Saturday, 28 July 2018

பொது மேலாளர் நிலை மற்றும் அதற்கு மேலான பதவிகளில் உள்ள அதிகாரிகளுக்கு, அவர்களின் செயல் திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்குவது குறித்து பரிசீலனை

அதிகாரிகளுக்கு செயல்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்குவது குறித்து பஞ்சாப் நேஷனல் வங்கி பரிசீலனை செய்து வருகிறது. வங்கி செயல்பாட்டை அதிகரிக்க, பிற பொதுத்துறை வங்கிகளும் இதனை பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகள் வராக்கடன் பிரச்னையால் நிதி சிக்கலில் தவிக்கின்றன. இவற்றின் செயல்பாட்டை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிர்வாக அளவிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில், வங்கி நிர்வாகத்தில் பதவி வகிக்கும் அதிகாரிகளுக்கு, செயல் திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பஞ்சாப் நேஷனல் வங்கியின் முதன்மை செயல் அதிகாரி சுனில் மேத்தா கூறுகையில், ‘‘பொது மேலாளர் நிலை மற்றும் அதற்கு மேலான பதவிகளில் உள்ள அதிகாரிகளுக்கு, அவர்களின் செயல் திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்குவது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம் என்றார். இதே முறையை பின்பற்ற பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆப் பரோடா போன்ற பிற பொதுத்துறை வங்கிகளும் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது: பொதுத்துறை வங்கிகளின் செயல்பாட்டை மேம்படுத்த வேண்டியுள்ளது. வராக்கடன் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் திறம்பட செயலாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது. ஏற்கெனவே தனியார் வங்கிகள் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி வருகின்றன. வங்கி கிளை அளவிலும் சிறப்பான செயல்பாடுகள் கண்டறியப்பட்டு ஊக்குவிக்கப்படுகிறது. இது கூடுதல் தொகையாகவோ அல்லது வங்கி பங்குகளாகவோ வழங்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளை பொறுத்தவரை இந்திய வங்கிகள் சங்கம், வங்கி யூனியன் மற்றும் வங்கி நிர்வாகம் இடையே பேச்சு நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்படும். ஆனால், வங்கி யூனியன்கள் தரப்பில் செயல் திறன் அடிப்படையில் சம்பள உயர்வு மற்றும் ஊக்கத்தொகை வழங்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஒரு பதவி, ஒரு ஊதியம் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது என்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.