: ஈரோடு ஜவுளி சந்தையில் ஓணம் பண்டிகை வியாபாரம் அடியோடு பாதிக்கப்பட்ட நிலையில் வெள்ள நிவாரண வியாபாரம் அமோகமாக நடைபெற்றது. கேரளா மக்களால் விமரிசையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகைக்காக ஈரோடு ஜவுளி சந்தையில் இருந்து மொத்த வியாபாரிகள் அதிக அளவில் ஜவுளிகளை கொள்முதல் செய்வது வழக்கம். பண்டிகைக்கு ஒரு மாதகாலத்திற்கு முன்பாகவே ஈரோடு ஜவுளி சந்தையில் கேரள வியாபாரிகளின் வருகை தொடங்கிவிடும். இந்தாண்டு ஓணம் பண்டிகை வருகிற 25ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் கேரள மாநிலத்தை புரட்டி போட்ட மழை வெள்ள பாதிப்பால் ஜவுளி கொள்முதல் செய்ய ஈரோடு ஜவுளி சந்தைக்கு கேரள மாநில மொத்த வியாபாரிகள் யாரும் வராததால் நேற்று நடைபெற்ற ஜவுளி சந்தையில் ஓணம் வியாபாரம் அடியோடு பாதிக்கப்பட்டது. ஆனால் அதே வேளையில் வெள்ள நிவாரணத்திற்கு கேரளாவுக்கு உடைமைகள் அனுப்பி வைப்பதற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுநல அமைப்புகள் அதிக அளவில் ஜவுளி சந்தையில் ஜவுளிகளை கொள்முதல் செய்தனர். குறிப்பாக பெட்ஷீட், சட்டை, சேலை, லுங்கி, நைட்டி, உள்ளாடைகள் உள்ளிட்டவைகளை அதிக அளவில் கொள்முதல் செய்தனர். இது குறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் தரப்பில் கூறியதாவது, லாரி ஸ்டிரைக் காரணமாக ஆடிப்பண்டிகை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஓணம் பண்டிகை கை கொடுக்கும் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால் கேரளாவில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் அம்மாநில மொத்த வியாபாரிகள் ஜவுளிகளை கொள்முதல் செய்ய யாரும் வரவில்லை. ஏற்கனவே ஆர்டர் கொடுத்திருந்த கேரள வியாபாரிகளும் அங்கு வெள்ளம் வடியாததால் தற்போது ரத்து செய்து விட்டனர்.இந்நிலையில் கேரளா மக்களுக்கு தமிழகத்தில் இருந்து நிவாரண பொருட்களை அனுப்பி வைப்பதற்காக ஜவுளி சந்தையில் இருந்து பெட்ஷீட், லுங்கி, நைட்டி, சேலைகள் மற்றும் குழந்தைகளுக்கான ரெடிமேடு ரகங்கள், உள்ளாடைகள் உள்ளிட்டவைகள் அதிக அளவில் தன்னார்வ அமைப்புகள் சார்பில் கொள்முதல் செய்துள்ளனர். மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்ட போதிலும் ஜவுளி சந்தையில் வழக்கத்தைவிட சில்லரை விற்பனை இருமடங்கு அதிகரித்திருந்தது. இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.