Wednesday, 18 July 2018

மாதத்தில் 10 நாட்கள் உற்பத்தி இழப்பு ஏற்பட்டு, 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

கோவை : கோவையில் நகை உற்பத்தி ஒவ்வொரு மாதமும் 10 டன் குறைந்து 10 டன் மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதால், மாதத்தில் 10 நாட்கள் உற்பத்தி இழப்பு ஏற்பட்டு, 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். கோவையில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட நகை பட்டறைகள் உள்ளன. கோவையில் உள்ள நகை தயாரிப்பாளர்கள் நாடு முழுவதும் உள்ள நகை கடை உரிமையாளர்களிடம் தங்கம் வாங்கி, அதை நகை பட்டறைகளில் கொடுத்து நகைகளாக தயாரிக்கின்றனர். கோவையில் மாதத்திற்கு சராசரியாக 20 டன் தங்க நகைகள் உற்பத்தியாகி வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக உற்பத்தி படிப்படியாக குறைந்து, தற்போது 10 டன் நகைகள் மட்டுமே உற்பத்தியாகிறது. இதனால் மாதத்தில் 10 நாட்கள் உற்பத்தி குறைந்து, 45 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். இதுகுறித்து கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முத்துவெங்கட்ராம் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் உள்ள நகைப்பட்டறைகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்தனர். சிறிய நகை கடைகளும் 500க்கும் மேல் இருந்தது. இந்நிலையில், பெரிய நகை கடை நிறுவனத்தினர் தங்களது விற்பனைக்கு தேவையான நகைகளை தங்களது தொழிற்சாலைகள் மூலமே தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதனால் நகைப்பட்டறைகள் எண்ணிக்கை குறைந்து, இதில் பணியாற்றி வந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்தது. இந்நிலையில், கடந்த 2 ஆண்டில் பண மதிப்பிழப்பு, பணப்புழக்கம் குறைவு, தங்கம் வாங்கும் கிரடிட், டெபிட் கார்டுகளுக்கு சேவை வரி விதிப்பு, ரூ.5 லட்சத்திற்கு மேல் நகை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சதவீத மூலவரி (டிசிஎஸ்), ரூ.2 லட்சத்திற்கு மேல் நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் பான் கார்டு எண் நிரப்புதல் ஆகியவை குறைந்த மதிப்பில் தங்க நகை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.இறக்குமதி தங்கத்திற்கு 10 சதவீத வரி, ஜிஎஸ்டியில் தங்கத்திற்கு 3 சதவீத ஜிஎஸ்டி, மேலும் கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் நகைகளை பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு விற்பனை செய்வதற்கு முன்பு, ஆர்டர் பெறுவதற்காக சாம்பிள் நகைகளை கொண்டு செல்வதற்கும் 3 சதவீத ஜிஎஸ்டி வரிவிதிப்பு, கோவை விமான நிலையத்தில் இருந்து நேரடியாக பிற நாடுகளுக்கு நகை ஏற்றுமதி செய்ய வசதிகள் இல்லாதது ஆகியவை தங்க நகை தயாரிப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. முக்கியமாக, நாட்டில் சிறிய நகை கடைகளில் முன்பு நடந்து வந்த 75 சதவீதம் விற்பனையும், பெரிய நகை கடைகளில் நடந்து வந்த 25 சதவீத விற்பனையும் தற்போது தலைகீழாக மாறியுள்ளது. சிறிய நகை கடைகளில் விற்பனை குறைந்துள்ளதால், நகை பட்டறைகளுக்கு ஆர்டர் கொடுப்பது குறைந்தது. இதனால் நகைப்பட்டறைகளில் தற்போதுள்ள 45 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மாதத்தில் 10 நாட்கள் கூட வேலை கிடைப்பதில்லை. கோவையில் நகை தொழிற்பேட்டை அமைத்து, அதிகல் அனைத்து வகை இயந்திரங்களையும் அமைத்து, நவீன நகை வடிவமைப்பு பயிற்சிகளைஅளித்தால், புதிய டிசைன்கள் உருவாகும். கோவையின் நகைகள் நாடு முழுவதும் இழந்த விற்பனையை திரும்ப பெற முடியும். உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். புதிய தொழிலாளர்களும் உருவாவார்கள். இவ்வாறு முத்துவெங்கட்ராம் கூறினார்.* கோவையில் சராசரியாக மாதம் 20 டன் நகை உற்பத்தி செய்யப்பட்டது. இது தற்போது 10 டன்களாக சரிந்துள்ளது.* உற்பத்தி சரிவால் 45,000 நகை தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.* ஆர்டர் பெறுவதற்கான மாதிரி நகைகளுக்கும் ஜிஎஸ்டி, நேரடி ஏற்றுமதி வசதி இல்லாதது ஆகியவை நகை தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.* சிறிய நகை கடைகளில் விற்பனை சரிந்ததால், பட்டறைகளுக்கு நகை ஆர்டர்கள் வருவது குறைந்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.