Thursday, 19 July 2018

ஜிஎஸ்டி வரியால், டிஎம்டி கம்பிகள் தயாரிக்கும் ரோலிங் மில்கள் மூடப்பட்டு வருகின்றன.

ஜிஎஸ்டி வரியால், டிஎம்டி கம்பிகள் தயாரிக்கும் ரோலிங் மில்கள் மூடப்பட்டு வருகின்றன. இதனால் டிஎம்டி கம்பிகளின் விலை உயர்ந்து கட்டுமான தொழில் பாதிப்படைந்துள்ளது. தமிழகம் முழுவதும் கட்டுமானத்துக்கு பயன்படும் டிஎம்டி கம்பிகள் தயாரிக்கும் 3,500க்கும் மேற்பட்ட ரோலிங் மில்கள் இயங்கி வந்தன. பழைய இரும்புகளை கொள்முதல் செய்து அதனை மில்லில் சில்லரை வியாபாரிகள் கொடுக்கும் ஆர்டருக்கு ஏற்றவாறு 6 மிமீ, 8 மிமீ, 10 மிமீ, 12 மிமீ, 18 மிமீ 20 மிமீ வரை டிஎம்டி கம்பிகள் தயார் செய்து அதனை அனுப்பி வைப்பர். ரோலிங் மில்களில் தயார் செய்யப்படும் டிஎம்டி கம்பிகளை வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்ய தமிழகம் முழுவதும் அனைத்து சிறிய நகரங்கள் முதல் பெரிய நகரங்கள் வரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சில்லரை விற்பனை கடைகள் இயங்கி வந்தன. ரோலிங் மில்கள் அதிக எண்ணிக்கையில் இருந்ததால் அவர்களுக்குள் எழுந்த போட்டியால் சில்லரை விற்பனை கடைகளுக்கு குறைந்த விலையில் இரும்புகள் கிடைத்தன. இதனால் வாடிக்கையாளர்களும், கட்டுமானத்தொழிலில் ஈடுபட்டவர்களும் அதிக அளவில் இரும்பு வாங்கத் தொடங்கினர். இந்நிலையில் ஜிஎஸ்டி குழு டிஎம்டி கம்பிக்கு 18 சதவீதம் வரி விதித்தது. இதனால் சிறிய ரோலிங் மில்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் படிப்படியாக தங்கள் நிறுவனங்களை மூடி வருகின்றன குறிப்பாக தற்போது சுமார் 1500க்கும் மேற்பட்ட ரோலிங் மில்களை மூடியுள்ளதாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருவோர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் சிறிய நகரங்களில் சில்லறை இரும்பு விற்பனை கடைகளை வைத்திருந்தவர்களுக்கு போதிய நேரத்தில் குறைந்த விலையில் இரும்புகள் கிடைக்கவில்லை. இதனால் சில்லறை இரும்பு விற்பனை செய்யும் கடைகளும் படிப்படியாக தற்போது மூடி வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் கடந்த 6 மாதத்தில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை கடைகள் மூடப்பட்டதாக டிஎம்டி கம்பி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து டிஎம்டி கம்பிகள் சில்லரை விற்பனை கடைகள் வைத்திருப்பவர்கள் கூறியதாவது: ஜிஎஸ்டிக்கு முன்பு டிஎம்டி கம்பிகளுக்கு வாட் வரியாக 5 சதவீதம் இருந்தது. இதனால் வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள், இரும்பு தயாரிக்கும் ரோலிங் மில் உரிமையாளர்கள் எந்தவிதமான பாதிப்புகள் இன்றி தொழில் நடத்தி வந்தனர். மத்திய அரசு ஜிஎஸ்டி வரியாக டிஎம்டி கம்பிக்கு 18 சதவீதம் வரி விதித்ததால் தொடர் நஷ்டத்தை ரோலிங் மில் உரிமையாளர்கள் சந்தித்தனர். இதனால் ரோலிங் மில்கள் தொடர்ந்து படிப்படியாக மூடப்பட்டு வருகிறது. இதனால் சில்லரை விற்பனை கடைகளுக்கு இரும்புகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை சமாளிக்க முடியாத பல சில்லரை விற்பனை கடைகளும் மூடப்பட்டது என்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.