ஜனவரி முதல் பிளாஸ்டிக் உற்பத்தி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிக்கடன் பெற்றுள்ள உற்பத்தி நிறுவனங்களுக்கு அவற்றை திரும்ப செலுத்துவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அன்றாட வாழ்வில் பிளாஸ்டிக் வெகுவாய் ஊடுருவி கிடக்கிறது. ஆரம்பத்தில் சிறிய அளவில் பயன்பாட்டிற்கு வந்த பிளாஸ்டிக் பின்பு எளிமையான கையாளுதல் இருந்ததால் பல்வேறு பொருட்களிலும் இதன் தாக்கம் எதிரொலிக்க துவங்கியது. ஷாம்பூ போன்ற சிறிய பேக் முதல் கிட்டத்தட்ட அனைத்து பொருட்களிலுமே பேக்கிங் தேவைக்காக பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக கேரிபேக் உபயோகம் உச்சம் தொட்டது. இது துணிப்பை போன்றவற்றை சுத்தமாய் ஓரம்கட்டியது. பயன்பாட்டில் பிரச்னை இல்லாமல் இருந்தது. ஆனால் உபயோகித்த பிறகு அதை தூக்கி எறியும் போதுதான் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட துவங்கியது. கழிவுநீர் வாய்க்காலில் தேங்கி நீரோட்டத்திற்கு தடை ஏற்படுத்தியது. மண்ணிற்குள் புதைந்து மழைநீர் உட்புகாமல் செய்ததுடன் விவசாயிகளின் நண்பனான மண்புழுவின் எண்ணிக்கையையும் வெகுவாய் குறைத்தது. எரித்தாலும் இதன் வாயு காற்றில் கலந்து மாசை ஏற்படுத்தியது. புதைத்தாலும் மண்வளத்தை பாதித்தது. எனவே மறுசுழற்சியே தீர்வு என்ற அடிப்படையில் இதன் தன்மையை மாற்றி வருகின்றனர்.பொதுமக்களிடம் எவ்வித மனமாற்றத்தை ஏற்படுத்த முடியாததால் தடை என்ற கோரிக்கை பல பகுதிகளிலும் இருந்து வலுப்பெற துவங்கியது. இதன் ஒருபகுதியாக தமிழகத்தில் வரும் ஜனவரி முதல் பிளாஸ்டிக் உற்பத்தி, விநியோகம், பயன்பாடு உள்ளிட்ட அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது முதலே இதற்கான பணிகள் துவங்கி உள்ளன. அரசு அலுவலகங்களில் இம்மாதம் முதல் பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனைக் கண்காணிக்கவும் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல பகுதிகளிலும் தற்போது இருந்தே கேரிபேக்கிற்கு மாற்றாக ‘நான்ஓவன் பேக்’ எனும் துணிபோன்ற பைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. இந்நிலையில் பிளாஸ்டிக் தடை என்ற அறிவிப்பு இத்தொழிலில் ஈடுபட்டவர்களை வெகுவாய் பாதிக்கும். எனவே கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கேரி பேக் உற்பத்தி நிறுவனத்தினர் கூறுகையில், ‘‘கேரிபேக் மட்டுமே பிளாஸ்டிக் அல்ல. பாக்கு, ஷாம்பு போன்று சிறிய பேக்கிங்கில் ஏராளமான பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை மறுசுழற்சி செய்ய முடியாது. கேரிபேக்கை போன்று இவற்றை சட்டென்று பொறுக்கி எடுத்து அகற்ற முடியாது. ஒரு கடையில் பொருள் வாங்கினால் ஒரு கேரிபேக்தான் வழங்கப்படும். ஆனால் அந்த ஒரு பைக்குள் ஏகப்பட்ட பிளாஸ்டிக் பேக்கிங் செய்யப்பட்டவை சரம் சரமாக இருக்கும். எண்ணெய் போன்றவைகள் கூட பிளாஸ்டிக் பேக்கிங்கில்தான் விற்பனை செய்யப்படுகிறது. கேரிபேக்கை விட மோசமான பல பிளாஸ்டிக்குகள் விற்பனைச் சந்தையில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. எனவே முறைப்படுத்துவதே சரியான தீர்வு. கேரிபேக் தடை சரியானதுதான் என்றாலும் மேலும் சில மாதங்கள் அவகாசம் அளிக்க வேண்டும்’’ என்றனர்.இதுகுறித்து எவர்சில்வர், பித்தளை அலுமினியம், பிளாஸ்டிக் பாத்திரம் உற்பத்தி, விற்பனையாளர்கள் நலச் சங்க தலைவர் காந்த் கூறுகையில், ‘‘தமிழகம் முழுவதும் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட கேரிபேக் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. அங்கிருந்து வாடிக்கையாளர்களுக்குச் சென்றடையும் வரையில் பல கட்டங்களில் ஏராளமான குடும்பங்கள் இதனை நம்பி உள்ளன. உற்பத்தியாளர்கள் பலர் வங்கிக்கடன் பெற்று தொழில் நடத்தி வருகின்றனர். பைனான்ஸ் பெற்றுள்ளனர். இந்த இயந்திரத்தை வேறு பயன்பாட்டிற்கும் பயன்படுத்த முடியாது. தொழில் சட்டென்று முடங்கினால் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே மேலும் அவகாசம் அளிக்க வேண்டும்’’ என்றார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.