* கிலோ ₹250க்கு விற்ற ரப்பர் தற்போது 100க்கு சரிந்து விட்டது. பால் வெட்டும் கூலி கூட தேறுவதில்லை.*ரப்பர் விவசாயத்தால் நஷ்டம் அடைந்த விவசாயிகள், மாற்று வழியைத்தேடும் நிலைக்கு ஆளாகிவிட்டனர்.*சூறைக்காற்றில் ரப்பர் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் நஷ்டம் அதிகரித்துவிட்டது.*நீண்டகாலத்துக்கு பிறகு தற்போது, ரப்பர் மரங்களை வெட்டி அகற்றி விட்டு நெல் பயிரிட தொடங்கிவிட்டனர்.குலசேகரம்: குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என தமிழர்களின் ஐவகை நில பிரிவுகளில், பாலை நிலம் தவிர்த்த மற்ற 4 வகை நிலங்களையும் கொண்டு, இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக குமரி மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு நெல் விவசாயம் செழித்திருந்த காலம் உண்டு. முன்பு 90 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் இங்கு நெல் விவசாயம் செய்யப்பட்டது. காலப்போக்கில் பருவ மழை தவறுதல், நஷ்டம், கால்வாய்கள் ஆக்ரமிப்பு, ஆட்கள் பற்றாக்குறை என பல இடர்களை விவசாயிகள் சந்திக்க தொடங்கினர். அதுபோல் மலையோர பகுதிகளில் வன விலங்குகளால் பயிர்களின் சேதமும் அதிகரிக்க தொடங்கியது. இதன் விளைவாக நாளுக்கு நாள் நெல் விவசாய பரப்பு குறைய தொடங்கியது. குறிப்பாக குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் நெல் விவசாயம் படிப்படியாக குறைந்து ரப்பர் பயிரிடப்பட்டது. பல ஏக்கர் தென்னந்தோப்புகள், வயல்கள் அழிக்கப்பட்டு அங்கெல்லாம் ரப்பர் பயிர் ஊடுருவியது. அதிகம் மற்றும் நீண்டகால வருமானம், வன விலங்குகளில் இருந்து பயிர் பாதுகாப்பு என பலவும் விவசாயிகளை ரப்பர் பக்கமாக வெகுவாக ஈர்த்தது. இதனால் எங்கு பார்த்தாலும் ரப்பர் என்ற நிலை உருவானது. வீடுகளை சுற்றிலும் கூட ரப்பர் வளர்க்க தொடங்கினர்.ரப்பரால் குமரி மாவட்ட வருமானம், மக்களின் வாழ்க்கைத்தரம் வெகுவாக அதிகரிக்க தொடங்கியது. ஆனால் திடீரென ரப்பரின் விலை நாளுக்கு நாள் வீழ்ச்சியை கண்டது. ₹250க்கும் மேல் விற்பனையான ஒரு கிலோ ரப்பர் தற்போது 100 ரூபாய்க்கும் கீழ் வந்துள்ளது. இதனால் ரப்பர் விவசாயிகளுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பால் வெட்டும் கூலிகூட கிடைக்காமல் திணறுகின்றனர். பலர் ரப்பர் பால் வெட்டுவதைக்கூட நிறுத்தியுள்ளனர்.மேலும் அடிக்கடி ஏற்படும் சூறைக்காற்றால் முறிந்து விழும் ரப்பர் மர கிளைகள், வேரோடு சாயும் ரப்பர் மரங்கள் என விவசாயிகளுக்கு நஷ்டத்துக்கு மேல் நஷ்டம் ஏற்பட தொடங்கியது. ஒரு காலத்தில் பணப்பயிராக விளங்கிய ரப்பர், நாளடைவில் நஷ்ட பயிராக மாறியது. இதனால் மீண்டும் ேவறு பயிருக்கு மாறும் எண்ணம் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் குலசேகரம் அருகே திருநந்திக்கரையில் பல ஏக்கர் ரப்பர் மரங்கள் வெட்டப்பட்டு, அங்கு நெல் விவசாயத்தை தொடங்கி உள்ளனர். இதற்காக புதிதாக நிலத்தை பண்படுத்தி, உழுது நெல் விவசாயத்துக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்தனர். பின்னர் அதில் பெண்கள் நெல் நாற்றுகளை நட்டனர். இதனை அப்பகுதி சிறுவர்கள் மட்டுமின்றி பலரும் கூடி நின்று வியப்புடன் பார்த்தனர். மேலும் அவ்வழியாக சென்றவர்களில் ஏராளமானோர் தங்கள் ெசல்போன்களில் படம் எடுத்தனர். சிலர் பச்சைப்பசேல் நாற்றுடன் செல்பியும் எடுத்துக்கொண்டனர். குமரி மேற்கு மாவட்ட பகுதியில் ரப்பருக்கு பதிலாக மீண்டும் நெல் விவசாயம் தொடங்கப்பட்டுள்ளது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோல பல பகுதிகள் மீண்டும் நெல்விளையும் பூமியாக மலரும் என தெரிகிறது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.