விமான கட்டணத்துக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் எம்.பிக்கள் கோரிக்கை விடுத்தனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று மாநிலங்களவை கேள்வி நேரத்தின்போது, காங்கிரஸ் எம்.பி. சாயா வர்மா பேசுகையில்,தான் கடந்த மாதம் 29ம் தேதி டெல்லியிலிருந்து ராய்ப்பூருக்கு விமானத்தில் சென்றதாகவும், முன்வரிசை இருக்கை காலியாக இருந்தும் தனக்கு அந்த இடம் ஒதுக்கப்படவில்லை. முன் இருக்கை தேவையென்றால், ரூ600 அதிகமாக செலுத்த வேண்டும் என்று விமான நிறுவனம் அறிவித்தது. பயணிகள் இல்லையென்றாலும் வசதியான இருக்கைகள், காலியாக வைக்கப்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பினார். விமான கட்டணத்துக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்றார்.இது மிகவும் கவலை அளிக்கும் விஷயம் என்று தெரிவித்த, மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு, இதுகுறித்து மத்திய அரசு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து பேசிய திமுக எம்.பி திருச்சி சிவா, விமானங்களில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற முறையை அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். விமானம் புறப்படுவதற்கு முன்பு கடைசி நேரத்தில் டிக்கெட்டை பெற 400 சதவீதம் அதிகம் கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளது. இதனால், பயணிகள் துன்பத்துக்கு ஆளாகின்றனர் என்றார். எம்.பி.க்களின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த மத்திய விமான போக்குவரத்து இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா, “விமான கட்டணங்களில் வெளிப்படைத்தன்மையை மேற்கொள்ள நிறுவனங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. உலக அளவில் இந்தியாவில்தான் விமான கட்டணங்கள் மிகக் குறைவு. மூன்று மாதங்களுக்கு முன்பு விமான டிக்கெட் வாங்கும்போது, கட்டணம் மிக குறைவாக உள்ளது என்றார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.