பழம் சேர்க்காமல் வரி பலன்களை பெற்றுவரும் குளிர்பான நிறுவனங்கள் மீது வரி ஏய்ப்பு நடடிக்கை எடுக்கப்படலாம் என ஜிஎஸ்டி அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஜிஎஸ்டி யில் 10 சதவீதத்துக்கு மேல் பழம் சேர்க்கப்படும் குளிர்பானங்களுக்கு 12 சதவீத வரி விதிக்கப்படுகிறது. கோலா போன்ற, பழ வகைகள் சேர்க்கப்படாத குளிர்பானங்களுக்கு 40 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் பிரிவில் இவை உள்ளதால் 40 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சில உள்ளூர் குளிர்பான நிறுவனங்கள், பழங்கள் சேர்க்காமல் அல்லது, 10 சதவீதத்துக்கு கீழ் மட்டும் பழங்கள் சேர்த்து விட்டு 12 சதவீத ஜிஎஸ்டி மட்டுமே செலுத்தி வருகின்றன. இவ்வாறு கூடுதல் வரி விதிப்பில் இருந்து தப்பித்து வரும் இந்த நிறுவனங்கள் மீது வரித்துறையினர் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து ஜிஎஸ்டி மற்றும் வரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது: ஜிஎஸ்டி நான்கு வகையான வரி பிரிவுகளை கொண்டது. 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் என்ற நான்கு வகையாக வரிகள் விதிக்கப்படுகின்றன. உச்சபட்ச வரி 28 சதவீதம் என்றாலும், ஏற்கெனவே உள்ள செஸ் வரியை கணக்கில் கொண்டு 28 சதவீத வரி விதிப்புக்கு மேல் ஆடம்பர மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மீது வரி விதிக்கப்படுகிறது. குளிர்பானங்களை பொறுத்தவரை, அவற்றில் 10 சதவீதத்துக்கு மேல் பழச்சாறு கலந்திருந்தால் வரி 12 சதவீதம்தான். பழச்சாறு கலக்காத உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பிரிவில் உள்ளவற்றுக்கு 40 சதவீதம் உள்ளது. கார்பொனேட் பானங்கள் எலுமிச்சை சுவையில் இருந்தால் 5 சதவீதத்துக்கு மேல் பழச்சாறு இருக்க வேண்டும். ஆனால் சில உள்ளூர் குளிர்பான தயாரிப்புகளில், கார்பொனேட் பானங்கள் என வகைப்படுத்தியும், பழச்சாறு இல்லாமல் அல்லது நிர்ணயிக்கப்பட்டு அளவுக்கு கீழ் குறைவாக சேர்த்தும் வரிப்பலனை அனுபவிக்கின்றனர். இதுதொடர்பாக சில நிறுவனங்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. சந்தேகத்துக்கு இடமான பானங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவற்றை தயாரித்த நிறுவனங்கள் மீது வரி ஏய்ப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். ஆனால், நிறுவனங்கள் தரப்பில் கூறுகையில், இது வழக்கமான நடவடிக்கைதான். வரி அதிகாரிகளுக்கு எங்கள் தயாரிப்பு பற்றிய விவரங்களை சமர்ப்பித்துள்ளோம் என்றனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.