திருப்பூர்: மூலப்பொருள் விலை உயர்வால் பின்னலாடை துணிகள் 10 சதவீதம் விலை உயர்த்தப்பட்டுள்ளது என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. திருப்பூரில் உள்நாட்டு பனியன் உற்பத்தி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள், நிட்டிங், சாயப்பட்டறை, பிரிண்டிங், எம்பிராய்டரிங், பவர் டேபிள் நிறுவனங்கள் உள்ளிட்ட 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். நாள் ஒன்றுக்கு ரூ.125 கோடிக்கும் அதிகமாக வர்த்தகம் நடக்கிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜி.எஸ்.டி வரி அமலான பிறகு பஞ்சு விலை தொடர்ச்சியாக ஏறி வருகிறது. சமீபத்தில் கிலோவுக்கு ரூ.17 முதல் ரூ.18 வரை விலை உயர்ந்தது. இதனால், பின்னலாடை நிறுவனங்களுக்கு சப்ளை செய்யும் நூல் விலை உயர்ந்தது. இதைத்தொடர்ந்து, பின்னலாடை பொருட்களையும் விலை உயர்த்த வேண்டிய கட்டாயம், பனியன் ஆலை உரிமையாளர்களுக்கு ஏற்பட்டது. இதனால், தற்போது, பனியன் ஆடைகளான பின்னலாடை விலையை பத்து சதவீதம் உயர்த்தி அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை: பஞ்சு, நூல் ஆகியவற்றின் விலை உயர்வு மற்றும் பின்னலாடை சார்ந்த டையிங், நிட்டிங், பிரிண்டிங், பிளிச்சிங், அட்டை பெட்டி, பேக்கிங் பாக்ஸ் உட்பட பல்வேறு பொருட்களின் கட்டணங்கள் அதிகரித்துள்ளது. இதனால், பின்னலாடைகளின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க உறுப்பினர்களின் ஆலோசனைக்கு பின்னர், ஆடைகளின் விலை 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு வியாபாரிகள், டீலர்கள், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுகிறோம் வழக்கமாக, சந்தையில் நிலவும் மூலப்பொருட்களின் விலை உயர்வுக்கு ஏற்ப, பின்னலாடை நிறுவனங்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு விலை உயர்த்துவது வாடிக்கை. ஆனால், முதல்முறையாக விலை உயர்வுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.