Monday, 23 July 2018

வணிகச் செய்திகள் ஒரு பார்வை

கோவையில் நடப்பாண்டு பம்ப்செட் உற்பத்தி மற்றும் விற்பனை சீசன் முடிவடைந்துள்ளது. நடப்பாண்டில் அதிகளவிலான ஜிஎஸ்டி வரி விதிப்பு, மூலப்பொருள் விலையேற்றம், டீசல் விலையேற்றத்தால் போக்குவரத்து செலவு அதிகரிப்பு ஆகியவற்றால் உற்பத்தி செலவு அதிகரித்து, அதற்குரிய சந்தை வாய்ப்பு கிடைக்காமல் பம்ப்செட் உற்பத்தி மற்றும் விற்பனை 50 சதவீதம் பாதிப்படைந்துள்ளது. இது குறித்து கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்கம் (கோப்மா) தலைவர் மணிராஜ் கூறியதாவது: நடப்பாண்டு சீசனில் ஜிஎஸ்டி வரி விதிப்பில் பம்ப்செட் மூலப்பொருள்களுக்கு 18 முதல் 28 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டை விட ஒரு மடங்கு அதிகமாகும். அது தவிர மூலப்பொருள் விலையேற்றம் 25 சதவீதம் அதிகரிப்பு, மூலப்பொருள்களை வட மாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்வதால், டீசல் விலையேற்றத்தால் போக்குவரத்து செலவு 30 சதவீதம் அதிகரிப்பு ஆகியவற்றால் உற்பத்தி செலவு கடந்த ஆண்டை விட 25 சதவீதம் அதிகரித்தது. ஆனால், குஜராத் மாநிலத்தில் உற்பத்தியாகும் பம்ப்செட்களுக்கு மூலப்பொருள் விலையேற்றம், போக்குவரத்து செலவு இல்லாததால், பம்ப்செட் உற்பத்தி செலவு தமிழகத்தை விட 25 சதவீதம் குறைவாக இருந்ததால், விலை குறைவாக இருந்தது. இதனால் குஜராத் பம்ப்செட்கள் தமிழகத்தில் விற்பனையானது. கோவையில் உற்பத்தியாகும் பம்ப்செட்கள் பிற மாநிலத்திற்கு செல்வதும் 25 சதவீதம் குறைந்தது. தமிழகத்திலும் விற்பனை 25 சதவீதம் குறைந்தது. இதனால் கோவையில் பம்ப்செட் உற்பத்தி மற்றும் விற்பனை 50 சதவீதம் குறைந்தது. கோவையில் உற்பத்தியாகும் பம்ப்செட்கள் சராசரியாக ஆண்டிற்கு ரூ7,500 கோடிக்கு விற்பனையாகும், இந்தாண்டு ரூ3,250 கோடியளவில் மட்டுமே விற்பனையாகியுள்ளது. இந்தாண்டு பம்ப்செட் சீசன் ஒரு மாதம் காலதாமதமாக டிசம்பரில் துவங்கி, ஒரு மாதம் முன்கூட்டியே ஜூனிலேயே முடிவடைந்துள்ளது. இதனால் நடப்பாண்டு சீசனில் பம்ப்செட் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள 3 ஆயிரம் எண்ணிக்கையிலான பம்ப்செட் உற்பத்தியாளர்கள் மற்றும் 15 ஆயிரம் எண்ணிக்கையிலான உதிரிபாகங்கள் மற்றும் ஜாப் ஒர்க் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து, 500 எண்ணிக்கையிலான தொழிற்கூடங்கள் மூடப்பட்டன. 1,500க்கும் மேற்பட்ட தொழிற்கூடங்கள் மூடும் நிலையில் உள்ளது.இம்மாதம் முதல் பம்ப்செட் உற்பத்தி சீசன் முடிவடைந்துள்ளதால், உற்பத்தி வெகுவாக குறைந்து பம்ப்செட் உற்பத்தி கூடங்களில் வாரத்தில் 3 நாள் ‘நோ ஒர்க்’ விடப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் பம்ப்செட் மூலப்பொருள்களுக்கான ஜிஎஸ்டியையும், மூலப்பொருள் விலையேற்றத்தையும் குறைக்க வேண்டும், கோவையில் உள்ள உற்பத்தியாளர்களுக்கு மூலப்பொருள் எளிதில் கிடைக்க, கோவையில் மூலப்பொருள் வங்கியை ஏற்படுத்த வேண்டும். இதை மேற்கொண்டால் வரும் சீசனில் கோவை பம்ப்செட்கள் குஜராத் பம்ப்செட்களோடு போட்டியிட முடியும் என்றார். :

:ஜிஎஸ்டி கவுன்சிலின் 28வது கூட்டம் நேற்று முன்தினம் டெல்லியில் நடந்தது. இதில் ஜவுளித்துறை மற்றும் இன்ஜினியரிங் துறையின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் கோவை தொழில்துறையினர் ஏமாற்றமடைந்துள்ளனர். நாடு முழுவதும் ஒரு முனை வரி விதிப்பான ஜிஎஸ்டி கடந்த ஆண்டு ஜூலையில் அமலுக்கு வந்தது. இதில் விதிக்கப்பட்ட வரி முறைகளில் மாற்றங்கள் குறித்து, ஜிஎஸ்டி கவுன்சில் அவ்வப்போது கூடி விவாதித்து வரிகளை குறைத்தும், அதிகரித்தும் வருகிறது. 28வது கவுன்சில் கூட்டம் நேற்று முன்தினம் டெல்லியில் நிதியமைச்சர் (பொறுப்பு) பியூஷ் கோயல் தலைமையில் நடந்தது. இதில் ஜவுளி மற்றும் இன்ஜினியரிங் தொழில்துறையின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், கோவை தொழில்துறையினர் ஏமாற்றமடைந்துள்ளனர். கோவை வெட்கிரைண்டர் உற்பத்தியாளர்கள் சங்கம் (கௌமா) தலைவர் சாஸ்தா ரவி கூறியதாவது: ‘வெட்கிரைண்டருக்கு ஜிஎஸ்டி அமலுக்கு வந்தபோது 28 சதவீதம் இருந்தது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன் 12 சதவீதமாக நிர்ணயித்தனர். எனினும் வட மாநிலத்தில் கோதுமை அரைக்க பயன்படும் ‘ஆட்டா சக்கி’ கிரைண்டருக்கு 5 சதவீதம் நிர்ணயித்துள்ள நிலையில், அவர்கள் ஆட்டா சக்கி கிரைண்டரையே தமிழகத்தில் இட்லி, ேதாசைக்கான அரசி மாவு கிரைண்டராகவும் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் கோவை வெட்கிரைண்டர் விற்பனை பாதித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தென்னிந்திய மில்கள் சங்கம் (சிஸ்பா) தலைவர் ரங்கராஜன் கூறுகையில், ‘‘செயற்கை நூலிழைக்கான வரியை 12க்கு பதிலாக 5 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும், என்று கோரி வந்தோம். சமீபத்திய கவுன்சில் கூட்டத்தில் அதற்கான அறிவிப்பு வெளியாகாததால், ஏமாற்றமடைந்துள்ளோம்’’ என்றார். கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் (கொசிமா) தலைவர் சுருளிவேல் கூறியதாவது: கடந்த மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் வெளியிட்ட அறிவிப்பில், இன்ஜினியரிங் ஜாப் ஒர்க்கிற்கு செலுத்தப்படும் 18 சதவீத வரியை திரும்ப பெறும் ‘ரிவர்ஸ் சார்ஜ் மெக்கானிசம்’ ரத்து செய்யப்படுகிறது. செலுத்திய வரியை திரும்ப பெற்றவர்களும், அதை திரும்ப செலுத்த வேண்டும். செலுத்தாதவர்கள் கடந்த ஆண்டு ஜிஎஸ்டி அமலுக்கு வந்த ஜூலை மாதத்தில் இருந்தே செலுத்த வேண்டும் என்று அறிவித்தது. இதனால் ஒட்டு மொத்த தொழில்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிற்துறையினர் அரசுக்கு செலுத்தும் 18 சதவீத வரியை திரும்ப பெறும் நடைமுறையை விலக்க கூடாது, அல்லது ஜாப் ஒர்க் மீதான 18 சதவீத வரியை நீக்க வேண்டும், என்று கோரினோம். அது ஏற்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது என்றார். 

: இந்திய பஞ்சு வெளிநாடுகளை விட தரமாக உள்ளது எனவும், நடப்பு ஆண்டில் 5 லட்சம் பேல்கள் வாங்கப்படும் எனவம் ஜவுளி தொழில்முனைவோர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்திய ஜவுளி தொழில்முனைவோர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மகாராஷ்டிரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து 64 பெரிய ஜின்னிங் மில் உரிமையாளர்கள் இந்திய ஜவுளி தொழில் முனைவோர் அமைப்பின்(ஐ.டி.எப்) அழைப்பை ஏற்று கோவைக்கு வந்தனர். கோவையில் உள்ள மில்களின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டனர். அதை தொடர்ந்து 64 ஜின்னிங் மில் உரிமையாளர்கள், 32 நூற்பாலைகளின் உரிமையாளர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் நடக்க உள்ளது. இதில் 15 ஜின்னிங் மில்களுக்கு 2017-18ம் ஆண்டுக்கான சிறந்த ஜின்னர் விருது வழங்கப்பட உள்ளது. இந்திய ஜவுளி தொழில்முனைவோர் அமைப்பு காட்டன் குழுவின் முதல் வருமானமாக கடந்தாண்டு 1.85 பேல்கள் காட்டன் வாங்கப்பட்டது. அதை தொடர்ந்து நடப்பு ஆண்டு 3.80 லட்சம் பேல்கள் வாங்கப்பட உள்ளது. இது கடந்தாண்டை விட ஒரு மடங்கு அதிகமாகும். நடப்பு அக்டோபரில் துவங்க உள்ள 2018-19ம் பருத்தியாண்டில் 4.50 லட்சம் முதல் 5 லட்சம் பேல்களை குழுவாக கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், நடப்பாண்டு பருவமழையும் எதிர்பார்த்த அளவுக்கு பெய்துள்ளதால், பருத்தி விளைச்சல் அமோகமாகவும், தரமானதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜின்னிங் மில் உரிமையாளர்களிடம் இருந்து நேரடியாக வரும் தகவல்கள் எங்கள் அமைப்பில் இருக்கும் நூற்பாலை உறுப்பினர்களுக்கு சரியான முடிவை எடுக்க உதவியாக உள்ளது. சர்வதேச தரத்தினோடு ஒப்பிடுகையில் இந்திய பஞ்சின் தரம் நன்றாக உள்ளது. ஆனால், எதிர்பாராத கலப்படமான பஞ்சு எடுக்கும், சுத்தப்படுத்தும் நடைமுறைகளின் போது தேவையற்ற பொருட்கள் கலப்பதால் தரம் குறைகிறது. இதை தவிர்க்க பணியாளர்களுக்கு தொப்பி, கைப்பை, கோட் வடிவிலான உடை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பாண்டில் நாங்கள் ஐந்து லட்சம் பேல்களை வாங்குவதை இலக்காக கொண்டுள்ளோம். தற்போது ஒரு ஹெக்டேருக்கு 600 கிலோ பருத்தி விளைச்சல் கிடைக்கிறது. இதை ஒரு ஹெக்டேருக்கு ஆயிரம் கிலோவாக அதிகரிக்க நடவடிக்கை வேண்டும். பருத்தி விளைச்சலை அதிகரிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பிரபு தாமோதரன் கூறினார். 

: ஜிஎஸ்டி.யின் அதிகப்பட்ச வரியான 28 சதவீத வரி வரம்புக்குள் 35 பொருட்கள் மட்டுமே உள்ளன. ஜிஎஸ்டி என அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி அமல்படுத்தப்பட்டது. இதில், தங்கத்துக்கு மட்டும் 3 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. மற்ற பொருட்களுக்கு 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என நான்கு பிரிவுகளில் வரி வசூலிக்கப்படுகிறது. மாநில நிதியமைச்சர்கள் உறுப்பினர்களாக உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும் போதெல்லாம், சில பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும், சில பொருட்களுக்கு வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கைகள் விடப்பட்டன. இதை மத்திய அரசு ஏற்று அவ்வப்போது பொருட்களின் வரியை குறைத்து வருகிறது. மத்திய நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் பியூஸ் கோயல் தலைமையில் நேற்று முன்தினம் நடந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் 88 பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டது. நாப்கினுக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. 27 அங்குல டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உட்பட 15 பொருட்களின் வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதன் மூலம், அரசுக்கு ரூ.6 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். ஆனால், வரி குறைப்பு காரணமாக இந்த பொருட்களின் விற்பனை அதிகரித்தால், அரசுக்கு வருவாய் அதிகரிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஓராண்டுக்கு முன் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டபோது உச்சக்கட்ட வரி வரம்பான 28 சதவீதம் பிரிவில் 226 பொருட்கள் இருந்தன. தற்போது, இந்த வரி வரம்பில் சிமென்ட், வாகனங்கள், வாகன உதிரி பாகங்கள், டயர்கள், ஏ.சி, டிஜிட்டல் கேமிராக்கள், பாத்திரம் கழுவும் இயந்திரம், படகுகள், விமானங்கள், புகையிலை பொருட்கள் உட்பட 35 பொருட்கள் மட்டுமே உள்ளன. கடந்த ஒரே ஆண்டில் 191 பொருட்கள் 28 சதவீத வரி வரம்பில் இருந்து படிப்படியாக நீக்கப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி வருவாய் சீரடைந்தால், இன்னும் சில பொருட்களை 28 சதவீத வரம்பில் இருந்து அரசு நீக்கலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஜிஎஸ்டி வரி சீரடைந்த பிறகு, அனைத்து அளவிலான டி.விக்கள், பாத்திரம் கழுவும் இயந்திரம், டிஜிட்டல் கேமிராக்கள், ஏ.சி ஆகியவற்றுக்கும் 18 சதவீத வரி விதிக்கப்பட்டால் நியாயமாக இருக்கும் என வர்த்தக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

: நாடு முழுவதும் கூடுதலாக 1.25 கோடி பேரை வருமான வரி செலுத்துவோர் பட்டியலில் கொண்டு வரும்படி வருமான வரித்துறைக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. வருமான வரித்துறைக்கான கொள்கைகளை வடிவமைப்பதில் மத்திய நேரடி வரிகள் வாரியம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த வாரியம் வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், வருவாயை அதிகரிக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. புதிதாக வரி செலுத்துவோரை பட்டியலில் கொண்டு வரும்படி வருமான வரித்துறைக்கு இது அறிவுறுத்தியுள்ளது. வரிதளத்தை அதிகரிக்கும் அரசின் முயற்சியின் ஒருபகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் பயனாக 2017-2018ம் நிதியாண்டில் வருமான வரி செலுத்துவோர் பட்டியலில் புதிதாக 1.06 கோடி பேர் கொண்டு வரப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த ஆண்டில் நாடு முழுவதும் கூடுதலாக 1.25 கோடி பேரை இந்த வரி செலுத்துவோர் பட்டியலில் இணைப்பதற்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த புதிய இலக்கின்படி வடமேற்கு பகுதி வரி அலுவலகங்கள் (அரியானா, பஞ்சாப், இமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர்) அதிகப்பட்சமாக 11.48 லட்சம் பேரை புதிதாக வரி செலுத்துவோர் பட்டியலில் இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், புனே 11.33 லட்சம் பேர், தமிழ்நாடு 10.36 லட்சம் பேரை புதிதாக பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேசம், தெலங்கானாவில் 10.40 லட்சம், குஜராத் 9.88 லட்சம் பேர், கர்நாடகா, கோவாவில் 7.95 லட்சம் பேரையும், மற்ற மாநிலங்களில் இருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலும் புதிய நபர்களை வருமான வரி செலுத்துவோர் பட்டியலில் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.