ஜிஎஸ்டி நடைமுறையில் ஜாப் ஒர்க்கிற்கு செலுத்திய 18 சதவீத வரியை தொழில்துறையினர் திரும்ப பெறும் உத்தரவு நீக்கப்பட்டுள்ளதால், தொழில்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இது குறித்து கோவையிலுள்ள ஜிஎஸ்டி வரி ஆலோசகர் ஜெய்குமார் மற்றும் கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் (கொசிமா) தலைவர் சுருளிவேல் கூறியதாவது: இன்ஜினியரிங் பொருள் உற்பத்தியாளர்களில் நடுத்தர மற்றும் பெரிய தொழில் முனைவோர்தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு தேவையான உதிரிபாகங்களை சொந்தமாக தயாரிக்கின்றனர். சிறிய அளவிலான உற்பத்தியாளர்களில் சிலர் குறுந்தொழில் முனைவோர்களிடம் ஜாப் ஒர்க் மூலம் மூலப்பொருளை கொடுத்து பொருளை பெறுகின்றனர். இந்நிலையில்,கடந்த ஆண்டு ஜூலையில் ஜாப் ஒர்க்கிற்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. இதனால் ஜாப் ஒர்க் செய்யும் குறுந்தொழில் முனைவோர்கள் தங்கள் உற்பத்திக்கான செய்கூலி தொகையோடு, 18 சதவீத வரியையும் சேர்த்து பில் போட்டு வந்தனர். ஜாப் ஒர்க் கொடுக்கும் சிறிய,நடுத்தர,பெரிய தொழில் முனைவோர்கள் ஏற்கனவே தாங்கள் கொள்முதல் செய்யும் மூலப்பொருளுக்கு ஜிஎஸ்டியில் 18 சதவீதம் செலுத்தி வருகின்றனர். அதோடு ஜாப் ஒர்க்கிற்கும் 18 சதவீத வரி செலுத்தும்போது,மொத்தம் 36 சதவீத வரி செலுத்தும் நிலைக்கு ஆளாகி வந்தனர். இவ்வாறு 36 சதவீத வரி செலுத்தி ஒரு பொருளை உற்பத்தி செய்து, அதை விற்கும்போது, 5 சதவீத வரி மட்டுமே பெற முடிகிறது. மீதமுள்ள 31 சதவீத வரி இழப்பு ஏற்படுகிறது. இதனால், 31 சதவீத வரியை தொழிற்துறையினர் உள்ளீட்டு வரியாக திரும்ப பெறலாம், என்று ஜிஎஸ்டி குழு அறிவித்தது. இதையடுத்து ஜாப் ஒர்க் மீதான 18 சதவீத வரியை செலுத்துவதில் இருந்து விலக்கு கோரினர்.அதை ஏற்று ஜாப் ஒர்க் மீதான 18 சதவீத வரியை செலுத்துவதற்கு தற்காலிகமாக விலக்கு அளித்தது. இந்நிலையில், கடந்த மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் வெளியிட்ட உத்தரவில்,கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் தற்போது வரை நிறுத்தி வைக்கப்பட்ட ஜாப் ஒர்க் மீதான 18 சதவீத வரி விலக்கு உத்தரவை நீக்கியுள்ளது. அதோடு கடந்த ஆண்டு ஜூலை முதல் மேற்கொள்ளப்பட்ட ஜாப் ஒர்க்கிற்கான 18 சதவீத வரியை செலுத்த வேண்டும்.ஜாப் ஒர்க்கிற்கு செலுத்தும் 18 சதவீத வரியை உள்ளீட்டு வரியாக திரும்ப பெறவும் முடியாது,என்று உத்தரவிட்டுள்ளது. ஜாப் ஒர்க்கிற்கு வரி விலக்கு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு,ஜிஎஸ்டி வெளியிட்ட உத்தரவு பேரிடியை ஏற்படுத்தியுள்ளது. இனி,சிறிய,நடுத்தர,பெரிய தொழில்முனைவோர்கள் ஜாப் ஒர்க்கிற்கு வரி செலுத்தினால் திரும்ப பெற முடியாத நிலை ஏற்படும் என்பதால் ஜாப் ஒர்க் கொடுப்பதையே தவிர்த்து, சுயமாக உற்பத்தி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்களை நம்பி ஜாப்ஒர்க் கூடங்களை நிறுவியுள்ள குறுந்தொழில் முனைவோர்கள் தங்களது தொழிற்கூடங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.