கரூர் பசுபதீஸ்வரா நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 வணிகவியல் பாட ஆசிரியர்களுக்கான புத்தாக்கப்பயிற்சியும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் கணக்குப்பதிவியல் பாடத்திற்கான ’வெற்றிகொடிகட்டு +2 கணக்குப்பதிவியல் பாட வீடியோ மெட்டிரியல்’ (டிவிடி)வெளியிடப்பட்டது.
இந்த வீடியோ மெட்டிரியலை தயாரித்து வழங்கிவரும் கரூர் மாவட்டம் ஈசநத்தம் அரசுமேல்நிலைப்பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் கார்த்திகேயன் இது குறித்து நம்மிடையே பேசுகையில்..,
"கடந்த ஐந்து ஆண்டுகளாக வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியல் பாடங்களில்
100% தேர்ச்சியும், பல மாணவர்களை 200க்கு 200 மதிப்பெண்கள் பெறவைத்தும் வருகிறேன்.முன்பு கோடைபண்பலை வானொலியில் அறிவிப்பாளராகவும், தூர்தர்ஷனின் பொதிகை தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராகவும் பணியாற்றிய அனுபவத்தோடு புதிய தொழில்நுட்பங்களோடு புதிய அணுகுமுறைகளைக் கையாண்டு பாடங்களை நடத்திவருகிறேன்.
எனது மாணவர்களுக்கு வணிகவியல் பாடம் தொடர்பாக எனது குரலில் பேசி நானே தயாரித்த வீடியோக்கள் மூலமாக பாடங்களை நடத்தி
வந்தேன். தேர்ச்சி விழுக்காட்டிலும் நல்ல முன்னேற்றம் கண்டேன்.அதை ஒரே டிவிடி தொகுப்பாக்கி அனைத்து அரசு பள்ளி மாணவர்களும் பயன்பெறும் வண்ணம் இலவசமாக வழங்கவேண்டும் என்ற எண்ணத்தில் பாடப்பொருளை உள்ளடக்கிய இந்த டிவிடியை சேவை நோக்கோடு வழங்கி வருகிறேன்.
பாடப்பொருளை படமாக பார்ப்பதால் படிப்பதில் மாணவர்களின் ஆர்வம் கூடும் என்பதோடு பாடத்தையும் அவர்கள் எளிதாக புரிந்து கொள்வார்கள் என்பது எனது பள்ளி மாணவர்கள் மூலம் கிடைத்த அனுபவம்.
கடந்த ஆண்டு +2 வணிகவியல் பாடத்திற்கு வீடியோ மெட்டிரியல் தயாரித்து அதை அனைத்து அரசு மற்றும் பார்வையற்றோர் பயிலும் பள்ளிகளுக்கும் வழங்கினேன். மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்ததாக சொன்னார்கள். இதன் மூலம் மாணவர்கள் அதிக மதிப்பெண்களும், அதிக தேர்ச்சி விழுக்காடும் அடைந்துள்ளதாக ஆசிரிய பெருமக்கள் தெரிவித்துள்ளனர்.குற்ப்பாக பார்வைதிறனற்ற மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினியிலும் இந்த வீடியோ மெட்டிரியல் இணைத்து வழங்கப்பட்டு வருகிறது.
அதே போல இந்த ஆண்டும் +2 கணக்குப்பதிவியல் பாடத்திற்கும் வீடியோ
மெட்டிரியல் தயாரித்து வெளியிட்டுள்ளேன். அனைத்து அரசுபள்ளி மாணவர்களும் அதிக மதிப்பெண்கள் பெறவேண்டும் என்பதற்காகவே இந்த டிவிடியை எனது சொந்த செலவில் தயாரித்து வழங்கிவருகிறேன். மேலும் இதில் தேர்வுக்கு தயாராகும் விதம் குறித்து முனைவர்.வெ.இறையன்பு
ஐ.ஏ.எஸ் அவர்களின் பிரத்யேகமான வீடியோ உரையையும் இணைத்து வெளியிட்டுள்ளேன்.இந்த டிவிடி
தேவைப்படுவோர் 9943149788 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் அல்லது
karthikeyancommerce என்கிற Youtube சேனலை
Subscribe செய்து, இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.”என்றார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.