தீபாவளி பண்டிகைக்காக சிவகாசியில் அனைத்து வகையான பட்டாசுகள் அடங்கிய கிப்ட் பாக்ஸ் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. எண்ணிக்கை, தரத்திற்கேற்ப ₹350 முதல் ₹3 ஆயிரம் வரை பாக்ஸ்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒன்றரை மாதத்துக்கு மேல் உள்ள நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ‘குட்டி ஜப்பான்’ என அழைக்கப்படும் சிவகாசியில் பட்டாசு தயாரிக்கும் பணியும், அவற்றை வெளிமாநிலங்களுக்கு அனுப்பும் பணியும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. குறிப்பாக, பட்டாசு கிப்ட் பாக்ஸ் தயாரிக்கும் பணியில் முன்னணி கம்பெனிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அனைத்து வகையான பட்டாசுகள் அடங்கிய கிப்ட் பாக்ஸ்களுக்கு ஆண்டுதோறும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் ஆயுத பூஜை, கொல்கத்தாவில் துர்கா பூஜை, கர்நாடகாவில் தசரா என நாடு முழுவதும் விழாக்கள் நடைபெற உள்ளது. ஆயுதபூஜை முதல் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் பட்டாசு விற்பனை சூடுபிடிக்க ஆரம்பிக்கும். இந்தாண்டு கிப்ட் பாக்ஸ்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி பெரிய மற்றும் சிறிய பட்டாசு கம்பெனிகள் 33 வகையான கிப்ட் பாக்ஸ்களை தயாரித்து, ரகங்களுக்கு ஏற்ப ₹350 முதல் ₹3 ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்துள்ளன. சில கம்பெனிகள் பொதுமக்களை கவரும் வகையில், புதிய ரக பட்டாசுகளை தயாரித்து சந்தைக்கு அனுப்பியுள்ளன.பட்டாசு வியாபாரி கணேசன் கூறுகையில், ‘‘தீபாவளி பண்டிகையையொட்டி சிவகாசியில் பட்டாசு கிப்ட் பாக்ஸ் தயாரிக்கும் பணி விறுவிறுப்படைந்துள்ளது. 17 முதல் 21 ரக பட்டாசுகள் அடங்கிய சின்ன கிப்ட் பாக்ஸ் ₹350 முதல் ₹400 வரையும், 23 முதல் 33 ரகங்கள் அடங்கிய கிப்ட் பாக்ஸ் ₹600 முதல் ₹900 வரையும், 33 முதல் 37 ரகங்கள் அடங்கிய கிப்ட் பாக்ஸ் ₹950 முதல் ₹1,300 வரையும், 33 முதல் 37 ரகங்கள் அடங்கிய விஐபி கிப்ட் பாக்ஸ் ₹1,500 முதல் ₹3 ஆயிரம் வரையும் விலை நிர்ணயம் செய்து கம்பெனிகள் விற்பனைக்கு அனுப்புகின்றன. கம்பெனிகளுக்கு ஏற்ப விலையில் கொஞ்சம் மாறுதல் இருக்கும்,’’ என்றார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.