Wednesday, 25 July 2018

பெட்ரோல் பங்க்கில் டீசல் விற்பனை 80 சதவீதம் குறைந்தது. இதனால் ரூ1,000 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் : நாடு முழுவதும் 5வது நாளாக நேற்று லாரி ஸ்டிரைக் தொடர்ந்ததால் பெட்ரோல் பங்க்கில் டீசல் விற்பனை 80 சதவீதம் குறைந்தது. இதனால் ரூ1,000 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. டீசல் விலை, சுங்க கட்டணம், 3ம் நபர் விபத்து காப்பீட்டு பிரீமியம் உயர்வு போன்றவற்றை குறைக்க வலியுறுத்தி, நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் கடந்த 20ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று வேலைநிறுத்தம் 5வது நாளாக நீடித்ததன் காரணமாக, தமிழகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் சரக்கு போக்குவரத்து அடியோடு முடங்கியுள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. லாரி ஸ்டிரைக் நேற்று 5வது நாளாக நீடித்ததால் லாரிகள் அதிகம் உள்ள நாமக்கல், திருச்செங்கோடு, சங்ககிரி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் தினமும் 80 சதவீதம் அளவுக்கு டீசல் விற்பனை குறைந்துள்ளது. இதுகுறித்து நாமக்கல்லில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூறுகையில், ‘தினமும் 30 ஆயிரம் லிட்டர் டீசல் விற்பனையான பங்க்கில் தற்போது தினமும் 8 ஆயிரம் லிட்டர் மட்டும் விற்பனையாகிறது. இதனால் எங்களுக்கு மட்டுமின்றி, மத்திய, மாநில அரசுகளுக்கு கடும் இழப்பு,’ என்றனர். லாரி ஸ்டிரைக் குறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறுகையில், ‘மத்திய அரசு இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. கடந்த 5 நாளாக நீடிக்கும் ஸ்டிரைக்கால் லாரி உரிமையாளர்கள், மத்திய, மாநில அரசுகளுக்கு ரூ1000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கோரிக்கையை ஏற்கும் வரை வேலைநிறுத்தத்தை தொடர்வதை தவிர வேறு வழியில்லை,’ என்றார். கோவையில் ரூ.500 கோடி வர்த்தகம் பாதிப்பு : கோவை மாவட்ட சரக்கு, போக்குவரத்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் 12 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. இதனால் தினசரி ரூ.100 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த 5 நாட்களில் ரூ.500 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. லாரி புக்கிங் அலுவலகங்களில் சரக்குகள் புக்கிங் செய்யப்படுவதில்லை. இதனால் கோவையில் மோட்டார், வார்ப்படம் இயந்திரங்கள், ஜவுளி உள்ளிட்ட சரக்குகள் நிறுவனங்களில் தேங்கி கிடக்கின்றன. குறிப்பாக பம்பு செட்கள் மட்டும் ரூ20 கோடிக்கு தேக்கமடைந்துள்ளது. இதனால் சிறு தொழில் செய்பவர்கள் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளனர் என்றனர். யார்டுகளில் குவிந்து கிடக்கும் மரக்கட்டைகள்: தூத்துக்குடி துறைமுகம் வழியாக வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் மரக்கட்டைகள் யார்டுகளில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. லாரி ஸ்டிரைக்கால் அவற்றை வெளி மாவட்டங்களுக்கும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் கொண்டு செல்லமுடியவில்லை. பல கோடி ரூபாய் பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது ரூ50 கோடி ஜவுளிகள் தேக்கம்: ஈரோடு கனிமார்க்கெட் ஜவுளி சந்தை வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் செல்வராஜ் கூறுகையில், ‘‘ஆடிப்பண்டிகைக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளது. லாரி ஸ்டிரைக் தொடர்ந்தால் ஆடி வியாபாரம் அடியோடு பாதிக்கப்பட்டு விடும். இதற்காக பல லட்சம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. லாரி ஸ்டிரைக்கால் ஈரோடு ஜவுளி சந்தையில் மட்டும் ரூ50 கோடி ஜவுளிகள் தேக்கமடைந்துள்ளன’’ என்றார்.ரயில்வேக்கு ரூ48 லட்சம் வருவாய் லாரி ஸ்டிரைக்கால், சரக்கு ரயில்களில் பார்சல்களை அனுப்புவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே அதிகாரி கூறுகையில், ‘நாடு முழுவதும் லாரி ஸ்டிரைக்கினால், ரயில்களில் அதிகமாக பார்சல்கள் அனுப்பப்படுகிறது. கடந்த 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை சேலம் கோட்டத்தில் இருந்து 855 டன் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. அதன் மூலம் ரூ48 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.’ என்றார். ''ரூ250 கோடி பட்டாசு தேக்கம் மூலப்பொருளுக்கும் தட்டுப்பாடுவிருதுநகர் மாவட்டம், சிவகாசியில் 800க்கும் மேற்பட்ட ஆலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள், 100க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் தினமும் நாடு முழுவதும் அனுப்பப்படுகிறது. லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தால், கடந்த 5 நாட்களாக சிவகாசியிலிருந்து வெளிமாநிலங்களுக்கு பட்டாசுகள் அனுப்பப்படவில்லை. இதனால் சுமார் ரூ.250 கோடி மதிப்பிலான பட்டாசுகள், லாரி செட் குடோன்களில் தேக்கமடைந்துள்ளன. தீபாவளிக்கு 3 மாதங்களே உள்ள நிலையில், சிவகாசியில் பட்டாசு உற்பத்தி பணி தீவிரமடைந்துள்ளது. ஆனால், பட்டாசுகளை வெளிமாநிலங்களுக்கு அனுப்ப முடியாமல், ஆலை உரிமையாளர்கள் தவிக்கின்றனர். வெடி உப்பு, சல்பர் போன்ற பட்டாசு உற்பத்திக்கான மூலப்பொருட்களும் வெளிமாநிலங்களில் இருந்து வரவில்லை. இதனால் மூலப்பொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.