பருத்தி சீசன் ஆண்டு முழுவதும் நீடிக்கும் நிலையில், 3 மாத காலத்திற்கு மட்டுமே பஞ்சாலைகளுக்கு நடப்பு மூலதனம் அளிக்கப்படுகிறது. சர்வதேச போட்டியை எதிர்கொள்ள 9 மாத காலத்திற்கு நடப்பு மூலதனம் வழங்க வேண்டும், என்று தென்னிந்திய மில்கள் சங்கமான சைமா கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா) தலைவர் நடராஜ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் இருந்து கடந்த 2007ம் ஆண்டு பருத்தியை விலக்கிய பிறகு, சில சர்வதேச பருத்தி வியாபாரிகள் இந்திய பருத்தி பொருளாதாரத்தை ஆதிக்கம் செலுத்த துவங்கினர். அவர்களுக்கு வேண்டிய பணம் 2 முதல் 5 சதவீத வீட்டியில் கிடைப்பதால் மொத்தமாக பருத்தியை சீசன் சமயத்தில், அதாவது டிசம்பர் முதல் மார்ச் வரை 75 சதவீத பருத்தி சந்தைக்கு வருகிற சமயத்தில் வாங்கி வைத்துகொள்கிறார்கள். அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர ஜவுளி ஆலைகளுக்கு மூன்று மாத காலத்திற்கு மட்டுமே நடப்பு மூலதனம் அளிப்பதாலும், 25 சதவீத மார்ஜின் மணி மற்றும் 12 முதல் 14 சதவீத வட்டி ஆகியவற்றின் மூலம் இந்த ஆலைகளால் பன்னாட்டு அளவில் போட்டி போட முடியவில்லை. மேலும் உற்பத்தி செலவு பருத்தி சீசன் இல்லாத காலத்தில் அதாவது மே முதல் அக்டோபர் வரை 10 முதல் 25 சதவீதம் வரை அதிகரிக்கிறது. பருத்தி விலையில் ஏற்படும் தாறுமாறான ஏற்ற, இறக்கங்கள், பஞ்சாலைகளின் நடப்பு மூலதனத்தையும், இலாபத்தின் அளவையும் பாதிப்பதோடு, தொழில் வளர்ச்சி 6 முதல் 8 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கும். அதே நேரத்தில் சர்வதேச அளவில் ஜவுளித்தொழில் வளர்ச்சி 12 முதல் 16 சதவீதம் வரை உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஜவுளித்துறையினரின் வேண்டுகோளை ஏற்று அரசு 5 சதவீத வட்டி மானியமும், தாராளமான கடனும் அளித்து மார்ஜின் மணியையும் குறைக்கும் திட்டத்தை கொண்டு வர முயற்சித்தது. ஆனால், அது நடைமுறைப்படுத்தவில்லை. ஆகையால் தற்போது உள்ள சூழ்நிலையில் விலை நிலைப்படுத்துதல் நிதி அறிவித்து, அதற்கு 5 முதல் 7 சதவீத வீட்டி மானியம், 10 சதவீத மார்ஜின் மணி வசதி மற்றும் ஒன்பது மாதத்திற்கு நடப்பு மூலதனம் ஆகியவற்றை பருத்தி சீசனில் அளிப்பது அவசியம். அவ்வாறு செய்தால் பஞ்சாலைகளும், இந்திய பருத்தி கழகமும் சர்வதேச பருத்தி வியாபாரிகளுடன் போட்டியிட ஏதுவாகும் என்றார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.