உங்களை ஆச்சரியப்பட வைக்கும் பிபிஎப் திட்டத்தின் நன்மைகள்.
பணத்தைச் சேமிக்க விரும்பும் சாதாரண நடுத்தர இந்திய குடிமகனுக்கு வரப்பிரசாதமாகத் திகழ்வது பிபிஎப் எனப்படும் பொது வருங்கால வைப்புநிதி. இத்திணைக்கும் புதிய தலைமுறையினர் கூட இந்தப் பிபிஎப் மயக்கத்திலிருந்து விடுபட முடியவில்லை. நிலையான மற்றும் உத்திரவாத லாபம், அரசாங்க பாதுகாப்பு மற்றும் தொந்தரவு இல்லாதது போன்றவற்றால் ஆபத்தை விரும்பாத முதலீட்டாளர்களிடம் இருந்து தொடர்ந்து கோடிகளைக் குவித்து வருகிறது பிபிஎப். நாம் அனைவரும் பொது வருங்கால வைப்புநிதி பற்றிய அடிப்படைத் தகவல்களைத் தெரிந்து வைத்திருந்தாலும், சில ஆச்சரியமூட்டும் அதே சமயம் மிகவும் முக்கியமான விசயங்கள் நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. அவற்றைப்பற்றி இங்கு ஆழமாகக் காணலாம்.
1) கூட்டாகப் பிபிஎப் கணக்கை துவங்குதல் பொது வருங்கால வைப்புநிதி கணக்குகளைக் கூட்டாக இருவர் பெயரில் துவங்க முடியாது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனாலும் பெற்றோர் தங்களின் மைனர் குழுந்தையின் பெயரில் கணக்கு துவங்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? பெற்றோர் இருவரும் உயிரோடு இல்லாமல் இருந்தாலோ அல்லது செயல்படமுடியாமல் இருந்தாலோ, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பாதுகாவலர் , மைனர் குழந்தையின் சார்பாகக் கணக்கு துவங்க முடியும். ஆனால் மைனர் குழந்தையின் சார்பாகப் பெற்றோர் பிபிஎப் கணக்கு துவங்கும் போது, ஒரே குழந்தைக்குப் பெற்றோர் இருவரும் தனித்தனி கணக்கு துவக்க இயலாது. மைனர் குழந்தை மேஜராகும் போது, அவரே பிபிஎப் கணக்குதாரராகக் கருதப்படுவார். சட்டப்பூர்வ பாதுகாவலர் பிபிஎப் கணக்கை கையாள முடியாது.
2) பிபிஎப் கணக்கை இணைக்க முடியாது உங்கள் பொது வருங்கால வைப்புநிதி கணக்கில் உள்ள பணம் உங்களுடையது. உங்களைத் தவிர்த்து வேறு யாரும் அதை எடுக்க முடியாது. கடன் அல்லது ஏதேனும் சொத்துக்குப் பணம் செலுத்தும் போது வேறு தனிநபர் அல்லது நிறுவனத்தால் பிபிஎப் கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியாது.இது உங்கள் சேமிப்பிற்கு வழங்கப்படும் தரமான பாதுகாப்பு. வீட்டை அடைமானம் வைத்து கடன் பெற்றிருந்தால், தவணைத் தொகையைச் செலுத்தவில்லை எனில் வீடு ஜப்தி செய்யும் அபாயம் உள்ளது. அதுவே பிபிஎ பணம் என்றால், எந்த நீதிமன்றமோ சட்டமோ பிபிஎப் கணக்கில் உள்ள பணத்தை எடுத்துக் கடனை அடைக்கச் சொல்லமுடியாது. இது கோடிக்கணக்கான பொது வருங்கால வைப்புநிதி கணக்குதாரருக்கு மிகப்பெரிய பாதுகாப்பாக விளங்குகிறது. இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், வருமானவரி பாக்கியை பிபிஎப் கணக்கிலிருந்து எடுக்க வருமான வரித்துறைக்கு அதிகாரம் உள்ளது.
3) வாரிசுதாரர் நியமனம்: உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுதாரர்களை நியமிக்கப் பிபிஎப் கணக்கு அனுமதிக்கிறது. ஒன்றுக்கு மேற்பட்ட வாரிசுதாரர்களை நியமித்தால் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சதவீத பங்கு எனப் பிபிஎப் கணக்குதாரர் குறிப்பிடவேண்டும். ஆனால் மைனர்களின் சார்பாகத் திறக்கப்படும் கணக்குகளுக்கு வாரிசுதாரர் நியமிக்கமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது. பிபிஎப் கணக்குக் காலத்தில் உங்களால் எத்தனை முறை வேண்டுமானாலும் வாரிசுதாரரை மாற்ற முடியும். ஆனால் ஒரு அறக்கட்டளையை வாரிசுதாரராக நியமிக்க முடியாது. வாரிசுதாரர்களால் பிபிஎப் கணக்கை தொடர்ந்து பராமரிக்க முடியாது. பிபிஎப் கணக்குதாரரின் இறப்பின் போது கணக்கிலுள்ள பணத்தைப் பெற அனைத்து உரிமையும் பெற வாரிசுதாரர் தகுதியுடையவர் ஆவார். அப்பனத்தை அறங்காவலராக இருந்து சட்டத்திற்கு உட்பட்டுப் பெறமுடியும்.
4) பணமுடக்கக் காலம் பற்றிய தவறான புரிதல்: பிபிஎப் கணக்கு துவங்கி நாளிலிருந்து 15 ஆண்டுகள் பண முடக்கக் காலம் (Lock in period) என்ற பொதுவான தவறான புரிதல் இருக்கிறது. ஆனால் அது முற்றிலும் மாறுபட்டது. பிபிஎப் விதிகளின் படி, வைப்புநிதி செய்யப்பட்ட நிதியாண்டின் கடைசி நாளிலிருந்து முதிர்ச்சியடையும் தேதி கணக்கிடப்படும். எனவே எந்த மாதம், எந்தத் தேதி கணக்குத் துவங்கப்பட்டது என்பது பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. நீங்கள் பிபிஎப் கணக்கிற்கு முதல் முறை ஜூன்1, 2018அன்று பணம் செலுத்தினால், 15 ஆண்டுப் பணமுடக்கக் காலம் மார்ச்31,2019 லிருந்து கணக்கிடப்படும் மற்றும் முதிர்ச்சியடையும் தேதி ஏப்ரல்1, 2034ஆக இருக்கும். பணி ஓய்வு, வீடு வாங்குதல் அல்லது முக்கியக் கடனை திரும்பச் செலுத்துதல் போன்ற பொருளாதாரத் திட்டங்களை வகுக்கும் போது, பிபிஎப் கணக்கின் முதிர்ச்சி காலத்தைக் கணக்கிடுகையில் இந்த வழிமுறையை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
5) பிபிஎப் கணக்கை கைவிடுதல் சில முதலீட்டாளர்கள் தங்களின் பொது வருங்கால வைப்புநிதி கணக்கையை மறந்து விடுவர். குறைந்தபட்ச வைப்புநிதி இல்லையெனில் பிபிஎப் கணக்குக் கைவிடப்படும் நிலைக்குத் தள்ளப்படும்.உங்களின் பிபிஎப் கணக்கு கைவிடப்பட்டால், அதிலுள்ள பணத்திற்கான வட்டி முதிர்ச்சியின் போது மட்டுமே கிடைக்கும். இது போன்ற கைவிடப்பட்ட கணக்குகளில், முதிர்ச்சி அடையும் வரை ஒவ்வொரு ஆண்டின் இறுதியில் இருக்கும் பணத்திற்கு வட்டி கணக்கிடப்படும். பணம் எடுத்தல் மற்றும் லோன் வாங்கும் வசதியும் கைவிடப்பட்ட கணக்குகளுக்குக் கிடையாது. இந்த இரு வசதியும் பெற வேண்டுமெனில், கைவிடப்பட்ட காலத்திற்கு உண்டான குறைந்தபட்ச சந்தா மற்றும் குறிப்பிட்ட அளவு அபராதமும் கட்ட வேண்டும். நீங்கள் என்னதான் பெரிய பெரிய விசயங்கள் செய்தாலும், பொது வருங்கால வைப்புநிதி கணக்கை மட்டும் கைவிடக்கூடாது என்பத்தையை இந்த விதிகள் உணர்த்துகின்றன. எனவே பிபிஎப் கணக்கின் மீதும் உரியக் கவனம் செலுத்தி, ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்ச பணத்தையாவது முதலீடு செய்துவரவேண்டும்.
useful news..thank u
ReplyDelete