Thursday, 26 July 2018

ஜிஎஸ்டி குறைத்தும் அதன் பலன் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

ரூபாய் மதிப்பு சரிவால் டிவி, கார் விலையை உயர்த்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதனால், ஜிஎஸ்டி குறைத்தும் அதன் பலன் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 88 பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டது. இதில் டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களும் அடங்கும். ஆனால், மேற்கண்ட வரி குறைப்புகள் ஆட்டோமொபைல் மற்றும் டிவி உற்பத்தியாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை. டிவி மீதான வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டும் அவற்றின் விலை உயர்த்த வேண்டிய நிலைக்கு டிவி உற்பத்தி நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. இதற்கு காரணம் ரூபாய் மதிப்பு சரிவுதான். கடந்த 17ம் தேதி ரூபாய் மதிப்பு ரூ.69.10 ஆக சரிந்து விட்டது. இதன்பிறகு சற்று மீண்டாலும், பெரிய அளவில் வலுவடையவில்லை. ஆசியாவிலேயே மிக மோசமான கரன்சி என்ற பெயர்தான் கிடைத்தது. ரூபாய் மதிப்பு சரிவால், டிவி நிறுவனங்கள் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளன. இதுகுறித்து டிவி தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கூறுகையில், டிவி பேனல்களை பொறுத்தவரை இறக்குமதியை சார்ந்தே இருக்க வேண்டியுள்ளது. எனவே, ரூபாய் மதிப்பு சரிவால் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் அடுத்த மாதம் முதல் டிவி விலையை உயர்த்த வேண்டி வரும். குறிப்பாக, 32 அங்குல டிவி 15 சதவீதம் விலை உயரலாம். அதேநேரத்தில் இதை விட பெரிய அளவு டிவி விலை 10 சதவீதம் குறைய வாய்ப்பு உள்ளது என்றனர். கார் தயாரிப்பாளர்கள் கூறுகையில், ‘‘எலக்ட்ரானிக் கன்ட்ரோல் யூனிட் உள்ளிட்ட சில கார் மற்றும் இன்ஜின் பாகங்கள் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே ரூபாய் மதிப்பு சரிவால் கார் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்’‘ என்றனர். சொகுசு கார்களை பொறுத்தவரை பெரும்பான்மை பாகங்கள் இறக்குமதி செய்தே இங்கு கட்டமைக்கப் படுகின்றன. இவற்றுக்குதான் கூடுதல் பாதிப்பு. எனவே, சொகுசு கார்கள் விலை உயர வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. ரூபாய் மதிப்பு வலுவடையாமல் தொடர்ந்து சரிவு நிலையிலேயே இருந்தால் விலை உயர்த்த வேண்டியது கட்டாயம் ஆகிவிடும் என டிவி மற்றும் கார் தயாரிப்பு நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது. ரூபாய் மதிப்பு சரிவால், ஜிஎஸ்டி குறைந்தும் அதன் பலன் மக்களுக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.