Wednesday, 18 July 2018

டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புத்தகம், தகுதிச்சான்று உள்ளிட்ட வாகன ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் ஏற்பதை கட்டாயம் ஆக்கும் வகையிலும், வணிக பயன்பாட்டு வாகனங்களுக்கு நேஷனல் பர்மிட்

புதுடெல்லி : டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புத்தகம், தகுதிச்சான்று உள்ளிட்ட வாகன ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் ஏற்பதை கட்டாயம் ஆக்கும் வகையிலும், வணிக பயன்பாட்டு வாகனங்களுக்கு நேஷனல் பர்மிட் வாங்க பாஸ்டேக் பொருத்துவது கட்டாயம் ஆக்கவும் சட்ட திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பண பரிவர்த்தனை தொடங்கி, ஆவணங்கள், அடையாள சான்றுகள் என அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்கி வருகிறது மத்திய அரசு. ஆனால், எந்த வகை வாகனமாக இருந்தாலும், ஓட்டுநர் ஒரிஜினல் டிரைவிங் லைசென்சை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனால் வாகன ஒட்டிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். மத்திய அரசு டிஜிட்டல் லாக்கரில் சேமித்து வைத்துள்ள டிரைவிங் லைசென்சை மொபைல் போனில் காட்டினாலே போதும் என்று கூறியிருந்தாலும், தமிழக அரசின் உத்தரவால் எப்போதும் ஒரிஜினல் லைசென்சை பையிலேயே வைத்திருக்க வேண்டிய நிலைக்கு வாகன ஓட்டிகள் தள்ளப்பட்டனர். இதற்கு முடிவுகட்ட, டிஜிட்டல் டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் போன்றவை நாடு முழுவதும் செல்லுபடியாகும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கூறியிருப்பதாவது: * வணிக பயன்பாட்டு வாகனங்கள் அனைத்தும், நேஷனல் பர்மிட் வாங்குவதற்கு பாஸ்டேக் மற்றும் வாகன டிராக்கிங் கருவி கட்டாயம் பொருத்த வேண்டும். * பாஸ்டேக் பொருத்தப்பட்டுள்ளதை உறுதி செய்யும் வகையில், வாகன முன்புற தடுப்பு கண்ணாடியில் ஸ்டிக்கர் ஒட்டப்பட வேண்டும்.* நேஷனல் பர்மிட் அல்லது என்/பி என கொட்டை எழுத்துக்களில் வாகனத்தின் முன்புற மற்றும் பின்புற தடுப்பு கண்ணாடியில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.* டிரெய்லராக இருந்தால், என்/பி (நேஷனல் பர்மிட்) என்ற எழுத்து, வாகன டேங்கரின் பின்புறம் மற்றும் இடது புறமும், ஆபத்தான பொருட்களை எடுத்துச்சென்றால் வெள்ளை எழுத்துக்களில் அதற்குரிய லேபிளில் டேங்கரின் இரு புறமும் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும்.* முழுவதும் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் விற்பனை செய்யப்படும் புதிய போக்குவரத்து வாகனங்களுக்கு தகுதிச்சான்று தேவை இல்லை. இதுபோல், பதிவு தேதியில் இருந்து 2 ஆண்டுக்கு இந்த வாகனத்துக்கு தகுதிச்சான்று (எப்.சி) தேவையில்லை.* போக்குவரத்து வாகனங்களுக்கு முதல் 8 ஆண்டுகளுக்கு 2 ஆண்டுக்கு ஒரு முறையும், 2 ஆண்டுக்கு மேல் ஆண்டுதோறும் எப்சி புதுப்பிக்க வேண்டும்.* டிரைவிங் லைசென்ஸ், மாசு கட்டுப்பாடு சான்றிதழ் ஆகியவை டிஜிட்டல் வடிவில் அல்லது தாள் வடிவில் எடுத்துச் செல்லலாம். * சரக்கு வாகனங்கள், சரக்குகளை உள்ளே வைத்து எடுத்துச் செல்லும் வகையில் மூடப்பட்ட நிலையில் இருக்கவேண்டும். திறந்த நிலை சரக்கு வாகனமாக இருந்தால், சரக்குகள் அல்லது பொருட்கள் தார்பாலின் அல்லது பொருத்தமான ஒன்றால் மூடப்பட வேண்டும். கட்டுமான பொருட்களான சிமென்ட், மணல் போன்றவற்றை கட்டாயம் மூடிய நிலையிலேயே எடுத்துச் செல்ல வேண்டும்.* அதேநேரத்தில் பகுதிகளாக பிரிக்க முடியாத பொருட்களாக இருந்தால் அவற்றை திறந்த நிலையில் மூடப்படாமல் எடுத்துச்செல்லலாம். இவ்வாறு வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான கருத்துக்களை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக இணை செயலாளருக்கு ஆகஸ்ட 11ம் தேதிக்குள் அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட திருத்தங்களில், ஒரிஜினல் லைசென்ஸ் டிஜிட்டல் வடிவில் ஏற்பது சட்டப்பூர்வமாக ஆக்கப்பட்டால் போக்குவரத்து போலீசாரிடம் மொபைலில் டிஜிலாக்கர் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட டிஜிட்டல் லைசென்ஸ் காட்டினால் போதும். இது இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மட்டுமின்றி, பல்வேறு ஆவணங்களை எடுத்துச்செல்லும் டாக்சி, ஆட்டோ, டிரக், டிரைவர்களுக்கும் உதவியாக இருக்கும். அதோடு, ஒரிஜினல் இல்லை என்பதற்காக போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.