்டத்தில் ரூ100 கோடி உட்பட தமிழகத்தில் ரூ200 கோடி உற்பத்தியும், ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. தென்னை நார் மற்றும் தென்னை நார் துகள் ஏற்றுமதி சீசன் ஜூலை முதல் டிசம்பர் மாதமாகும். சீசன் துவக்கத்திலேயே உற்பத்தியும், ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளதால், உற்பத்தியாளர்கள் மற்றும் இதில் பணியாற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

பழைய ரயில் பெட்டிகளை ஓட்டல்களாக மாற்றும் முயற்சியில் ரயில்வே இறங்கியுள்ளது.

ஜூலை 28: பழைய ரயில் பெட்டிகளை தீம் ரெஸ்டாரன்ட்களாக மாற்ற ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. பயணிகள் டிக்கெட் மற்றும் சரக்கு ரயில்கள் மூலம் கிடைக்கும் வருவாயை தவிர, பிற வழிகளிலும் வருவாயை அதிகரிக்க ரயில்வே முயற்சித்து வருகிறது. இந்த வகையில், பழைய ரயில் பெட்டிகளை ஓட்டல்களாக மாற்றும் முயற்சியில் ரயில்வே இறங்கியுள்ளது. இது தொடர்பாக மண்டலங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில் பெட்டிகள் பல பழுது நீக்க முடியாத வகையில் உள்ளன. தேவைக்கேற்ப புதிதாக நவீன பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. எனவே, பழைய பெட்டிகளை பயன்படுத்தி ரயில்வே தீம் ரெஸ்டாரன்ட்கள் ஏற்படுத்த வேண்டும் என்று ரயில்வே வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஏற்கெனவே, ரயில் மியூசியம், பூங்கா போன்றவற்றில் பொதுமக்கள் வருகை அதிகமாக உள்ளது. இதுபோல், ரயில் ரெஸ்டாரன்ட்களும் பொதுமக்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டிலேயே முதல் முறையாக போபாலில் ஷான்-இ-போபால் ரயில் தீம் ரெஸ்டாரன்ட் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோல் ரெஸ்டாரன்ட் மட்டுமின்றி, சலூன், மியூசியம் போன்றவற்றை ஏற்படுத்த வேண்டும் இதுதொடர்பான பணி விவரங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்றனர்.

வெற்றிலை வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர் விலை வீழ்ச்சி காரணமாக வெற்றிலை பறிக்க விவசாயிகள் தயங்குவதன் காரணமாக பல நூறு ஏக்கர் வெற்றிலை வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர், சாந்திநகர், ஜமீன், கீழ்முருங்கை, ரெட்டி மாங்குப்பம், சாத்தம்பாக்கம், ராஜக்கல், மாதனூர், தோட்டாளம், அகரம் சேரி, பனங்காட்டூர் உட்பட பல்வேறு பகுதிகளில் வெற்றிலை பயிரிடப்பட்டு வருகிறது. பீடாவிற்காக கொல்கத்தா வெற்றிலை, விசேஷங்களுக்காக கருப்பு மற்றும் வெள்ளை வெற்றிலை பல நூறு ஏக்கர்களில் பயிரிடப்பட்டு வருகிறது. கடந்த கோடை காலத்தில் வெற்றிலை விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டதால் ஒரு கவுளி வெற்றிலை ரூ20ல் இருந்து ரூ50 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது அதிக விளைச்சல் இருந்தாலும் வெற்றிலை விலையில் வீழ்ச்சி காணப்படுவதாக கூறி வெற்றிலையை வாங்கி செல்லும் புரோக்கர்கள் விலையை கவுளிக்கு ரூ6 ஆக வழங்க கோருகின்றனர். ரூ6 க்கு நூறு வெற்றிலை கொண்ட ஒரு கவுளி கொடுத்தால் பறிக்கும் கூலி கூட தங்களுக்கு கிடைக்காது என்பதால் வெற்றிலை விவசாயிகள் பறிக்காமல் கொடியில் விட்டுள்ளனர்.மேலும், ஆந்திர மாநிலம் குப்பம், மதனபல்லி உட்பட பல்வேறு இடங்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட ரக வெற்றிலை விலை குறைவாக மார்க்கெட்டிற்கு வந்திருப்பதால் தமிழக வெற்றிலைக்கு விலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வெற்றிலை விவசாயி ஒருவர் கூறுகையில், ‘வெற்றிலைக்கு வருடம் முழுவதும் மார்க்கெட்டில் அதிக விலை உள்ளது. குறிப்பாக பண்டிகை காலமான ஆடி மாதம் துவங்கி தை மாதம் வரை வெற்றிலை ஒவ்வொரு விசேஷங்களிலும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது கடைகளில் ஒரு வெற்றிலை ரூ1 வரை விற்கப்பட்டாலும் அந்த விலை விவசாயிகளை வந்தடைவதில்லை’ என்றார். எனவே, இடைத்தரகர்கள், கொண்டு செல்லும் விலை ஆகியவை காரணமாக உரிய விலை கிடைக்காமல் இருப்பதை தவிர்க்க அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொது மேலாளர் நிலை மற்றும் அதற்கு மேலான பதவிகளில் உள்ள அதிகாரிகளுக்கு, அவர்களின் செயல் திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்குவது குறித்து பரிசீலனை

அதிகாரிகளுக்கு செயல்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்குவது குறித்து பஞ்சாப் நேஷனல் வங்கி பரிசீலனை செய்து வருகிறது. வங்கி செயல்பாட்டை அதிகரிக்க, பிற பொதுத்துறை வங்கிகளும் இதனை பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகள் வராக்கடன் பிரச்னையால் நிதி சிக்கலில் தவிக்கின்றன. இவற்றின் செயல்பாட்டை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிர்வாக அளவிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில், வங்கி நிர்வாகத்தில் பதவி வகிக்கும் அதிகாரிகளுக்கு, செயல் திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பஞ்சாப் நேஷனல் வங்கியின் முதன்மை செயல் அதிகாரி சுனில் மேத்தா கூறுகையில், ‘‘பொது மேலாளர் நிலை மற்றும் அதற்கு மேலான பதவிகளில் உள்ள அதிகாரிகளுக்கு, அவர்களின் செயல் திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்குவது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம் என்றார். இதே முறையை பின்பற்ற பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆப் பரோடா போன்ற பிற பொதுத்துறை வங்கிகளும் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது: பொதுத்துறை வங்கிகளின் செயல்பாட்டை மேம்படுத்த வேண்டியுள்ளது. வராக்கடன் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் திறம்பட செயலாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது. ஏற்கெனவே தனியார் வங்கிகள் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி வருகின்றன. வங்கி கிளை அளவிலும் சிறப்பான செயல்பாடுகள் கண்டறியப்பட்டு ஊக்குவிக்கப்படுகிறது. இது கூடுதல் தொகையாகவோ அல்லது வங்கி பங்குகளாகவோ வழங்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளை பொறுத்தவரை இந்திய வங்கிகள் சங்கம், வங்கி யூனியன் மற்றும் வங்கி நிர்வாகம் இடையே பேச்சு நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்படும். ஆனால், வங்கி யூனியன்கள் தரப்பில் செயல் திறன் அடிப்படையில் சம்பள உயர்வு மற்றும் ஊக்கத்தொகை வழங்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஒரு பதவி, ஒரு ஊதியம் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது என்றனர்.

Friday 27 July 2018

ஜிஎஸ்டி அமலான பிறகு மருந்துகள் விலை உயர்ந்துள்ளது

ஜிஎஸ்டி அமலான பிறகு மருந்துகள் விலை உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 1500 மருத்துவர் பணியிடங்கள் மற்றும் 2 ஆயிரம் செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். தமிழக மருத்துவமனைகளில் மருந்துகள் பற்றாக்குறை இல்லை. கடந்த ஆண்டு மட்டும் ரூ500 கோடிக்கு மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது மருந்துகள் விலை சற்று அதிகரித்திருப்பது உண்மையே. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்பு மருந்துகள் விலை சற்று உயர்ந்துள்ளது. ஆனால் மருந்துகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும். கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் மழைக்காலங்களில் டெங்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. 2018-19ம் கல்வி ஆண்டில் மதுரை, திருச்செந்தூர், கரூர் ஆகிய இடங்களில் மொத்தம் 170 எம்பிபிஎஸ் இடங்கள் புதிதாக ஏற்படுத்தப்படும். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக எம்பிபிஎஸ் இடங்கள் அதாவது 1000 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ27 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தொழில் புரட்சியை ஏற்படுத்த இந்தியா விரும்புகிறது’’

பிரிக்ஸ் நாடுகளுடன் சேர்ந்து 4வது தொழில் புரட்சியை ஏற்படுத்த இந்தியா விரும்புகிறது’’ என பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பிரிக்ஸ் அமைப்பின் 10வது மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று நடந்தது. உகாண்டா பயணத்தை முடித்து தென் ஆப்பிரிக்கா சென்ற மோடி, அங்கு நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் நேற்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: நான்காவது தொழிற்புரட்சியை ஏற்படுத்த பிரிக்ஸ் நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இந்தியா விரும்புகிறது. இதற்கு அனைத்து நாடுகளும் தங்கள் சிறந்த தொழில்நுட்ப முறைகள், கொள்கைகளை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். புதிய தொழில்நுட்பங்கள் உற்பத்தியை அதிகரிக்கவும், சிறந்த சேவையை அளிக்கவும் உதவும். முதல் தொழில்புரட்சி 18ம் நூற்றாண்டில் ஏற்பட்டது. 4வது தொழில் புரட்சி, நான்கு பெரிய தொழில் சகாப்தமாக இருக்கிறது. முதலீட்டை விட 4வது தொழில்புரட்சி அதிக முக்கியத்துவம் பெறும். அதிக திறமை, ஆனால் தற்காலிக பணிதான், வேலைவாய்ப்பின் புதிய முகமாக இருக்கும். தொழிற்சாலை உற்பத்தி மற்றும் வடிவத்தில் மாற்றங்கள் இருக்கும். எதிர்க்கால தேவைக்கு இளைஞர்களை தயார்படுத்தும் அளவுக்கு பள்ளி, பல்கலை பாடத்திட்டத்தில் மாற்றம் தேவை என்றார்.

வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்க, வருமான வரி சட்டத்தில் பிரிவு 234எப் சேர்க்கப்பட்டுள்ளது

 புதுடெல்லி : வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டுக் கான வருமான வரி கணக்கு (மதிப்பீட்டு ஆண்டு 2018-19) தாக்கல் செய்ய இந்த மாதம் 31ம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. அதோடு, வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்க, வருமான வரி சட்டத்தில் பிரிவு 234எப் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி கணக்கு தாக்கல் செய்யாதவர்கள், வருமான வரி விதிகளுக்கு உட்பட்டு ரூ10,000 வரை அபராதம் செலுத்த வேண்டி வரும். அதாவது ஏற்கெனவே விதித்திருந்த கெடு தேதியான ஜூலை 31க்குள் கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் ரூ5,000, ஜனவரி 1ம் தேதிக்கு மேல் தாக்கல் செய்தால் ரூ10,000 அபராதம் செலுத்த வேண்டும். ஆண்டு வருவாய் ரூ5 லட்சத்துக்கு கீழ் இருந்தால் அதிகபட்ச அபராதம் ரூ1,000 மட்டுமே. இதனால், கெடு நெருங்கியதால் வரி செலுத்துவோர் பெரும் பதற்றத்துடன் இருந்தனர். இதற்கிடையில், கெடு தேதியை ஒரு மாதம் நீட்டித்து மத்திய நேரடி வரிகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து நிதி அமைச்சகம் ட்விட்டரில், மத்திய நேரடி வரிகள் ஆணையம், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கெடுவை ஜூலை 31ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 31ம் தேதிக்கு நீட்டிப்பு செய்துள்ளது என தெரிவித்துள்ளது.

Thursday 26 July 2018

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 37,000 புள்ளிகளை கடந்து 37,014.65 என்ற வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.

மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் வராலாற்றில் முதன்முறையாக 37,000 புள்ளிகளை தொட்டு சாதனை படைத்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையர்களுக்கு இடையேயான சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் தொழில்துறைக்கான சுங்கவரியை குறைப்பது, சமையல் எரிவாயு போன்றவற்றை ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவில் இறக்குமதி செய்வது போன்ற ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தகம் தொடங்கியது முதலே பங்குச்சந்தைகள் எழுச்சியுடன் காணப்பட்டன.மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 37,000 புள்ளிகளை கடந்து 37,014.65 என்ற வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. இன்று பங்குச் சந்தை வர்த்தகம் ஆரம்பித்த முதல் சில நிமிடங்களிலேயே, சென்செக்ஸ் 118.43 புள்ளிகள் அல்லது 0.32 சதவிகிதம் அதிகரித்தன. இதனைத் தொடர்ந்து சென்செக்ஸ் 37,000 புள்ளிகளை முதன்முறையாக கடந்து சாதனை படைத்தது.தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் ஏற்றத்துடனையே காணப்பட்டது. இன்று காலை நிஃப்டி, 11,132.95 என்ற நிலையில் தொடங்கியது.நிப்டி 40.20 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சமான 11,172.20. புள்ளிகளை எட்டியது. இவ்வாண்டில் 14வது முறையாக நிப்டி உச்சத்தை தொட்டது. நிஃப்டியில் இருக்கும் 50 ஸ்டாக்குகளில் 32 ஸ்டாக்குகளின் புள்ளிகள் இன்று காலையிலேயே அதிகரித்தன. பாரத ஸ்டேட் வங்கி, ஐடிசி, லார்சன் அண்டு டூப்ரோ, பாரதி ஏர்டெல், ஹீரோ மோட்டோ கார்ப் ஆகிய நிறுவனங்கள் சென்செக்ஸில் அதிக புள்ளிகள் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்போன் சந்தை நிலவரத்தை வெளியிடும் கவுண்டர்பாயிண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது என்ன?


நடப்பு ஆண்டின் ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மாதங்களில் சாம்சங் நிறுவனத்தின் தயாரிப்பு மொபைல்கள் 29 சதவிகித அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஸ்மார்ட்போன் சந்தை நிலவரத்தை வெளியிடும் கவுண்டர்பாயிண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மாற்றி அமைக்கப்பட்ட கேலக்சி ஜே ரக சாம்சங் ஸ்மார்ட்போன்களில் புதிய வரவுகளின் விற்பனையும் கணிசமாக உயர்ந்துள்ளன. சீன தயாரிப்பான ஜியோமி மொபைல்கள் 28 சதவிகிதம் விற்பனை செய்யப்பட்டு இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளன. சாம்சங், ஜியோமி, விவோ, ஒப்போ, மற்றும் ஹவாய் உட்பட மொத்தம் ஐந்து பிராண்டுகள், ஸ்மார்ட்போன் சந்தையில் 82 சதவிகிதத்தை கைப்பற்றின. ஆப்பிள் போன்கள் ஒரு சதவிகிதம் மட்டுமே விற்பனையாகியுள்ளன.

பெரிய மீன்கள் எல்லாம் நாட்டை விட்டு தப்பி சென்றுவிட்ட நிலையில் இந்த மசோதா தாமதமாக கொண்டு வரப்பட்டுள்ளது.

வங்கிகளில் கடன்பெற்று அதை திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பி செல்லும் பொருளாதார குற்றவாளிகளை தடுக்கும் மசோதா ஏற்கனவே மக்களவையில் கடந்த 19ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாநிலங்களவையிலும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இந்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று நிதியமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது: பொருளாதார குற்றவாளிகள் நாட்டை விட்டு தப்பி செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள `நாட்டை விட்டு ஓடும் பொருளாதார குற்றவாளிகள் மசோதா 2018’’ தீவிரமாகவும், விரைவாகவும், அரசியல் அமைப்பு முறையிலும் அவர்கள் நாட்டை விட்டு தப்புவதை தடுக்கும். குற்றவாளிகள் கோர்ட்டில் ஆஜராகாவிட்டாலும் சொத்துக்களை சட்டப்படி பறிமுதல் செய்ய முடியும். ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்தவர்கள் இந்த சட்டத்தின் கீழ் வருவார்கள் என்றார். மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் உறுப்பினர் விவேக் தாங்கா பேசியதாவது: ரூ.10 கோடி மோசடி செய்வதும் மோசமானது என்னும் நிலையில் ரூ.100 கோடிக்கு மேல் பண மோசடி செய்தவர்களை தான் இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வரமுடியும் என வரையறை செய்வது ஏன்?. லலித் மோடி, விஜய் மல்லையா, மெகுல் சோக்ஷி, நீரவ் மோடி ஆகியோர் இணைந்து ரூ.2.4 லட்சம் கோடி பணத்தை பெற்று மோசடி செய்துள்ள நிலையில் இந்த மசோதா மிக குறைந்த பணத்தையே வரையறை செய்கிறது. பெரிய மீன்கள் எல்லாம் நாட்டை விட்டு தப்பி சென்றுவிட்ட நிலையில் இந்த மசோதா தாமதமாக கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.