கோவை மாவட்டத்தில் பெய்து வரும் மழை மற்றும் மேகமூட்டத்தால் இந்த மாதத்தில் துவங்க வேண்டிய தென்னை நார் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சீசன் துவங்கவில்லை. இதனால் கடந்த 3 வாரத்தில் கோவை உட்பட தமிழகத்தில் ரூ200 கோடி ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. தென்னை நார் மற்றும் சார்பு பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் கோவை மாவட்டத்தில் 400 உட்பட தமிழகத்தில் 1,700 உள்ளன. இவை தென்னை மட்டையை மூலப்பொருளாக கொண்டு தென்னை நார் மற்றும் தென்னை நார் தூள் தயாரித்து வருகின்றன. ஒவ்வொரு தொழிற்சாலையிலும் ஒரு நாளைக்கு 4 டன் தென்னை நார் மற்றும் 5 டன் தென்னை நார் தூள் தயாரிக்கப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் தென்னை நார் மற்றும் தென்னை நார் தூள்களில் 80 சதவீதம் சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டாக தென்னை மட்டையின் வரத்து குறைவு காரணமாக 25 சதவீத உற்பத்தியும், ஏற்றுமதியும் குறைந்தது. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அவ்வப்போது பெய்து வரும் மழையால் தென்னை நார் பொருட்களை உலர்த்த முடியாமல் உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோயம்புத்தூர் தென்னை நார் மற்றும் சார்பு பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கவுதமன் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் தினசரி ரூ5 கோடி மதிப்பிலான தென்னை நார் மற்றும் தென்னை நார் துகள் உற்பத்தியாகிறது. தென்னை நார் தொடர்ந்து ஒரு நாள் வெயிலில் காய வேண்டும், அதே போல் தென்னை நார் துகள் தொடர்ந்து 5 நாள் வெயிலில் காய வேண்டும். கோவை மாவட்டத்தில் கடந்த 3 வாரமாக நிலவும் மழை மற்றும் மேகமூட்டத்தால் உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 20 நாளில் கோவை மாவட்டத்தில் ரூ100 கோடி உட்பட தமிழகத்தில் ரூ200 கோடி உற்பத்தியும், ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. தென்னை நார் மற்றும் தென்னை நார் துகள் ஏற்றுமதி சீசன் ஜூலை முதல் டிசம்பர் மாதமாகும். சீசன் துவக்கத்திலேயே உற்பத்தியும், ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளதால், உற்பத்தியாளர்கள் மற்றும் இதில் பணியாற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.