பணப்பரிமாற்ற புதிய நடைமுறையால் ஏலக்காய் விலை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தமிழக எல்லையை ஒட்டி அமைந்துள்ள கேரள மாநிலத்தின், இடுக்கி மாவட்டத்தில் 1.50 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் விவசாயம் நடந்து வருகிறது. இங்கு உற்பத்தியாகும் ஏலக்காய்கள் இந்திய நறுமண வாரியத்தின் தேனி மாவட்டம், போடி, இடுக்கி மாவட்டம், புத்தடியில் உள்ள ஏல மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. வியாபாரிகள் இவற்றை வாங்கிச் சென்று தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்கின்றனர். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த மாதம் வரை ஏல மையங்களில் ஏலக்காயை கொள்முதல் செய்யும் வியாபாரிகள், ஒரு குறிப்பிட்ட நாட்களை கணக்காக வைத்து பணப்பட்டுவாடா செய்து வந்தனர். ஒரு சில நேரங்களில் பணப்பட்டுவாடா தாமதமாகவும், சில நேரங்களில் கிடைக்காமல் போய் விடுவதாகவும் விவசாயிகள் ஏல மைய அதிகாரிகளிடம் தொடர்ந்து தெரிவித்து வந்தனர்.விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற இந்திய நறுமண வாரியம், புதிய நடைமுறையை கடந்த ஜூலை 1ம் தேதி முதல் அறிமுகப்படுத்தியது. இதன்படி வியாபாரிகள் கொள்முதலுக்கான பணத்தை கட்டி, ஏலக்காய்களை விற்பனைக்கு எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. புதிய நடைமுறையை தொடர்ந்து 2 மையங்களிலும், இருப்பு காய்கள் 60 சதவீதம், வரத்து காய்கள் 40 சதவீதமாக இருந்தது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பல்க் ஏலக்காய் ஒரு கிலோ ₹750 முதல் ₹800 வரை விலை போனது. தற்போது ஒரு கிலோ ₹950 முதல் ₹985 வரை விலை போகிறது. இதன்மூலம் ஏற்றுமதி ஏலக்காய்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர். கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், விலை ஏற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.