Friday, 6 July 2018

நீண்ட இடைவெளிக்கு பிறகு நேற்று எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைத்துள்ளன

 புதுடெல்லி: ஒரு மாதத்துக்கு பிறகு, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று உயர்த்தியுள்ளன. இதன்படி பெட்ரோல் 16 காசு, டீசல் 12 காசு உயர்த்தப்பட்டுள்ளது.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. கர்நாடக தேர்தலுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை சுமார் ₹4 வரை உயர்ந்தது. பின்னர் குறையத்தொடங்கினாலும், எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இந்த நிலையில், கடந்த மாதம் 26ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைக்கவில்லை. 36 நாட்களாக விலை உயர்த்தப்படவில்லை.நீண்ட இடைவெளிக்கு பிறகு நேற்று எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைத்துள்ளன. இதன்படி டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 16 காசு உயர்ந்து ₹75.55 ஆகவும், டீசல் விலை ₹67.50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் 17 காசு உயர்ந்து ₹78.57 ஆகவும், டீசல் 12 காசு உயர்ந்து ₹71.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் போக்கால் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தை சற்று பாதிப்பை அடைந்து வருகிறது. 2015ம் ஆண்டில் ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தபோது ஈரானுக்கும், அமெரிக்கா ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்டது. இதில், அணுசக்தியை ஆக்கப்பூர்வ வழிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவதாக ஈரான் உறுதி அளித்திருந்தது. இதன்பிறகு, அந்த நாட்டின் மீதான பொருளாதார தடைகளை அமெரிக்கா விலக்கிக் கொண்டது. ஆனால், டொனால்ட் டிரம்ப் அதிபரான பிறகு இந்த ஒப்பந்தத்தை விமர்சித்தார். இதையடுத்து ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த மே மாதம் விலகியது. அதன்பிறகு, ஈரானுக்கு சிக்கலை அதிகரிக்கச் செய்யும் வகையில், அந்த நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் நவம்பர் 4ம் தேதிக்குள் நிறுத்த வேண்டும் என நிர்பந்தப்படுத்தி வருகிறது. இதை மறுக்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என எச்சரித்து வருகிறது. பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகள் அமைப்பில் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளராக ஈரான் உள்ளது. இங்கிருந்து நாள் ஒன்றுக்கு 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் உலக நாடுகளுக்கு ஏற்றுதி செய்யப்பட்டு வருகிறது. கச்சா எண்ணெய் விலையை சரிவில் இருந்து காப்பாற்ற எண்ணெய் உற்பத்தியை குறைக்க ஒபெக் அமைப்பில் உள்ள நாடுகள் முடிவு செய்திருந்தன. கடந்த மாதம் நாள் ஒன்றுக்கு 10 லட்சம் பேரல் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்திருந்தன. ஜூலையில் இருந்து இந்த உற்பத்தி துவங்கியிருக்க வேண்டும். இதனால் கச்சா எண்ணெய் விலை குறையும் என எதிர்பார்த்திருந்தோம். இதற்காக ஒரு வாரமாக விலை மாற்றம் எதுவும் செய்யவில்லை. ஆனால், ஈரான் விவகாரத்தால் இது பாதிக்கப்பட்டு விட்டது என இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் தலைவர் சஞ்சீவ் சிங் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.