Friday, 13 July 2018

பொதுமக்கள் பாதிக்கப்படாத அளவுக்கு மானியம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது

புதுடெல்லி : பொதுமக்கள் நலனுக்காக கேஸ் மானியம் 60 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.கேஸ் சிலிண்டர் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தாறுமாறாக உயர்ந்துள்ளது. சிலிண்டரை வாங்கும்போது பொதுமக்கள் மொத்த விலையையும் கொடுத்துத்தான் ஆக வேண்டும். மானியம் தனியாக ஒரு வாரத்தில் வங்கி கணக்கில் சேர்க்கப்படும். இதை பயன்படுத்தி கேஸ் விலையை மத்திய அரசு தாறுமாறாக உயர்த்தி விட்டதாக பல்வேறு தரப்பில் இருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதாவது கேஸ் சிலிண்டர் விலையை மார்க்கெட் விலைக்கு உயர்த்திவிட்டு மானியம் குறைத்து போடப்படுவதாகவும், சிலருக்கு மானியம் சரிவர கிடைப்பது இல்லை என்றும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் சஞ்சய் சிங் கூறியதாவது: ஜிஎஸ்டிக்கு ஏற்ப தான் கேஸ் சிலிண்டர் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டு இருக்குமே தவிர விலை உயர்வு இதுவரை மானிய வகையில் வழங்கப்படும் சிலிண்டருக்கு அறிவிக்கப்படவில்லை. ஏனெனில் கேஸ் சிலிண்டர் விலை உயரும்போது ஜிஎஸ்டி வரியிலும் உயர்வு ஏற்படும். ஆனால் சிலிண்டர் விலை உயர்ந்து இருந்தாலும் அதற்கு ஏற்றார்போல் மானியம் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. மே மாதத்தை பொறுத்த வரையில் ஒரு சிலிண்டர் விலை ரூ.491.21 இருந்தது. ரூ.159.29 மானியம் வழங்கப்பட்டது. ஜூன் மாதம் சிலிண்டர் விலை ரூ.493.55 இருந்தது. மானியம் தனியாக ரூ.204.95 வழங்கப்பட்டது. இந்த மாதம் ஒரு சிலிண்டர் விலை ரூ.496.26 ஆக இருக்கிறது. ரூ.257.74 மானியம் வழங்கப்பட்டு வருகிறது.டெல்லியில் மே மாதம் மானியம் இல்லாத சிலிண்டர் விலை ரூ.653.50 ஆக இருந்தது. ஜூன் மாதம் ரூ.48 கூடி ரூ.698.50 ஆக இருந்தது. இந்த மாதம் மேலும் 55.60 கூடி ரூ.754 ஆக உள்ளது. எனவே சர்வதேச அளவில் விலை உயர்ந்தாலும் பொதுமக்கள் பாதிக்கப்படாத அளவுக்கு மானியம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. அதாவது பொதும்ககள் நலனுக்காக கேஸ் மானியம் தற்போது 60 சதவீதம் வரை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.