தமிழகத்தில் உள்ள காற்றாலைகளில் தினமும் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 9 கோடி யூனிட் மட்டுமே வாங்கப்படுகிறது. 3 கோடி யூனிட் வாங்காமல் காற்றாலை மின்சாரம் வீணடிக்கப்படுகிறது. அதை வாங்கி வெளிமாநிலத்திற்கு விற்றால் இயற்கை ஆற்றலை பயன்படுத்த முடியும்.தமிழகத்தில் 11,800 காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. இவை 7,800 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டவை. ஆண்டுதோறும் தென்மேற்கு பருவகாற்று காலம் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையாகும். அதன்படி காற்று அதிகளவில் வீசுவதால், கடந்த ஒரு மாதமாக தினசரி சராசரியாக 9 கோடி யூனிட் மின் உற்பத்தியானது. சராசரியாக 4,600 மெகாவாட் அளவில் இயங்கி வந்தது. இந்நிலையில், கடந்த 2 நாளாக காற்றாலைகளில் 12 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியாகும் அளவிற்கு காற்று வீசுகிறது. ஆனால், மின்வாரியம் காற்றாலைகளை தினசரி 6 மணி நேரம் வரை இயங்காமல் நிறுத்தி வைத்து வருகிறது. இதனால் வழக்கம்போல் 9 கோடி யூனிட் மட்டுமே பெறப்பட்டு வருகிறது. 3 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யாமல் வீணடிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அகில இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கம் தலைவர் கஸ்தூரி ரங்கையன் கூறியதாவது:தமிழகத்தின் மின் தேவை நாள்தோறும் சராசரியாக 13,500 மெகாவாட்டாக உள்ளது. இதில் அனல் மின் நிலையங்கள் உள்ளிட்ட பிற ஆதாரங்கள் மூலம் 9,500 மெகாவாட்டும், காற்றாலைகள் மூலம் 4 ஆயிரம் மெகாவாட்டும் பெறப்பட்டு வருகிறது. காற்றாலைகளில் கூடுதலாக தினசரி 3 கோடி யூனிட் அளவிலான 2 ஆயிரம் மெகாவாட் பெறும் வகையில் காற்று வீசுகிறது. ஆனால், மின்வாரியம் காற்றாலைகள் மூலம் வரும் மின்சாரம் உபரியாக உள்ளதாக கருதுகிறது. காற்றாலை மின்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால் அனல் மின் நிலையத்தின் உற்பத்தியை நிறுத்த வேண்டியிருக்கும். அதை குறிப்பிட்ட அளவிற்கு மேல் குறைக்க முடியாததால், காற்றாலை மின்சாரத்தை தவிர்ப்பதாக கூறுகிறது. அரியானா, பஞ்சாப், அசாம் உள்ளிட்ட வட மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு மின்சாரம் தேவைப்படுகிறது. அவர்கள் தமிழக மின்சாரத்தை வாங்குவதற்கு தயாராக இருக்கிறார்கள். அதை விற்று தரவும் ஆள் இருக்கிறார்கள். இதனால் தமிழக மின்வாரியம் காற்றாலைகளை நிறுத்தாமல் உற்பத்தி முழுவதையும் எடுத்து, அதில் தமிழகத்திற்கு போக மீதமுள்ளவற்றை பிற மாநிலங்களுக்கு விற்கலாம். இதனால் காற்றாலை மின் உற்பத்தியாளர்களிடம் வழக்கம்போல் யூனிட் ரூ.3க்கு வாங்கி, பிற மாநிலங்களுக்கு ரூ.5க்கு விற்கலாம். அதை மேற்கொள்ளும்படி தமிழக மின்வாரியத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.இவ்வாறு கஸ்தூரி ரங்கையன் கூறினார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.