தொடர் விலை வீழ்ச்சி காரணமாக வெற்றிலை பறிக்க விவசாயிகள் தயங்குவதன் காரணமாக பல நூறு ஏக்கர் வெற்றிலை வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர், சாந்திநகர், ஜமீன், கீழ்முருங்கை, ரெட்டி மாங்குப்பம், சாத்தம்பாக்கம், ராஜக்கல், மாதனூர், தோட்டாளம், அகரம் சேரி, பனங்காட்டூர் உட்பட பல்வேறு பகுதிகளில் வெற்றிலை பயிரிடப்பட்டு வருகிறது. பீடாவிற்காக கொல்கத்தா வெற்றிலை, விசேஷங்களுக்காக கருப்பு மற்றும் வெள்ளை வெற்றிலை பல நூறு ஏக்கர்களில் பயிரிடப்பட்டு வருகிறது. கடந்த கோடை காலத்தில் வெற்றிலை விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டதால் ஒரு கவுளி வெற்றிலை ரூ20ல் இருந்து ரூ50 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது அதிக விளைச்சல் இருந்தாலும் வெற்றிலை விலையில் வீழ்ச்சி காணப்படுவதாக கூறி வெற்றிலையை வாங்கி செல்லும் புரோக்கர்கள் விலையை கவுளிக்கு ரூ6 ஆக வழங்க கோருகின்றனர். ரூ6 க்கு நூறு வெற்றிலை கொண்ட ஒரு கவுளி கொடுத்தால் பறிக்கும் கூலி கூட தங்களுக்கு கிடைக்காது என்பதால் வெற்றிலை விவசாயிகள் பறிக்காமல் கொடியில் விட்டுள்ளனர்.மேலும், ஆந்திர மாநிலம் குப்பம், மதனபல்லி உட்பட பல்வேறு இடங்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட ரக வெற்றிலை விலை குறைவாக மார்க்கெட்டிற்கு வந்திருப்பதால் தமிழக வெற்றிலைக்கு விலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வெற்றிலை விவசாயி ஒருவர் கூறுகையில், ‘வெற்றிலைக்கு வருடம் முழுவதும் மார்க்கெட்டில் அதிக விலை உள்ளது. குறிப்பாக பண்டிகை காலமான ஆடி மாதம் துவங்கி தை மாதம் வரை வெற்றிலை ஒவ்வொரு விசேஷங்களிலும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது கடைகளில் ஒரு வெற்றிலை ரூ1 வரை விற்கப்பட்டாலும் அந்த விலை விவசாயிகளை வந்தடைவதில்லை’ என்றார். எனவே, இடைத்தரகர்கள், கொண்டு செல்லும் விலை ஆகியவை காரணமாக உரிய விலை கிடைக்காமல் இருப்பதை தவிர்க்க அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.