ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சட்டத் திருத்த மசோதா இரண்டு மணி நேர விவாதத்துக்குப் பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஸ்டே்ட் பாங்க் ஆப் இந்தியா வங்கியுடன் இணைந்து பல்ேவறு துணை வங்கிகள் செயல்படுகின்றன. இவற்றை கலைத்து விட்டு, இந்த வங்கிகள் அனைத்தையும் ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’வுடன் இணைப்பதற்காக, ‘ரத்து மற்றும் சட்ட திருத்த மசோதா- 2017’ கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதம் மாநிலங்களவையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்று காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் பேசுகையில், ‘‘இந்தியாவில் குறைந்த எண்ணிக்கையிலான வங்கிகள் இருக்க வேண்டும். வங்கிகளை ஒன்றாக இணைக்க வேண்டும், வங்கிகளை மீண்டும் தனியார் மயமாக்க வேண்டும் என்ற பேச்சுகளை அடிக்கடி கேட்கிறோம். இந்தியாவுக்கு 6 அல்லது 7 வங்கிகளே போதும் என்ற பேச்சுகளும் அடிபடுகிறது. இந்தியா போன்ற பெரிய நாட்டுக்கு 7 வங்கிகள் போதும் எப்படி தீர்மானிக்க முடியும்? வங்கிகளை தனியார் மயமாக்கும் திட்டம் அரசிடம் உள்ளதா என்பதை நிதித்துறை இணை அமைச்சர் தெரிவிக்க வேண்டும். வங்கிகளில் அதிக நிதி முறைகேடுகள் நடக்கின்றன. வங்கிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். வங்கி நிர்வாகத்தை ஒழுங்குமுறைப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அரசு தெரிவிக்க வேண்டும்’’ என்றார். அதிமுக எம்.பி கோகுலகிருஷ்ணன் பேசுகையில், ‘‘துணை வங்கிகளின் வராக்கடன்கள் எல்லாம் எஸ்பிஐ.யின் கடனாக மாறிவிட்டன. இதனால், அந்த கணக்குகளை எஸ்பிஐ.யால் திறம்பட கையாள முடியும். அதிக கடன்கள் வழங்கும் அளவுக்கு எஸ்பிஐ.க்கு அதிக மூலதனம் கிடைக்கும். துணை வங்கிகளின் இணைப்பு எஸ்பிஐ லாபத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். ஆனால், துணை வங்கிகளின் வாடிக்கையாளர்கள் விரிவான சேவை கிடைக்கும்’’என்றார். இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி டி.ராஜா பேசுகையில், ‘‘துணை வங்கிகளை எஸ்பிஐயுடன் இணைத்ததை தவிர்த்து இருக்கலாம். ஆனால், அரசு அவசரப்பட்டு இணைத்து விட்டது. துணை வங்கிகளை இணைக்க அரசு முடிவு எடுத்தபோது, எஸ்பிஐ உலகத்தரத்துக்கு இணையாக வலுவடையும் என கூறப்பட்டது. ஆனால், நிலைமை இப்போது வேறுவிதமாக உள்ளது. எஸ்பிஐ இழப்பை சந்தித்துள்ளது. வராக் கடன்கள் அதிகரித்துள்ளன. நாட்டின் பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான கிளைகள் மூடப்பட்டுள்ளன. வரும் காலங்களில் எஸ்பிஐ மேலும் இழப்பை சந்திக்கும் என அஞ்சுகிறேன்’’ என்றார். இந்த விவாதத்தில் பல எம்.பி.க்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். இந்த விவாதம் 2 மணி நேரம் நடந்தது. விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய நிதித்துறை இணையமைச்சர் சிவ பிரதாப் சுக்லா, ‘‘துணை வங்கிகளை இணைத்தது எஸ்பிஐ லாபகரமானதாக மாற்றும், வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ சிறந்த சேவைகளை வழங்க முடியும்’’என்றார். பின்னர், இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.