தமிழகத்தில் 1,800 நூற்பாலைகள் உள்ளன. இவற்றுக்கு ஆண்டுக்கு 125 லட்சம் பேல் பருத்தி தேவை. தமிழகத்தில் 5 லட்சம் பேல் மட்டுமே உற்பத்தியாகிறது. மீதி தேவைக்கு குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் கொள்முதல் செய்யப்படுகிறது. அக்டோபர் முதல் செப்டம்பர் வரை பருத்தி வரத்து இருந்தாலும், அவை முதல் ஆறு மாதத்திற்கு பிறகு விலை அதிகரிக்க துவங்குகிறது. இதனால் ஆண்டுதோறும் குறு, சிறு நூற்பாலைகள் 50 சதவீதத்திற்கு மேல் உற்பத்தி நிறுத்தத்திற்கு ஆளாகின்றன. இதனால் கோவை மண்டல தேசிய சிறு தொழில் கழக அலுவலகம் தமிழகத்தில் உள்ள குறு, சிறு நூற்பாலைகளுக்கு தேவையான பஞ்சை குறைந்த விலையில்விற்க ஏற்பாடு செய்கிறது.இதுகுறித்து தேசிய சிறு தொழில் கழகத்தின் (என்எஸ்ஐசி) கோவை மண்டல முதுநிலை மேலாளர் கண்ணன் கூறியதாவது: கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்ட குறு, சிறு தொழில் வளர்ச்சிக்காக, இரும்பு, ஸ்டீல், காப்பர், அலுமினியம், மெழுகு ஆகிய மூலப்பொருட்களை மொத்த உற்பத்தியாளர்களிடம் வாங்கி, இருப்பு வைத்து, குறைந்த விலையில் விற்கிறோம். நூற்பாலைகளின் தேவையை கருதி, புதிதாக பஞ்சு கொள்முதல் செய்து, குறைந்த விலையில் விற்க முடிவெடுத்துள்ளோம். இதற்கான ஏற்பாடுகளை இந்திய பருத்தி கழகத்துடன் மேற்கொண்டுள்ளோம். வரும் அக்டோபரில் துவங்கும் பருத்தி சீசனில் பஞ்சு விற்பனை கோவையில் துவங்க உள்ளது. ஒரு பேல் தேவைப்படக்கூடிய மிகச்சிறிய நூற்பாலைகளும் கூட வாங்கி பயன்பெற முடியும். வட மாநிலத்தில் கொள்முதல் விலையை விட குறைவாக இருக்கும். வரும் அக்டோபர் முதல் குறு, சிறு நூற்பாலைகள் தங்களது ஆர்டர்களை என்எஸ்ஐசிக்கு தெரிவிக்கலாம் என்றார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.