Monday, 16 July 2018

கடந்த மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் வெளியிட்ட அறிவிப்பில் ஜாப் ஒர்க்கிற்கு செலுத்திய 18 சதவீத வரியை திரும்ப பெற முடியாது. திரும்ப பெற்றவர்களும் 18 சதவீத வரியை கட்டாயமாக செலுத்த வேண்டும்.

கோவை: ஜிஎஸ்டி நடைமுறையில் ஜாப் ஒர்க்கிற்கு விதிக்கப்பட்ட 18 சதவீத வரியை தொழிற்துறையினர் திரும்ப பெறும் உத்தரவு நீக்கப்பட்டுள்ளதால் கோவை தொழில்துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் (கொசிமா) தலைவர் சுருளிவேல் கூறியதாவது: கோவையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறுந்தொழில் கூடங்கள் ஜாப் ஆர்டர் கொடுத்து உற்பத்தி செய்து வருகின்றனர். ஜிஎஸ்டியில் ஜாப் ஒர்க்கிற்கு 18 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது.இதில் ஜாப்ஒர்க் மேற்கொண்டு சப்ளை செய்யும் குறுந்தொழில் கூடங்கள் ஆண்டுக்கு ரூ.20 லட்சத்திற்குள் வர்த்தகம் செய்தால் அவர்களுக்கு பதில் ஜாப் ஒர்க் கொடுப்பவரே 18 சதவீத வரியை அரசுக்கு செலுத்த வேண்டும். ரூ.20 லட்சத்திற்கு மேல் ஜாப் ஒர்க் செய்பவர் 18 சதவீத வரியை, கூலித்தொகையுடன் பில்லில் போட்டு கொள்ளலாம். அத்தொகையை ஜாப் ஒர்க் கொடுப்பவர் செலுத்த வேண்டும். ஏற்கனவே மூலப்பொருள்களுக்கான ஜிஎஸ்டி, விற்பனை செய்யும் போது ஜிஎஸ்டி ஆகியவை அமலில் உள்ளபோது, ஜாப் ஒர்க்கிற்கு செலுத்தும் வரியும் சேர்ந்து கொள்வதால் தொழில்துறையினர் பாதிக்கப்பட்டனர். இதை மத்திய அமைச்சகத்திற்கு வலியுறுத்தியதை தொடர்ந்து, ஜிஎஸ்டி கவுன்சில், ஜாப் ஒர்க்கிற்கு செலுத்திய 18 சதவீத வரியை தொழிற்துறையினர் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தது.இதனால் கடந்த ஒரு ஆண்டாக 18 சதவீதத்தை திரும்ப பெற முடியும் என்கிற எண்ணத்தில் வரி செலுத்தி வந்தனர். சிலர் அத்தொகையை பெற்றுள்ளனர். பெரும்பாலானோர் இன்னும் பெறவில்லை. இந்நிலையில், கடந்த மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் வெளியிட்ட அறிவிப்பில் ஜாப் ஒர்க்கிற்கு செலுத்திய 18 சதவீத வரியை திரும்ப பெற முடியாது. திரும்ப பெற்றவர்களும் 18 சதவீத வரியை கட்டாயமாக செலுத்த வேண்டும். அதை கடந்த ஆண்டு ஜிஎஸ்டி அமலுக்கு வந்த ஜூலை மாதத்தில் இருந்தே செலுத்த வேண்டும், என்று அறிவித்துள்ளது. இதனால் கோவை தொழில்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இத்தகைய நடைமுறையால் இனி ஜாப் ஒர்க் கொடுக்காமல், சொந்தமாகவே பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தொழிற்துறையினர் தள்ளப்பட்டுள்ளனர்.இத்தகைய நடைமுறையால் கோவை மாவட்டத்திலுள்ள 30 ஆயிரம் தொழிற்கூடங்களில் 20 ஆயிரம் தொழிற்கூடங்களுக்கு ஜாப் ஒர்க் கிடைக்காத சூழ்நிலை ஏற்படும். குறுந்தொழில் கூடங்களுக்கு ஜாப் ஒர்க் கொடுக்காமல், தங்களுக்கு தேவையானதை தாங்களே உற்பத்தி செய்ய வேண்டுமானால், அதற்கு தேவையான இயந்திரத்திற்கு முதலீட்டு தொகை வேண்டும். இயந்திரங்களை நிறுவினாலும், அதை இயக்குவதற்கு ஆட்கள் வேண்டும். இவ்வாறு ஒட்டுமொத்த தொழில்துறையும் பாதிக்கப்படக்கூடிய ஜாப்ஒர்க் மீதான 18 சதவீத வரியை விலக்கினால் தீர்வு ஏற்படும். இதை விலக்க கோரி கோவையிலுள்ள கொசிமா, காட்மா, டாக்ட், கோப்மா, காஸ்மாபேன், சியா, கான்சியா உள்ளிட்ட 40 அமைப்புகளின் நிர்வாகிகள் 150க்கு மேற்பட்டோர் இம்மாத இறுதியில் டெல்லி சென்று மத்திய நிதியமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து முறையிட உள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.