Tuesday, 10 July 2018

நாட்டில் பருத்தி சாகுபடி பரப்பளவையும், மகசூல் அளவையும் அதிகரிக்க மத்திய அரசு சிறப்பு தொழில்நுட்ப திட்டங்களை கொண்டு வர வேண்டும்


கோவை : பஞ்சு விலை கடந்த 10 மாதத்தில் 25 சதவீதம் உயர்ந்து ரூ10 ஆயிரம் அதிகரித்து ரூ48,500 ஆகியுள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்த நாட்டில் பருத்தி சாகுபடி பரப்பளவையும், மகசூல் அளவையும் அதிகரிக்க மத்திய அரசு சிறப்பு தொழில்நுட்ப திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்று இந்திய ஜவுளி தொழிற்கூட்டமைப்பு கோரியுள்ளது. இதுகுறித்து இந்திய ஜவுளி தொழிற்கூட்டமைப்பு (டெக்ஸ்பிரனர்ஸ்) ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் கூறியதாவது: நமது நாட்டில் பருத்தி சீசன் ஆண்டு முழுவதும், அக்டோபர் முதல் செப்டம்பர் வரை நிலவுகிறது. பருத்தி சீசன் துவக்கத்தில் கடந்த அக்டோபரில் ஒரு கண்டி (356 கிலோ) பஞ்சு விலை ரூ38,500 ஆக இருந்தது. பின்னர் இதன் விலை தொடர்ந்து உயர்ந்து வந்து தற்போது ரூ48,500 ஆகியுள்ளது. கடந்த 10 மாதத்தில் பஞ்சு விலை 25 சதவீதத்திற்கு மேல் உயர்ந்து ஒரு கண்டிக்கு ரூ10 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. உலகமயமாக்கப்பட்ட வர்த்தகத்தில் ஏற்படும் இத்தகைய சூழ்நிலைகளை கட்டுப்படுத்தவோ, மாற்றியமைப்பதோ இயலாத காரியம். அதற்கு மாறாக நமது நாட்டில் பருத்தி சாகுபடி பரப்பையும், மகசூல் அளவையும் உயர்த்தினால், வரத்து அதிகரித்து பஞ்சு விலையை பெருமளவு குறையும். சர்வதேச அளவில் பருத்தி உற்பத்தியில் இந்தியா முன்னிலையில் இருந்தாலும், நமது நாட்டில் ஒரு ஹெக்டேரில் 550 கிலோ மகசூல் மட்டுமே கிடைக்கிறது. ஆனால், ஆஸ்திரேலியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஒரு ஹெக்டேருக்கு ஆயிரம் கிலோவிற்கு மேல் மகசூல் கிடைக்கிறது. அதே போல், நமது நாட்டிலும் பருத்தி மகசூல் அதிகம் கிடைக்கும் வகையில், மத்திய அரசு புதிய தொழில்நுட்பங்களை கண்டறிந்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இதன் மூலம் பருத்தி வரத்து ஒரு மடங்கு அதிகரித்து, உள்நாட்டில் விலை கட்டுப்படியான விலைக்கு வரும். நாட்டில் விளைச்சல் திறனை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் சிறப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நாட்டில் பருத்தி மகசூல் மற்றும் வரத்து அதிகரிக்கும் வரை, நூற்பாலைகள் வங்கிகள் மூலம் பொருள் கடன் பெற்று பருத்தியை வாங்கி, குறிப்பிட்ட கால அளவிற்கு இருப்பு வைக்கலாம். இயற்கை பருத்தியை மட்டும் சாராமல், பாலியெஸ்டர், விஸ்கோஸ் போன்ற செயற்கை பஞ்சு பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். ஆண்டு பருத்தி சீசனில் 2 மாதங்களுக்காவது இறக்குமதி பஞ்சை பயன்படுத்த வேண்டும்.. ஜவுளித்துறை வளர்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி, ஜவுளித்துறையினரும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும் என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.