புதுடெல்லி : தீர்ப்பாயம், உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வரி விதிப்பு தொடர்பாக வழக்கு தொடர்வதற்கான ஆரம்பக்கட்ட பண உச்சவரம்பை மத்திய அரசு அதிகரித்துள்ளது. இதனால், ஏராளமான சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் பயன் அடைவார்கள். தீர்ப்பாயம், உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் கடந்த 2017ம் ஆண்டு மார்ச் வரை நிலுவையில் உள்ள வரி சம்பந்தமான வழக்குகளில் ரூ.7.6 லட்சம் கோடி முடங்கியுள்ளது. தீர்ப்பாயம், உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வரி சம்பந்தப்பட்ட வழக்குகளில் வருமான வரித்துறை மேல்முறையீடு செய்வதற்கான குறைந்தப்பட்ச பண உச்சவரம்பின் அளவு தற்போது முறையே ரூ.10 லட்சம், ரூ.20 லட்சம் மற்றும் ரூ.25 லட்சமாக உள்ளது. தீர்ப்பாயங்கள், நீதிமன்றங்களில் பல்வேறு கட்டங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவற்றின் மூலம், 2017, மார்ச் வரையில் முடங்கியுள்ள மொத்த வரியின் மதிப்பு ரூ.7.6 லட்சம் கோடியாக உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், மத்திய பொறுப்பு நிதியமைச்சராக உள்ள பியூஷ் கோயல் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதன்படி, வரி தொடர்பாக தீர்ப்பாயங்கள், நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வதற்கான குறைந்தப்பட்ச பண உச்சவரம்பின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தீர்ப்பாயங்களில் வழக்கு தொடர்வதற்கான ஆரம்பக்கட்ட பண உச்சவரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது. உயர் நீதிமன்றத்தில் இது ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாகவும், உச்ச நீதிமன்றத்தில் ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடியாகவும் உயர்த்தப்படுகிறது. இதன் காரணமாக, இந்த தொகைக்கு கீழுள்ள ஆயிரக்கணக்கான வழக்குகளை வருமான வரித்துறை வாபஸ் பெற உள்ளது. இதன்படி, மத்திய நேரடி வரி வாரியம், மறைமுக வரி மற்றும் சுங்க வரி வாரியம் ஆகியவை தொடர்ந்துள்ள வழக்குகள் முறையே 41 சதவீதம், 18 சதவீதம் வாபஸ் பெறப்படும். மொத்தமாக, 29 ஆயிரத்து 580 வழக்குகளை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், நேரடி வரி வாரியத்துக்கு ரூ.4,800 கோடியும், மறைமுக வரி வாரியத்துக்கு ரூ.800 கோடியும் வருவாய் இழப்பு ஏற்படும். ‘‘இந்த நடவடிக்கையால், சிறு மற்றும் நடுத்தர வரி செலுத்துவோர் அதிகளவில் பயன் பெறுவார்கள். இதனால், இவர்கள் வரி வழக்குகளில் இருந்து விடுபட்டு, வர்த்தகத்தில் கவனம் செலுத்த முடியும். அதேபோல், நேர்மையாக வரி செலுத்துவோரை இந்த அரசு எப்போதுமே மதிக்கிறது’’ என்று பியூஸ் கோயல் கூறினார். மத்திய அரசு எடுத்துள்ள இந்த புதிய முடிவால், தீர்ப்பாயங்களில் உள்ள வழக்குகளில் 34 சதவீதத்தையும், உயர் நீதிமன்றங்களில் 48 சதவீதத்தையும், உச்ச நீதிமன்றத்தில் 54 சதவீத வழக்குகளையும் மத்திய நேரடி வரி வாரியம் வாபஸ் பெறும். அதேபோல், தீர்ப்பாயங்களில் 18 சதவீத வழக்குகளையும், உயர் நீதிமன்றங்களில் 22 சதவீத வழக்குகளையும், உச்ச நீதிமன்றத்தில் 21 சதவீத வழக்குகளையும் மறைமுக வரி மற்றும் சுங்க வரி வாரியம் வாபஸ் பெறும்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.