Sunday, 15 July 2018

ஆடிப்பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையில்லாமல் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.

சேலம் : பருத்தி நூல்விலை உயர்வால் விசைத்தறித் தொழில் முடங்கியிருப்பதாக நெசவாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்து நெசவுத் தொழில் பிரதானமாக உள்ளது. சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான விசைத்தறிகள் இயங்கி வருகிறது. 5 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். நெசவுத் தொழிலை பொறுத்தவரை பருத்தி நூலே, இவற்றின் உற்பத்திக்கான அடித்தளமாக உள்ளது. கடந்த 2 மாதங்களில் நூலின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் தொழில் முடங்கியிருப்பதாக நெசவாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சேலத்தை சேர்ந்த விசைத்தறி நெசவாளர்கள் கூறியதாவது: தமிழகத்தில் ஒரு காலத்தில் கைத்தறி நெசவு பிரதானமாக இருந்தது. காலத்தின் சுழற்சியால் கைத்தறிகள் விசைத்தறியாக மாறியது. தமிழகத்தில் விசைத்தறியில் நெய்யப்படும் துணி ரகங்கள், இதர மாநிலங்கள் மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன்மூலம் அரசுக்கும் பெரும் வருவாய் கிடைக்கிறது. ஆனால், நெசவுக்கு பிரதானமாக இருக்கும் நூலின் விலை, தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருப்பது வேதனைக்குரியது. 50 கிலோ எடை கொண்ட 40ம் நம்பர் பருத்தி நூல் கட்டு, கடந்த 2 மாதத்திற்கு முன்பு ரூ9,500க்கு விற்றது. தொடர்ச்சியாக விலை உயர்ந்து தற்போது ரூ10,400க்கு விற்கிறது. விலை உயர்ந்த நேரத்திலும், நூல் கிடைப்பது தட்டுப்பாடாக உள்ளது. இதனால், கடந்த 2 மாதத்தில் மட்டும் பல கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆடிப்பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையில்லாமல் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே அரசு, இதில் சிறப்பு கவனம் செலுத்தி, நூல் விலையை ஒரே சீராக கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.