Thursday, 26 July 2018

பெரிய மீன்கள் எல்லாம் நாட்டை விட்டு தப்பி சென்றுவிட்ட நிலையில் இந்த மசோதா தாமதமாக கொண்டு வரப்பட்டுள்ளது.

வங்கிகளில் கடன்பெற்று அதை திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பி செல்லும் பொருளாதார குற்றவாளிகளை தடுக்கும் மசோதா ஏற்கனவே மக்களவையில் கடந்த 19ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாநிலங்களவையிலும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இந்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று நிதியமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது: பொருளாதார குற்றவாளிகள் நாட்டை விட்டு தப்பி செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள `நாட்டை விட்டு ஓடும் பொருளாதார குற்றவாளிகள் மசோதா 2018’’ தீவிரமாகவும், விரைவாகவும், அரசியல் அமைப்பு முறையிலும் அவர்கள் நாட்டை விட்டு தப்புவதை தடுக்கும். குற்றவாளிகள் கோர்ட்டில் ஆஜராகாவிட்டாலும் சொத்துக்களை சட்டப்படி பறிமுதல் செய்ய முடியும். ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்தவர்கள் இந்த சட்டத்தின் கீழ் வருவார்கள் என்றார். மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் உறுப்பினர் விவேக் தாங்கா பேசியதாவது: ரூ.10 கோடி மோசடி செய்வதும் மோசமானது என்னும் நிலையில் ரூ.100 கோடிக்கு மேல் பண மோசடி செய்தவர்களை தான் இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வரமுடியும் என வரையறை செய்வது ஏன்?. லலித் மோடி, விஜய் மல்லையா, மெகுல் சோக்ஷி, நீரவ் மோடி ஆகியோர் இணைந்து ரூ.2.4 லட்சம் கோடி பணத்தை பெற்று மோசடி செய்துள்ள நிலையில் இந்த மசோதா மிக குறைந்த பணத்தையே வரையறை செய்கிறது. பெரிய மீன்கள் எல்லாம் நாட்டை விட்டு தப்பி சென்றுவிட்ட நிலையில் இந்த மசோதா தாமதமாக கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.