ஜூலை 28: பழைய ரயில் பெட்டிகளை தீம் ரெஸ்டாரன்ட்களாக மாற்ற ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. பயணிகள் டிக்கெட் மற்றும் சரக்கு ரயில்கள் மூலம் கிடைக்கும் வருவாயை தவிர, பிற வழிகளிலும் வருவாயை அதிகரிக்க ரயில்வே முயற்சித்து வருகிறது. இந்த வகையில், பழைய ரயில் பெட்டிகளை ஓட்டல்களாக மாற்றும் முயற்சியில் ரயில்வே இறங்கியுள்ளது. இது தொடர்பாக மண்டலங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில் பெட்டிகள் பல பழுது நீக்க முடியாத வகையில் உள்ளன. தேவைக்கேற்ப புதிதாக நவீன பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. எனவே, பழைய பெட்டிகளை பயன்படுத்தி ரயில்வே தீம் ரெஸ்டாரன்ட்கள் ஏற்படுத்த வேண்டும் என்று ரயில்வே வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஏற்கெனவே, ரயில் மியூசியம், பூங்கா போன்றவற்றில் பொதுமக்கள் வருகை அதிகமாக உள்ளது. இதுபோல், ரயில் ரெஸ்டாரன்ட்களும் பொதுமக்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டிலேயே முதல் முறையாக போபாலில் ஷான்-இ-போபால் ரயில் தீம் ரெஸ்டாரன்ட் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோல் ரெஸ்டாரன்ட் மட்டுமின்றி, சலூன், மியூசியம் போன்றவற்றை ஏற்படுத்த வேண்டும் இதுதொடர்பான பணி விவரங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்றனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.