Saturday, 14 July 2018

அன்றாடம் பயன்படும் பொருட்கள் விலை குறைந்தது

சென்னை: நெல் விளைச்சல் அதிகரிப்பால் அரிசி விலை குறைய தொடங்கியுள்ளது. இதேபோல பாசுமதி அரிசியும் விலை சரிந்தது. ஆனால் சர்க்கரை, புளி விலை திடீரென உயர தொடங்கியுள்ளது. தமிழகத்தில் தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம், ஆரணி, திண்டிவனம், ஈரோடு, காங்கேயம், செங்கல்பட்டு, பொன்னேரி, இலவம்பேடு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நெல் பயிரிடப்பட்டு வருகிறது. மேலும் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் தமிழகத்துக்கு நெல் வருகிறது. தமிழகம் முழுவதும் தற்போது நெல் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் அதிக அளவில் நெல் வருகிறது. இதனால், அரிசி விலை குறைய தொடங்கியுள்ளது. அதாவது “கோ 51” அரிசி கிலோ 30லிருந்து 28, ரூபாலி 32லிருந்து 30, அதிசய பொன்னி 34லிருந்து 32, பாபட்லா (முதல் ரகம்) 44லிருந்து 40, பாபட்லா (2ம் ரகம்) 40லிருந்து 36, வெள்ளை பொன்னி 52லிருந்து 48, பொன்னி பச்சரிசி (புதுசு) 44லிருந்து 40, பொன்னி பச்சரிசி (பழையது) 52லிருந்து 48 ஆக விலை குறைந்துள்ளது. அது மட்டுமல்லாமல், பிரியாணிக்கு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் பாசுமதி அரிசி விலையும் சரிய தொடங்கியது. பாசுமதி அரிசி (முதல் ரகம்) 110லிருந்து 95, பாசுமதி அரிசி (2ம் ரகம்) 90லிருந்து 75, பாசுமதி அரிசி (3ம் ரகம்) 70லிருந்து 60 ஆகவும் விலை குறைந்துள்ளது. மத்திய அரசு சர்க்கரைக்கு வரி விதித்துள்ளதால் சர்க்கரை விலை 32லிருந்து 40 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் இருந்துதான் தமிழகத்திற்கு அதிக அளவில் புளி வருகிறது. இங்கு விளைச்சல் தற்போது குறைந்துள்ளது. இதனால் விலையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. புளி (முதல் ரகம்) 150லிருந்து 200, புளி (2ம் ரகம்) 100லிருந்து 150 ஆக விலை உயர்ந்துள்ளது. இறக்குமதி வரி விதிப்பால் இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் இருந்து வரும் பாமாயில் விலை அதிகரித்துள்ளது. பாமாயில் 68லிருந்து 72 ஆக உயர்ந்துள்ளது. ரஷ்யா, உக்ரைனில் இருந்து இறக்குமதியாகும் சன்பிளவர் ஆயில் விலையும் அதிகரித்துள்ளது. சன்பிளவர் ஆயில் (முதல் ரகம்) 83லிருந்து 89, சன்பிளவர் ஆயில் (2ம் ரகம்) 78லிருந்து 82 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. மேலும் உளுந்தம் பருப்பு 72லிருந்து 78, கடலைப்பருப்பு 50லிருந்து 55 ஆகவும் விற்கப்படுகிறது. இதேபோல் விளைச்சல் அதிகரிப்பால் துவரம் பருப்பு 75லிருந்து 70, பாசிப்பருப்பு 85லிருந்து 80, குண்டு மிளகாய் 250லிருந்து 200, குண்டுமிளகாய் (2ம் ரகம்) 200லிருந்து 150, நீட்டு மிளகாய் 140லிருந்து 100 ஆகவும் விலை குறைந்துள்ளது. பூண்டு 100லிருந்து 55, பூண்டு (2ம் ரகம்) 60லிருந்து 30 ஆகவும் விலை குறைந்துள்ளது என்று தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் சொரூபன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் நெல் விளைச்சல் அதிமாக உள்ளதால் வரும் நாட்களில் அரிசி விலை கிலோவுக்கு 2 முதல் 4 வரை குறைய வாய்ப்புள்ளது. இதே போல துவரம் பருப்பு, மிளகாய் விலையும் குறைய வாய்ப்புள்ளது என்றும் சொரூபன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.