Wednesday, 4 July 2018

அழிவை நோக்கி செல்லும் 🚲 சைக்கிள் தொழில் மீண்டும் வளர்ச்சி பெருமா?

சைக்கிள் பயன்பாடு குறைந்ததால் பழுது நீக்கும் தொழிலை நம்பியிருந்த மெக்கானிக் கடைகள் பல மூடப்பட்டு விட்டன. பல சைக்கிள் மெக்கானிக்குகள் வாட்ச் மேன் வேலை போன்ற பணிகளுக்கு சென்று விட்டனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து சிறிய நகரங்கள் முதல் பெரிய நகரங்கள் வரை சைக்கிள் கடைகள் அதிகம் இருந்தன. குறிப்பாக ஒரு பேரூராட்சியில் 5க்கும் மேற்பட்ட வாடகை சைக்கிள் கடைகள் இருக்கும். கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு தினசரி வேலைக்காக வரும்போது வாடகைக்கு சைக்கிள் எடுத்து வருவார்கள். ஒரு இரவுக்கு, பின்பக்கம் கேரியர் இல்லாத சைக்கிளுக்கு ரூ.2 , கேரியர் உள்ள சைக்கிளுக்கு ரூ.3 வாடகை கொடுப்பார்கள். தற்போது டூவீலர் பெருக்கத்தால் சைக்கிள் பயன்பாடு குறைய ஆரம்பித்தது. முன்பெல்லாம் ஒரு கிராமத்திற்கு ஒன்று அல்லது இரண்டு டூவீலர்கள்தான் இருக்கும். தற்போது அனைத்து வீடுகளிலும் டூவீலர்கள் உள்ளன. இதனால் வாடகை சைக்கிள் கடைகள் மூடப்பட்டு விட்டன. சைக்கிள் மெக்கானிக்குகளுக்கு போதிய வருமானம் கிடைக்காததால், ஒரு சிலர் டூவீலர் பஞ்சர் கடை மற்றும் சிறிய மெக்கானிக் பணிகளை செய்து பிழைப்பை ஓட்டி வருகின்றனர். பெருவாரியான சைக்கிள் மெக்கானிக்குகள் தனியார் நிறுவனங்களிடம் காவலர்(செக்யூரிட்டி) பணிக்கு சென்று வருகின்றனர். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் எல்லா இடங்களிலும் இந்த நிலை காணப்படுகிறது. இதுகுறித்து சைக்கிள் மெக்கானிக்காக இருந்து தற்போது செக்யூரிட்டியாக பணியாற்றுபவர் ஒருவர் கூறியதாவது: 20 ஆண்டுகளுக்கு முன்பு வாடகை சைக்கிள் கடைகளால் வருமானம் அதிகம் கிடைத்தது. சிறியவர் முதல் பெரியவர் வரை சைக்கிள் பயன்படுத்தினர். இதனால் சைக்கிள் உதிரி பாகம் மாற்றுவது, சக்கரங்களுக்கு கோட்டம் எடுப்பது, செயின் பிரச்னையை நீக்குதல் உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து கிடைத்தன. ஒரு நாளைக்கு சிறிய நகரங்களில் ரூ.500 முதல் ரூ.1,000 வரை வருமானம் கிடைத்தது. பெரிய நகரங்களில் ஒரு நாளைக்கு ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை கிடைத்தது. ஆனால், இருசக்கர வாகன கடன் திட்டங்கள் அறிமுகமானதில் இருந்து, டூவீலர்களை தவணை முறையில் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. டூவீலர் பயன்பாடு அதிகரித்த வேகத்தில், சைக்கிள் பயன்பாடும் குறையத்தொடங்கியது. தற்போது சைக்கிள் பயன்பாடு முற்றிலும் இல்லாமல் போய்விட்டது. இதனால் எங்களின் தொழில் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது. ஒரு சில வசதியான சைக்கிள் மெக்கானிக்குள் டூவீலர் உதிரி பாகங்கள் விற்பனை கடையை தொடங்கிவிட்டனர். நடுத்தரமான சைக்கிள் மெக்கானிக்குள் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வானத்திற்கு பஞ்சர் பார்க்கும் தொழிலில் ஈடுபட்டு பிழைப்பு நடத்துகின்றனர். எங்களைப் போன்ற ஏழ்மையான மெக்கானிக்குள் வேறு வழியின்றி பல்வேறு இடங்களுக்கு செக்யூரிடி பணிக்கு செல்கிறோம். அதில் கிடைக்கும் வருமானதை வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறோம். அரசு சார்பில் வழங்கப்படும் சைக்கிள் பழுது ஏற்பட்டால் அதனை அப்படியே பழைய இரும்புக்கு விற்பனை செய்கின்றனர். அதனை பழுது நீக்க மெக்கானிக்கை தேடுவதில்லை என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.